முஸ்லிம்களை  தாக்கும் உ.பி போலீஸ் – இந்தியாவை உலுக்கிய காணொளி

காவல்துறை தாக்கும் காணொளியில் இருக்கும் சிலரை அடையாளம் கண்டு பிபிசி அவர்களின் குடும்பத்தினரோடு பேசியுள்ளது
போலீஸார் தாக்கும் காணொளியில் இடம்பெற்றவர்களில் சிலரை அடையாளம் கண்டு பிபிசி அவர்களின் குடும்பத்தினரோடு பேசியுள்ளது

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலரை காவல்துறையினர் லத்தியால் கடுமையாகத் தாக்கும் காணொளி ஒன்று லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகியிருக்கிறது.

அதை அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து, அந்தக் கொடூரமான செயலை, அந்த ஆண்களுக்கு வழங்கப்பட்ட “பரிசு” என்று பாராட்டினார்.

“இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாக்குதலுக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினர், அவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும்,” என்றும் கூறுகின்றனர்.

“அவர் என் தம்பி. அவரை தொடர்ந்து கடுமையாக அடிக்கிறார்கள், அவர் வலியால் கத்துகிறார்,” என்று ஸெபா, தனது தம்பி சயீஃபின் வேதனையான காணொளியை தன் கையிலிருக்கும் கைபேசியில் பார்த்தபடி கண்ணீருடன் உடைந்து, கைகள் நடுங்கக் கூறினார்.

உத்தர பிரதேச நகரமான சஹாரன்பூரில் உள்ள தனது வீட்டில் உறவினர்கள் ஆறுதல் கூறியபடி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையே உட்கார்ந்திருந்த ஸெபா, “என்னால் இதைப் பார்க்கக்கூட முடியவில்லை. அவர் மிகவும் மோசமாகத் தாக்கப்படுகிறார்,” என்று கூறுகிறார்.

ஸெபாவின் சகோதரர் உட்பட காவலில் உள்ள இஸ்லாமிய ஆண்களை இரண்டு காவலர்கள் அடிக்கும் துன்பகரமான காட்சிகளை அந்தக் காணொளி காட்டுகிறது.

அதிகாரிகள் லத்திகளால் ஒவ்வோர் அடி அடிக்கும்போதும் அவர்கள் அலறும் சத்தம் காணொளியில் கேட்கிறது.

அடி வாங்கும்போது, பச்சை நிற சட்டை அணிந்த ஒருவர் கைகளை மடக்கி பிரார்த்தனை செய்தார். வெள்ளை நிற ஆடை அணிந்துள்ள சயீஃப் சரணடைவதைப் போல் கைகளைத் தூக்குவதைக் காணலாம்.

“போராட்டங்களில் பங்கெடுக்கவே இல்லை”

24 வயதான சயீஃப், கடந்த வாரம் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட டஜன் கணக்கான இஸ்லாமிய ஆண்களில் ஒருவர்.

ஆளும் இந்து தேசியவாத பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் முகமது நபி பற்றிய ஆவேசமான கருத்துகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில், பாஜக நூபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது. மேலும், எந்த மதமாக இருப்பினும் அதை அவமதிப்பதை எதிர்ப்பதாகக் கூறியது.

சயீஃபின் அக்கா ஸெபா
ஸெபா, தனது தம்பி சயீஃபின் வேதனையான காணொளியை தன் கையிலிருக்கும் கைபேசியில் பார்த்தப்படி, கண்ணீருடன் உடைந்து, கைகள் நடுங்கப் பேசினார்
சஹாரன்பூரில் நடந்த போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்தன. நகரத்திலுள்ள மசூதியிலிருந்து அதற்கு அடுத்து இருந்த கடைகளைக் கடந்து மக்கள் கூட்டம் அணிவகுத்தது.

பதற்றங்கள் அதிகரித்ததால், இந்தியாவின் பெரும்பான்மையான இந்துக்களுக்குச் சொந்தமான சில கடைகள் தாக்கப்பட்டன. மேலும், இரண்டு வணிகர்கள் சிறு காயங்களுக்கு ஆளானார்கள். கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகள் தடியடி நடத்தினர்.

காவல்துறை ஆவணங்கள், சயீஃப் மற்றும் 30 பேர் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் ஒரு பொது ஊழியரைத் தடுக்க தானாக முன்வந்து காயப்படுத்தியதாகவும் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் குற்றம் சாட்டுகிறது.

அட்டை விற்று சராசரியான வாழ்க்கையை வாழும் சயீஃபின் குடும்பம், அவர் போராட்டங்களில் பங்கெடுக்கவே இருக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

24 வயதான சயீஃப்
24 வயதான சயீஃப், கடந்த வாரம் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட டஜன் கணக்கான இஸ்லாமிய ஆண்களில் ஒருவர்

அவர் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி, மாலை 5 மணியளவில், நண்பருக்காக பேருந்து டிக்கெட் எடுக்க வீட்டிலிருந்து சென்றார். அப்போது, அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சஹாரன்பூரில் இருக்கும் கோத்வாலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸெபா அங்கு அவரைச் சந்தித்தபோது, அவர் தன் சகோதரனின் உடலில் காயங்களைக் கண்டதாகவும் அவரால் உட்காரக்கூட முடியவில்லை என்றும் கூறினார்.

காவல்துறையின் மிருகத்தனத்தை தெளிவாகக் காட்டும் இந்தக் காணொளி, பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஷலப் திரிபாதி, “கிளர்ச்சியாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்ட பரிசு” என்று குறிப்பிட்டு பகிர்ந்த பிறகு, வைரலானது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவரான திரிபாதி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகர்.

கட்சி நிர்வாகிகள், பாஜக அரசாங்கத்திலுள்ள எவரிடமிருந்தும் இதற்கு எந்தக் கண்டனமும் வரவில்லை.

காவல்துறையின் அறிக்கை

2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற சூழல் அதிகரித்து வருவதாகவும் வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்து, நாட்டின் சிறுபான்மை இஸ்லாமியர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

சஹாரன்பூரில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட பின்னர், அவர்களுடைய உறவினர்கள் போலீஸ் காவலில் தாக்கப்பட்டதாக அரை டஜன் இஸ்லாமிய குடும்பங்களின் சாட்சியங்களை பிபிசி சேகரித்துள்ளது.

காவல்துறையினர் வன்முறையைப் பயன்படுத்துவதைக் காட்டும் காணொளிகளில் இருந்த அவர்களை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மற்ற காட்சிகளில் ஆண்களை வேறோர் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு வேனில் செல்வதைக் காணலாம். இந்தப் படத்தில் கோத்வாலி காவல் நிலையத்திற்கான அடையாளம் தெளிவாகத் தெரியும்.

வெள்ளை நிற ஆடை அணிந்துள்ள சயீஃப்
வெள்ளை நிற ஆடை அணிந்துள்ள சயீஃப் உட்பட இஸ்லாமியர்கள் சஹாரன்பூர் காவல்நிலையம் முன்பாக நிற்கின்றனர்

காவல்துறையின் அறிக்கையும் காவல் நிலையத்தை மேற்கோள் காட்டியுள்ளது. இருந்தபோதிலும், உள்ளூர் காவல்துறையினர் இந்த சம்பவம் அங்கு நடக்கவில்லை என்று மறுத்தனர்.

“சஹாரன்பூரில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இரண்டு மூன்று காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஸ்லோ மோஷனில் ஒரு காணொளியைப் பார்த்தால், வேறு சில மாவட்டங்களின் பெயரைக் காணலாம்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஆகாஷ் தோமர் பிபிசியிடம் கூறினார்.

காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து வருவதாகவும் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

காணொளியில் காணப்பட்ட மற்ற ஆண்களின் குடும்பத்தினர், அவர்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்காகவும் அவர்களைப் பார்க்கவும் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

ஃபமிதாவின் 19 வயதான மகன் சுபான், கைது செய்யப்பட்ட தனது நண்பன் ஆசிஃப் என்ன ஆனார் என்பதைத் தெரிந்துகொள்ளச் சென்றபோது, அவரும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார்.

கோத்வாலி நகர் காவல் நிலையம்
கைது செய்யப்பட்டவர்கள் கொண்டு செல்லப்பட்ட கோத்வாலி காவல் நிலையம்

வெளிர் மஞ்சள் நிற உடையில், ஒரு காவலர் தனது திசையில் ஒரு தடியால் அடிக்கும்போது சுபான் விழுவதைக் காணொளியில் பார்க்கலாம். வெள்ளிக்கிழமை, சுபான் போராட்டம் நடந்த பகுதியிலுள்ள குறிப்பிட்ட மசூதிக்குக் கூடச் செல்லவில்லை, அங்கு நடந்த போராட்டத்திலும் பங்கெடுக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

அதுகுறித்துப் பேசியபோது, “என் மகன் இரக்கமின்றி தாக்கப்பட்டான்,” என்று ஃபமிதா கதறி அழுதார்.

வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி 84 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகள் என கருதப்படும் சந்தேக நபர்களை மட்டுமே கைது செய்கிறோம் என்று காவல் கண்காணிப்பாளர் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

“நாங்கள் ஒருவரைக் கைது செய்யும்போது, முதலில் வன்முறை போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட காணொளியைக் காட்டுகிறோம். பிறகு தான் கைது செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.

ஆனால் இவரது கூற்றை, போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சிலரிடமிருந்து கிடைத்த தகவல்களுடன் ஒப்பிடும்போது அதிகாரியின் விளக்கத்தில் முரண்பாடு காணப்படுகிறது.

உருளும் புல்டோசர்கள்

காவல் நிலையத்திலிருந்து நகரம் முழுவதும், சட்டத்தின் வலிமை வேறு வழிகளில் காட்டப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இஸ்லாமிய ஆண்களின் வீடுகளின் சில பகுதிகளை புல்டோசர்கள் இடித்துள்ளன.

லட்சக்கணக்கான இந்தியர்கள் முறையான திட்டமிடல் அனுமதியின்றி தற்காலிக வீடுகளில் வாழ்கிறார்கள். ஆனால், இதை தண்டனைக்கான வழிமுறையாகப் பயன்படுத்துவது, பாஜகவின் பொதுவான வழிமுறைகளில் ஒன்றாகிவிட்டது.

சமீபத்திய போராட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் உத்தரவுக்கு உயர்மட்ட அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டத்தை மீறுவோர் மீது புல்டோசர் நடவடிக்கை தொடரும் என்று ட்வீட் செய்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

கடந்த சனிக்கிழமை மதியம், முஸ்கானுடைய வீட்டின் முன் கேட்டை ஒருவர் இடிக்கத் தொடங்கினார்.

அங்கு வந்த காவல்துறையினர், முஸ்கானின் சகோதரரின் படத்தைக் காட்டி, அங்கு வசிக்கிறாரா என்று கேட்டனர். 17 வயதான இளைஞர் அதற்கு முந்தைய நாளில் கைது செய்யப்பட்டிருந்தார்.

“என் தந்தை அது தனது மகன் தான் என்பதை உறுதி செய்ததோடு, என்ன விஷயம் என்று கேட்டார். அவர்கள் பதிலளிக்காமல் புல்டோசரை பயன்படுத்தத் தொடங்கினார்கள்,” என்று கூறினார் முஸ்கான்.

வெள்ளிக்கிழமையன்று வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக, கூட்டத்தினரிடையே முஸ்கானின் சகோதரர் உரை நிகழ்த்துவதாக ஒரு காணொளியை பிபிசிக்கு காட்டினார்.

அதில் அவர் கூடியிருந்தவர்களிடம், “இந்த நாட்டு இஸ்லாமியர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இஸ்லாமியர் எழும்போதெல்லாம், கோபத்துடன் எழுந்தான் என்பதற்கு வரலாறு சாட்சி,” என்று அவர் கூறுகிறார்.

“அவன் அழிவை ஏற்படுத்துபவன் இல்லை. இவை அனைத்துமே பொய்,” என்று முஸ்கான் தனது சகோதரருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக வீடுகள் கட்டப்பட்டதாக நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

“நாங்கள் விசாரித்தபோது, அவருடைய குடும்பம் உறவினர் ஒருவரின் அங்கீகரிக்கப்படாத வீட்டில் வசித்து வருவதைக் கண்டறிந்தோம். முனிசிபல் குழு போலீஸ் பாதுகாப்புடன் சென்று நடவடிக்கை எடுத்தது. கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவோருக்கு எதிராக சட்ட விரோதமாக ஏதும் நடந்தால், புல்டோசர் உருளும்,” என்று பிபிசியிடம் கூறினார் மூத்த காவல்துறை அதிகாரி ராஜேஷ் குமார்.

புல்டோசர் நடவடிக்கை அனைத்தும் சட்டப்படி செய்யப்பட்டது, சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யப்படவில்லை என்று யோகி ஆதித்யநாத்தின் ஆலோசகரான நவ்நீஹ் சேகல் பிபிசியிடம் கூறினார்.

முஸ்கான் மற்றும் அவருடைய 17 வயது சகோதரரின் பாதி இடிக்கப்பட்ட வீடு
முஸ்கான் மற்றும் அவருடைய 17 வயது சகோதரரின் பாதி இடிக்கப்பட்ட வீடு

முன்னாள் நீதிபதிகள் மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் உட்பட இந்தியாவின் உயர்மட்ட சட்ட வல்லுநர்கள் குழு, இந்த சமீபத்திய போலீஸ் தடியடி மற்றும் புல்டோசர்களின் தேவையற்ற பயன்பாடு குறித்து நாட்டின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அவர்களின் கடிதம், ஆதித்யநாத், “போராட்டக்காரர்களை மிருகத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் சித்ரவதை செய்ய” காவல்துறைக்கு தைரியம் அளித்ததாகக் குற்றம் சாட்டுகிறது. மேலும், இந்த சமீபத்திய நடவடிக்கைகள் “தேசத்தின் மனசாட்சியை உலுக்குவதாக” கூறுகிறது.

மேலும், “ஆளும் நிர்வாகத்தின் இத்தகைய மிருகத்தனமான ஒடுக்குமுறை, சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் சீர்குலைப்பது, குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகும். மேலும், அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளைக் கேலிக்கூத்தாக்குகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச உரிமைகள் குழுவான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்திய அரசாங்கம் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளையும் அடக்குகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது.

“இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் துணிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து கொடூரமாக ஒடுக்குகிறது.

சர்வதேச உரிமைகள் குழுவான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்திய அரசாங்கம் எந்த விதமான கருத்து வேறுபாடுகளையும் அடக்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது: “இந்திய அரசாங்கம் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் துணிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, கொடூரமாக ஒடுக்குகிறது,” என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா வாரியத்தின் தலைவர் ஆகர் படேல் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

அரிசி வியாபாரி டட்லி  கருத்துக்கள்

Next Story

மேற்குகரை பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பெண் நிருபர்