மாடர்ன் லவ் சென்னை: – விமர்சனம்

‘மாடர்ன் லவ் சென்னை’ அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. ஆந்தாலஜி பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இது, 6 பாகங்களைக் கொண்டிருக்கிறது.

பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, ராஜூமுருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்‌ஷய் சுந்தர் ஆகிய இயக்குநர்கள் நியூயார்க் டைம்ஸில் வெளியான ‘மாடர்ன் லவ்’ கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆறு பகுதிகளையும் இயக்கியிருக்கிறார்கள்.

மாடர்ன் லவ் சென்னை

இளையராஜா மூன்று பாகங்களுக்கு இசையமைத்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ்குமார், ஷான் ரோல்டன் ஆகியோர் தலா ஒரு பாகத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

’மாடர்ன் லவ் சென்னை’ ஆந்தாலஜியில் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி சக்திவேல், அக்‌ஷய் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் படங்கள் சிறப்பான கதையமைப்பைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டு இந்தியா டுடே விமர்சனம் வெளியிட்டுள்ளது.

முதல் பாகமான ‘லாலாகுண்டா பொம்மைகள்’ படத்தை ராஜூமுருகன் இயக்கியிருக்கிறார். ஷோபா எனும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண் சந்திக்கும் காதல் பிரச்னைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

காதல் மட்டுமின்றி, கருக்கலைப்பையும் சந்தித்திருக்கும் பெண்ணின் உடல் மற்றும் மனவலிகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவள் அடையும் இன்னொரு காதலால் அனைத்து வலிகளும் நீக்கமடையும் என ஒரு சாமியாடி சொல்ல, அதன்பிறகு பானிபூரி வியாபாரியான நாதுராம் உடன் ஷோபாவிற்கு மீண்டும் காதல் மலர்கிறது.

அந்த காதல் ஷோபாவை குணப்படுத்தியதா இல்லையா என்பதை ‘லாலகுண்டா பொம்மைகள்’ படத்தில் இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.

மேலும், இது பெண்களால் ஆண்களுடன் வாழ முடியாது, ஆண்கள் இல்லாமலும் வாழ முடியாது என்பதை மையப்படுத்தியிருக்கிறது. நடிகர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் கதை அவ்வளவாக ஈர்க்கவில்லை எனவும் இந்தியா டுடே விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாடர்ன் லவ் சென்னை

பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் ‘இமைகள்’, நித்யா மற்றும் தேவி ஆகிய இரு நடுத்தர வர்க்கத்தினருக்கு இடையிலான காதலின் மற்றொரு அம்சத்தைப் பேசுகிறது.

கல்லூரியில் அவர்கள் காதலிக்கும்போது, தேவி நித்யாவிடம் தனக்கு கண் பார்வைக் குறைபாடு இருப்பதாகவும், காலப்போக்கில் கண் பார்வையை மொத்தமாக இழக்க நேரிடும் என்றும் கூறுகிறாள்.

கண்பார்வை இழப்பைச் சமாளித்து தன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய தேவியின் போராட்டங்களோடு, திருமணத்தின் நுணுக்கங்களையும் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

வாழ்க்கைப் போராட்டத்தில் தன் சுயத்தை இழந்து தவிக்கும் தேவிக்கு, அதை நாயகன் நித்யா எப்படி மீட்டெடுக்க உதவுகிறான் என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், பேருந்து நிறுத்தத்தில் பானு அழும் காட்சியும், நித்யாவை அவனது கால் விரல்களால் அடையாளம் காணும் காட்சியும் மனதைத் தொடுகிறது.

மேலும் உங்கள் காதலரின் ஒவ்வோர் அங்குலத்தையும் உடல்ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சிரீதியாகவும் மனரீதியாகவும் நீங்கள் எப்படி உணர்ந்துகொள்கிறீர்கள் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

‘மாடர்ன் லவ் சென்னை’ ஆந்தாலஜியில் ‘இமைகள்’ அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று இந்தியா டுடே குறிப்பிட்டிருக்கிறது.

ஒரு சிறு நகரத்தில் வசிக்கும் ஜாஸ்மின் என்ற மனச்சோர்வடைந்த இளம்பெண்ணின் காதலை இயக்குனர் அக்‌ஷய் சுந்தரின் `மார்கழி` அழகியலோடு பதிவு செய்திருக்கிறது.

பெற்றோரின் விவாகரத்தை சமாளிக்கும் அவளுக்கு, இசையின் மீது பேரார்வம். இந்த நிலையில்தான் ஜாஸ்மின், மில்டனை பார்வையாளர்களின் பதின்ம காதலை நினைவுப்படுத்த வைக்கிறது.

இதில் நடித்துள்ள சஞ்சுலா மற்றும் சூ ஆகியோர் கதாபாத்திரத்திற்கு உண்மைத்தன்மையை அதிகரிக்கும் வகையில், குறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்தியா டுடே பாராட்டியிருக்கிறது.

‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியிருக்கிறார். ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.Prime Video

பிரதான கதாபாத்திரமான மல்லிகாவின் பதின் பருவ காதல் தேடல்களைச் சுற்றியே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களால் பாதிக்கப்படும் நாயகியின் காதல் குறித்த எண்ணம், பல தருணங்களில் தோல்வியையே காண்கிறது.

ரிது வர்மாவின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், படத்தின் கதை மலையாள திரைப்படமான பிரேமத்தை நினைவுபடுத்துவதாக விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ படத்தில் பிரதான கதாபாத்திரங்களான ரவி, ரோகிணி ஆகிய இருவரும் மெட்ரோவில் சந்தித்து, பிறகு காதலிக்க தொடங்குகிறார்கள்.

மாடர்ன் லவ் சென்னை

ஒரு கட்டத்தில், ரவி தனது மனைவி ரேவதியிடம் தனது புதிய காதலைப் பற்றிச் சொல்ல முடிவு செய்கிறார். அதன் பிறகான அவர்களின் உரையாடலைச் சுற்றியே முழுப் படமும் நகர்கிறது.

இன்றைய உலகில் ‘நான்’ என்பதில் இருந்து ‘நமக்கு’ என்பதை நோக்கி நகரும் கதையில், விஜயலட்சுமியும், ரம்யா நம்பீசனும் வசீகரிக்கிறார்கள். இயக்குநர் பாரதிராஜா நவீன உறவுகளை காலத்திற்கு ஏற்ப படமாக்கியிருக்கிறார்.

6 பகுதிகளைக் கொண்ட ‘மாடர்ன் லவ் சென்னை’ ஆந்தாலஜியில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் ‘நினைவோ ஒரு பறவை’ மிகச் சிறந்த கதை என குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறது இந்தியா டுடே.

படத்தைப் பார்க்கத் தொடங்கியவுடன், சில பகுதிகள் இருளில் படமாக்கப்பட்டு இருப்பதால், திரையின் ஒளிர்தன்மையை சரிசெய்ய வேண்டாம் என்று இயக்குனர் எச்சரிக்கிறார்.

’சூப்பர் டீலக்ஸ்’ இயக்குனரின் ஒரு மணி நேர மினி திரைப்படத்திற்கான மனநிலையை இது உண்மையிலேயே ஏற்படுத்துகிறது. சாம் மற்றும் இயக்குநராக முயற்சிக்கும் கே ஆகியோர் தங்கள் பாலுணர்வு மற்றும் உடலியல் மூலம் காதலைக் கண்டறிந்து இறுதியில் மனவேதனைக்குள்ளாகும் கதையமைப்பை இந்தப் படம் கொண்டிருக்கிறது.

உண்மையையும் கற்பனையையும் வேறுபடுத்துவது கடினமாக இருந்தாலும், ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் ஆச்சர்யப்படும் திரைக்கதை அமைப்பு ரசிக்க வைப்பதாகக் குறிப்பிட்டு இந்தியா டுடே விமர்சனம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

மாடர்ன் லவ் சென்னை

மேலும், இளையராஜாவின் இசை அவர் இசையமைத்துள்ள கதைக்களங்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று சிலாகிக்க வைப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 படங்களைக் கொண்டுள்ள இந்த ஆந்தாலஜியில் ‘இமைகள்’, ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி’ எனும் இரண்டு படங்களுக்கு மட்டுமே விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது ‘இந்து தமிழ் திசை’.

‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ என அழுத்தமான படங்களை இயக்கி, பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பாலாஜி சக்திவேல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநராக களமிறங்கியிருக்கும் படம் ‘இமைகள்’.

கண் பார்வை கோளாறு என்பதை ஒரே விபத்தில் நடக்கும் பிரச்னையாகச் சொல்லி சோகத்தைப் பிழியாமல் இயல்பான காட்சிகளின் மூலம் நகர்த்தியுள்ளதாக இந்து தமிழ் திசை தெரிவித்துள்ளது.

வெறும் 30 நிமிடங்கள்தான் படத்தின் நீளம் என்றாலும் 15 நிமிடங்களுக்குப் பிறகு, ‘இமைகள்’ படத்தின் மையக் கருவே தொடங்குகிறது. ஆரம்பத்தில் வரும் தேவைற்ற காதல் காட்சிகளை வெட்டியிருந்தால் இதுவொரு 10 நிமிட குறும்படமாக மாறியிருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசையும், ஜீவா சங்கரின் ஒளிப்பதிவும் கச்சிதம்.

சற்று பிசகினாலும் ஒரு மெகா சீரியல் பார்க்கும் உணர்வைத் தந்துவிடக் கூடிய ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டு நுணுக்கமான காட்சிகளின் மூலம் ஓர் உணர்வுப்பூர்வமான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல் என இந்து தமிழ் திசை விமர்சனத்தில் பதிவிட்டிருக்கிறது.

சினிமாவில் குறிப்பாக தமிழ் காதல் படங்களில் வரும் லூசு ஹீரோயின் போல தன்னைக் கற்பனை செய்துகொண்டு நாயகி தனக்கான காதலைத் தேடுகிறார். பள்ளி வாழ்க்கையில் ஒரு காதல், கல்லூரி வாழ்க்கையில் ஒரு காதல் என அவரது அடுத்தடுத்த காதல்கள் தோல்வியை தழுவுகின்றன.

இறுதியில் தனது லட்சியத்தை நாயகி அடைந்தாரா என்பதற்கான விடையே ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி’ என விமர்சனம் எழுதப்பட்டு இருக்கிறது.

காதலை தேடித் திரியும் பெண்ணின் பார்வையிலிருந்து பேசும் ‘ஓம் ஷாந்தி ஒஷானா’ டைப் கதை. எனினும் ஒரு திரைப்படத்திற்குத் தேவையான அழுத்தமான பாத்திரப் படைப்புகளோ, திரைக்கதையோ இல்லாமல் தனித் தனி காட்சிகளின் தொகுப்பு போல நகர்கிறது.

பலவீனமான காட்சியமைப்புகளால் பல இடங்களில் கைகள் ஃபார்வேர்டு பட்டனைத் தேடுகின்றன. படம் முழுக்க வரும் கௌதம் மேனன் படங்கள் உள்ளிட்ட பல படங்களின் ரெஃபரென்ஸ் ஐடியாக்கள் வித்தியாசமான முயற்சி என்றாலும், அவை படத்தின் ஓட்டத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.

மாடர்ன் லவ் சென்னை

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு காதல் தோல்வி பாடல்கள் இல்லாதது குறித்து நாயகி பேசுவது, காதலியிடம் நீங்க என்ன ஆளுங்க என்று காதலன் கேட்பது போன்ற ஒரு சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ஒரு முழு படமாக ஈர்க்கத் தவறுகிறது ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி’ என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

’மாடர்ன் லவ் சென்னை’ ஒரு சிறப்பான சிக்ஸர் எனக் குறிப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் எழுதியிருக்கிறது.

வழக்கத்திற்கு மாறான காதல் கதைகளை எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் இதில் இடம்பெற்றிருக்கும் படங்கள் ஆச்சர்யமளிப்பதாக விமர்சனம் வழங்கியிருக்கிறது.

மேலும், தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் ‘நினைவோ ஒரு பறவை’ படத்தைத் தவிர மற்ற படங்கள் பிரகாசமாக இருக்கின்றன. ’காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ திரைப்படம் ஜாலியானதாகவும், ‘இமைகள்’ உணர்ச்சிகரமானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

தியாகராஜா குமாரராஜாவின் ‘நினைவோ ஒரு பறவை’ களங்கமற்ற ஒளியைப் போன்ற காதலைப் பேசுகிறது. நவீன காதல் என்பதை மையக்கருவாக கொண்டிருந்தாலும், அந்தந்த கதை சொல்லப்பட்ட விதமும், அந்த அர்ப்பணிப்பும் வெகுவாக ஈர்ப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

Previous Story

அரசுக்குள் நடப்பவை சண்டையா நாடகமா!

Next Story

உளவுத் துறை கண்டுபிடிப்பு!