போரிஸ் பிரதமராக தொடருவார்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்தார்.புதிய பிரதமர் வரும் வரை பிரதமர் பதவியில் தான் நீடிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். அக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார்.இன்று கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் இருக்கும் கன்செர்வேடிவ் கட்சியினர் புதிய தலைவர் வேண்டும் என்று கூறிவிட்டனர். எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்.” என்றார்.

புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான காலம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த போரிஸ் ஜான்சன் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை தான் பதவியில் இருக்கப்போவதாக தெரிவித்தார்.

புதிய பிரதமருக்கு தன்னால் முடிந்த ஆதரவை வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார் போரிஸ் ஜான்சன்.

பிரக்ஸிட்டை நிகழ்த்திக் காட்டியது, பிரிட்டனை பெருந்தொற்றிலிருந்து மீட்டு கொண்டு சென்றது, புதினின் படையெடுப்புக்கு எதிராக மேற்குலகிற்கு தலைமை தாங்கியது என தனது செயல்கள் குறித்து பெருமைப்படுவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

“தற்போது சில நேரங்களில் இருள் சூழ்ந்திருந்தாலும், நமது எதிர்காலம் ஒன்றாக பொற்காலமானதாக உள்ளது,” என்றார்.

முன்னதாக நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியுள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது.

பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், அரசாங்கம் “சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக” நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு,” என்று தெரிவித்தார்.

இதே கருத்தை பிரதிபலித்த சாஜித் ஜாவித், “அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை,” என்று தெரிவித்தார்.

boris

பிரச்னை என்ன?

முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ் பிஞ்சருக்கு எதிரான பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் கையாண்ட விதம் குறித்த செய்திகள் வெளியானதிலிருந்து இந்த சர்ச்சை தொடங்கியது.

முன்னதாக, “இந்த ஆண்டு தொடக்கத்தில் சில குற்றச்சாட்டுகள் எம்.பி கிறிஸ் பஞ்சருக்கு எதிராக நிலுவையில் இருந்தபோதும், அது பற்றி அறிந்திருந்தும் அவரை ‘துணை தலைமைக் கொறடா’ பதவிக்கு நியமனம் செய்தது எனது மிகப்பெரிய தவறு,” என்று போரிஸ் ஜான்சன் ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பாக பிபிசிக்கு போரிஸ் ஜான்சன் அளித்த நேர்காணலின்போது, “பின்னோக்கிப் பார்த்தால் அது நான் செய்த தவறான செயல். அதனால் மோசமாகப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறினார்.

ஆனால், அத்தகைய பதவி நியமன நடவடிக்கையில் பிரதமர் தொடர்ச்சியாக நடந்து கொண்ட விதம், எதிர்கட்சிகள் மட்டுமின்றி அவரது சொந்த கட்சி எம்.பி.க்கள் சிலராலும் கடுமையான விமர்சிக்கப்பட்டது.

போரிஸ் அரசுக்கு இதுவரை வந்த சிக்கல்கள்

போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்பிக்கள் சிலரை, பிரதமரின் ராஜினாமாவைக் கோரத் தூண்டியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்று மிகவும் தீவிரமாக இருந்தபோது, பிரதமர் இல்லம் மற்றும் அதற்கு அருகே உள்ள பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் பிரதமரின் பிறந்த நாள் விழாவும் அடங்கும். அந்த செயல்பாட்டுக்காக நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கே, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக லண்டன் போலீஸ் அபராதம் விதித்தது.

அதன் மூலம் பிரிட்டனில் அரசாங்க விதியை மீறிய குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமரானார் போரிஸ் ஜான்சன்.

இது மட்டுமின்றி, சில கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள், வரி உயர்வு நடவடிக்கை மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் செலவினத்தை கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையில் தெளிவில்லை என்று விமர்சித்து வந்தனர்.

Previous Story

இரகசிய உறவில் குழந்தையை பெற்றெடுத்த எலான் மஸ்க்!

Next Story

UKபிரதமர் போரிஸ் ஜான்சன் OUT