மலேசிய: முன்னாள் பிரதமர்  யாசின் ஊழல் வழக்கில் கைது 

மலேசிய முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.

பண மோசடி விவகாரம் தொடர்பாக அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட இருந்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று கைதானார்.

மலேசியாவின் பூமி புத்திரர்களுக்கான Jana Wibawa scheme என்ற நிதியுதவி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மொஹைதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சியை சேர்ந்த இருவர் மீது கடந்த மாதம் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த முறைகேட்டில் மொஹைதின் யாசினுக்கும் தொடர்புள்ளதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், மொஹைதின் யாசின் நேற்று மாலை அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் பரவியது.

இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அது வெறும் வதந்தி என்பது பின்னர் உறுதியானது.

எனினும், அவர் இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முன்னிலையானபோது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

மலேசியா ஊழல்

இன்று நண்பகல் வேளையில் முன்னாள் பிரதமர் விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நேரில் முன்னிலையானார் என்றும் அதன் பின்னர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

மொஹைதின் யாசினை கைது செய்வது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் கலந்தாலோசிக்கப்பட்டு, அவரது ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அந்த ஆணையம் தெரிவித்தது.

ஜன விபாவா என்ற நிதியுதவித் திட்டத்தை தாம் பிரதமராகப் பதவி வகித்தபோது அறிவித்துச் செயல்படுத்தினார் மொஹைதின் யாசின். கொரோனா தொற்று விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மலேசிய மண்ணின் மைந்தர்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர்கள் மீதான வழக்குகள்

மலேசியா ஊழல்

மலேசியாவில் முன்னாள் பிரதமர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படுவதும் வழக்குகளை எதிர்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்வார் இப்ராஹிம் (இன்றைய பிரதமர்), பின்னர் நஜிப் துன் ரசாக் ஆகியோர் கைதாகினர்.

நஜிப் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார். அந்த கைது பட்டியலில் இப்போது மொஹைதின் யாசினும் இடம்பெற்றுள்ளார்.

பிணையில் விடுதலை

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் நாளை அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனக்கு எதிராக குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

பண மோசடி, சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக அவர் மீது குற்றம்சாட்டப்படும் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் கூறியது.

Previous Story

JVP ஆட்சிக்கு வந்தால்  ரணிலும், சஜித்தும் இணைய வேண்டும்

Next Story

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள 4 நாடுகள்:  பரபரப்பு தகவல்