நஜீப் பின் கபூர்
நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல்

எவரும் பேசாத பல தகவல்கள் கட்டுரையில் பதிவாகி இருக்கின்றது
போரை ஆரம்பிக்க அமெரிக்க தரப்பில் கூறும் நொண்டி காரணங்கள்
போர் பற்றி தமது விருப்பங்களை பல ஊடகங்கள் பேசிவருகின்றன
இந்த வாரம் நாம் எழுத இருந்த தலைப்பு இதுவல்ல. சந்தர்ப்ப சூழ்நிலையில் அதனைக் கைவிடவேண்டி வந்தது. அதனைவிட நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் ஒட்டுமொத்த மனிதர்களின் இயல்பு வாழ்க்கையையே மாற்றி அமைக்கப் போகின்றது. போர் இன்று நமது எல்லைக்கு-காலடிக்கே வந்துவிட்டது.
காலிக்கு தெற்கே கடலில் நடத்தப்பட்ட ஈரான் கடற்படைக் கப்பல் மீதான தாக்குதல் இதனை உறுதி செய்கின்றது. மேலும் இந்தப்போர் எந்தவகையில் நமக்கு அழிவுகளையும் துன்பங்களையும் தரப்போகின்றது என்பதை முன்கூட்டி எச்சரிப்பதே கட்டுரையின் நோக்கமாக இருக்கின்றது. கடந்த சனிக்கிழமை துவங்கிய போர் இன்று ஒருவாரத்தைக் கடந்து மிக மோசமாக நடந்து வருகின்றது. தனது தலைவரை இழந்த கோபத்தில் ஈரான் வெறித்தனமான தாக்குதல்களை மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் நடாத்தி வருகின்றது.
முதலில் போர் பற்றி பேசிவிட்டு அதனால் வரக்கூடிய அழிவுகள் பற்றி விரிவாக பேசலாம். போர் தொடர்பில் நமது இரு கருத்துக்களை இங்கு பதிகின்றோம்.

1.இரு தரப்பினரும் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களையே பாவித்து வருகின்றார்கள். இவற்றை விட மிகவும் கொடூரமான ஆயுதங்கள் வர இருக்கின்றன.
2.அடுத்து இந்தப் போரில் ரஸ்யாவும் சீனாவும் ஈரான் சார்பில் நேரடியாகக் களத்தில் இறங்கப் போவதில்லை.
என்பது எமது நிலைப்பாடு. ஈரான் தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக நாம் இங்கு ஏதும் விரிவாகப் பேசப் போவதில்லை. அவைபற்றி ஏற்கெனவே விரிவாக பலர் பேசி இருக்கின்றார்கள். ஈரான் ஆன்மீகத் தலைவரைக் கொன்றுவிட்டால் ஈரான் சரணடைந்து விடும் என்பது ட்ரம்ப் கணக்காக இருந்தது. ஆனால் அவர் கொலையுடன் ஈரான் வெறித்தனமான தாக்குதலை இப்போது பிராந்தியம் பூராவிலும் நடாத்தி வருகின்றது. இதில் அமெரிக்க நலன்சார்ந்த இலக்குகள்தான்; ஈரானின் பிரதான குறியாக இருந்து வருகின்றன.
இந்தப் போரை துவங்கியதற்கு ட்ரம்ப் மற்றும் அமெரிக்க தரப்பில் சொன்ன பொய்களை நியூயோர்க் டைம்ஸ் இப்போது அம்பலப்படுத்தி வருகின்றது. குறிப்பாக பேச்சுவார்த்தை ஒரு நாடகம். அது போர் தளபாடங்களை நகர்த்துவதற்கும் தமக்குத் தேவையான இலக்குகளை துல்லியமாக சமையும்வரை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு யுக்தியாகவும் கவனத்தை திசை திருப்புவதற்காகவும்தான் அவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளைப் பாவித்துக் கொண்டார்கள்.

இந்த சம்பவத்தை சற்று உன்னிப்பாக பாருங்கள். ஜெனிவாவில் கடைசியக நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆரோக்கியமான பிரதிபலன்கள் கிடைத்து வருகின்றது என்று அதற்கு மத்தியஸ்துவம் செய்த ஓமான் வெளிவிவகார அமைச்சர் சைட் படார் பின் ஹமாட் அல் புசைடி ஊடகங்களுக்கு கருத்துச் சொல்லி இருந்த சில மணி நேரத்தில்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கின்றது.
வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தால் எதற்காக தாக்குதல் நடத்த வேண்டும்? இதிலிருந்து நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல பேச்சுவார்த்தை இவர்களின் நாடகம் என்பது உறுதியாகின்றது. மேலும் ஓமான் வெளிவிவகார அமைச்சர் ஈரான் அணுச் செறிpவை குறைத்தக் கொள்வது தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றது என்று சொல்லி இருந்தார் என்றும் ஓமான் அமைச்சர் அறிவித்திருந்தார். அப்படி இருக்கும் போதுதான் தாக்குதல் நடந்திருக்கின்றது.
இந்த பேச்சுவார்த்தைகள் எப்படி நடந்தது என்பதை ஒரு புரிதலுக்கு இங்கு பதிகின்றோம். அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகள் நடாத்துகின்ற போது இருதரப்பினரும் ஒரு இடத்தில்-ஒரு மேசையில் இருந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை.
இருதரப்பும் அடுத்தடுத்த அறைகளில் இருக்க குறிப்பிட்ட ஒரு தலைப்பு-விவகாரம் தொடர்பாக ஒரு தரப்பின் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு இதற்கு மத்தியஸ்துவம் அல்லது இணைப்பாளராக இருந்த ஓமான் வெளிவிவகார அமைச்சர் சைட் பக்கத்து அறையில் இருக்கின்ற அடுத்த தரப்புக்கு எடுத்துகொண்டுபோய் அவர்களிடம் தெளிவுபடுத்தி வந்தார். பின்னர் அந்தக் கருத்து தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு அவர் மீண்டும் அடுந்த அறையில் இருக்கும் அணிக்கு பறிமாற்றி வந்தார்.
இப்படித்தான் இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. எனவே பேச்சுவார்ததை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பது ஓமான் வெளி விவகார அமைச்சர்தான் உறுதிப்படுத்தி இருந்தார். இந்த நேரத்தில் தாக்குதல் நடந்தது எப்படி? எனவே அமெரிக்க திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்தியது என்பது நியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டாக இருக்கின்றது.
பேச்சுவார்த்தைகள் அப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஒரு சின்ன தாக்குதலை நடத்தி ஈரானை வழிக்குக் கொண்டு வருவோம் என்று டேன் கேன் சொல்லி இருந்தார். பாரியளவில் ஒரு போருக்குப் பேவது தமக்கு வாய்ப்பில்லை என்பதை ஆலோசகர் டேன் கொயின் ட்ரம்பிடம் கூறி இருந்தார். ஆனால் டரம்ப் அவரது கதையை தலைகீழாக மாற்றி ஊடகங்களிடம் பேசும் போது ஈரானை போரில் இலகுவாக தாக்கிக் கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசகர் தன்னிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார். அப்படி பொய் சொல்லித்தான் இந்தத் தாக்குதல் துவங்கியது.

மத்திய கிழக்கிற்கான அமெரிக்கத் தூதுவர் ஸ்டிப் விட்கெப் ஈரான் தரப்பினர் பதிமூன்று அணுகுண்டுகளை வைத்திருப்பதாக தனது முகத்திற்கே கூறினார் என்று குறிப்பிட்டிருந்தார். இது அண்டப்புளுகு. இவர்கள் நேரே சந்திக்கவே இல்லை. அப்படி இருக்க முகத்திற்கே கூறினார் என்பது எப்படி? இவை எல்லாம் நொண்டிச்சாட்டுக்கள். அடுத்து இஸ்ரேல் தாக்குதலுக்குத் தயாராகி விட்டது. அது தாக்குதலை நடாத்தினால் ஈரான் திருப்பி எமக்குத்தான் அடிப்பார்கள். அதனால்தான் நாம் இந்தப் போரில் தவிர்க்க முடியாமல் இறங்க வேண்டி வந்தது என்றும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்க்கோ ரூபியோ சொல்லி இருக்கின்றார்.
அலி காமெனியை காட்டிக் கொடுத்ததும் சவுதி என்றும் வொசிங்டன் போஸ்ட் செய்தி சொல்லி இருந்ததுடன் ஈரானைத் தாக்குமாறு சவுதி இளவரசர் சல்மான் ட்ரம்பை வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்றும் அது குறிப்பிட்டிருக்கின்றது. மேலும் காமெனி இருந்த இடத்தையும் சவுதிதான் காட்டிக் கொடுத்தது என்றும் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. ஆன்மீகத் தலைவரின் வழக்கமான காரியாலயத்தை தவிர்க்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் அவரிடம் கூறி இருக்கின்றார்கள். ஆனால் நான் எங்கேயும் போய் பதுங்க முடியாது. அப்படி பதுங்கி என்னை மட்டும் பாதுகாத்துக் கொள்வது எப்படி.? என்னைப் பாதுகாக்க நினைப்பது போல இந்த ஒன்பது கோடி மக்களையும் பாதுகாப்பது பற்றி சிந்தியுங்கள் என்று காமெனி தனது அதிகாரிகளிடம் கூறி இருக்கின்றார். இதனையும் நியூயோர்க் டைம்ஸ் எழுதி இருக்கின்றது.
ட்ரம்ப் ஈரானை அழிக்கும் வரை போர் தொடரும் என்று தற்போது கூறி வருகின்றார். எப்படியும் இந்தப் போர் தொடர்வதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம். ஆன்மீகத் தலைவர் அலி காமெனி இருக்கும்வரை அணுகுண்டுகளை தயாரிப்பதை நிராகரித்து வந்தார். இப்போது அவரே கொலை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் ஒரு பலிவாங்கள் யுத்தம்தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. எனவே இந்தப் போரால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பாதிப்புக்கள் வர இருக்கின்றது என்பது மிகத் தெளிவு. இப்போது அது பற்றி விரிவாகப்பார்ப்போம்.

ஹோர்மூஸ் நீரீணை ஊடாகத்தான் உலக பெற்றோலிய ஏற்றுமதியில் இருபத்தி இரண்டு சதவீதம் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதில் பெரும் தொகையான எண்ணை ஆசிய நாடுகளுக்கு வருகின்றது. குறிப்பாக சீனா இந்தியா இலங்கை போன்ற நாடுகள்தான் பாவிக்கின்றன. இதில் நிலை என்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம். ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மறைமுகமாக சீனாவை பலிவாங்கி வருகின்றது. இன்று சீனாவில் வளர்ச்சியில் ஈரான் பெற்றோலியம் பக்க துணையாக இருக்கின்றது. அதனால்தான் இன்று பல விடயங்களில் அது அமெரிக்காவையும் முந்திக் கொண்டு செல்கின்றது. அதனால் அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த இந்த போரைப் பாவிக்கின்றது.
அடுத்து இந்தியாவுக்குத் தேவையாக பெற்றோலியத்தில் பெரும்பகுதியும் இந்த வளைகுடாவில் இருந்து குறிப்பாக ஈரானில் இருந்து வருகின்றது. போரால் இந்தியாவுக்கு பெற்றோலியத்தை கொண்டுவர முடியாது. இன்று இந்தியாவிடம் இன்னும் இருபது நாட்களுக்குத் தேவையான பெற்றோல்தான் கையிருப்பில் இருக்கின்றது. அதே போன்று நமது நாடான இலங்கைக்கு தேவையான பெற்றோலும் இங்கிருந்துதான் வருகின்றது. இலங்கையிலும் ஏறக்குறைய இன்னும் மூன்று வாரங்களுக்குத் தேவையான பெற்றோல்தான் கைவசம் உள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையால் இன்று எண்ணையை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் நகர முடியாத ஒரே நிலை. எழுநூறு 700 வரை கப்பல்கள் அங்கு நங்கூரமிட்டிருக்கின்றன. காரணம் கடலில் கண்ணி வெடிகளை ஈரான் வைத்திருக்கின்றது. இதுவரை பண்ணிரெண்டு கப்பல்கள் அதில் சிக்கி வெடித்து சிதறி இருக்கின்றது.
இந்தப் பின்னணியில் உக்ரைன் போரைப் போல இதுவும் நீண்டு கொண்டு செல்கின்றது என்று கற்பனை செய்து பாருங்கள் என்ன நடக்கும் என்பது அப்போது புரியும். கொவிட் காலத்தில் நெருக்கடி வந்தாலும் பெற்றோலிய இறக்குமதியில் பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கின்ற நிலைக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. அப்போது அத்தியவசிய பொருட்களை உரிய இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை வரும்.
அந்த நேரத்தில் வேடுவர் யுகத்துக்குத்தான் போக வேண்டி இருக்கும். அது கூட சாத்தியம் இல்லை என்பதுதான் எமது கருத்து. காரணம் வேடுவர் காலத்தில் சில நூறு ஆயிரம் பேர்தான் நாடுகளில் வாழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கு தேவையான காடுகளும் உணவுகள் அங்கு இருந்திருக்கும். ஆனால் இன்று காடுகளே கிடையாது. எனவே மக்கள் அதிலும் வளங்களைப்பெற்று உயிர்வாழும் சாத்தியம் இல்லை. அதனால் இயல்பு வாழ்க்கை வரலாற்றில் நாம் என்றும் பார்க்காத அளவில் பாதிக்கப்படும். இலங்கை இறக்குமதியை நம்பி வாழ்கின்ற ஒரு தேசம். பெற்றோலிய தட்டுப்பாடு அனைத்து துறைகளிலும் கடும் பாதிப்பை உண்டு பண்ணும். குடிநீரைக் கூட மக்களுக்கு வழங்க முடியாத ஒரு நிலை வரலாம்.
வெளி நாடுகளில் இருந்து கப்பல்கள்-விமானங்கள் வராது. அதனால் இன்று நமக்குக் கிடைக்கின்ற அடிப்படை வசதிகளுக்கே சிக்கல்கள் வரும். அடுத்த நாட்டில் இருக்கின்ற அரிசி போன்ற உணவுப் பொருட்களைக் கூட மற்றுமொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை வரும். நாட்டின் பொருளாதாரம் படு பாதாளத்துக்குப் போகும். போர் நடக்கின்ற நேரம் உல்லாசம் போவதை மக்கள் விரும்பமாட்டார்கள். போரால் நான்கு கோடி வரையிலான உல்லாசப் பிரயாணிகள் வருகை பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதில் இலங்கை வரும் உல்லாசப் பிரயாணிகள் பல இலட்சம் பேரும் இருப்பார்கள். எண்ணை விலை பல மடங்கு உயரும். அது நேரடியாக பொருளதாரத்தில் தாக்கங்களை உண்டுபண்ணும் என்பதை குழந்தைகள் கூட அறிவார்கள்.
போர் நடக்கின்ற வளையத்தில் இருக்கும் இலங்கை பிரசைகளின் எண்ணிக்கை ஐக்கிய அரபு எமிரேட் 350000. சவுதி அரேபிய 246000. குவைட் 175000. கட்டார் 140000. ஓமான் 32000. இஸ்ரேல் 30000. ஜோர்தான் 14500. பஹ்ரைன் 13200. லெபனான் 7000. ஈரான் 600. யேமன் 27. சீரியா 20. பலஸ்தீனம் 4. இந்த எண்ணிக்கை ஒரு மில்லியன்களுக்கும் அதிகம். அவர்களில் தங்கி இருப்போரை நாம் ஒருவருக்கு நான்கு பேர் என்று வைத்துக் கொள்வோம். அப்போது எறக்குறைய இது 45 இலட்சம் பேர். இவர்கள் அனுப்பி வைக்கின்ற பணத்தில்தான் இங்குள்ள குடும்பங்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே இதில் நெருக்கடிகள் வரும்போது நேரடியாக எத்தனை குடுபங்கள் பாதிக்கும் என்பதனை எண்ணிப்பாருங்கள். மேலும் ஒருவருக்கு தலா பத்து நெருக்கமான உறவுகள் என்று கணக்குப்பார்த்ததால் ஒட்டு மொத்த முழு நாடுமே இதில் அடங்கும் என்பது தெளிவு. இந்த விவகாரங்கள் எந்தளவு பொது மக்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது நமக்குத் தெரியாது.
நாம் இங்கு குறிப்பிட்டிருக்கின்ற விடயம் முழு உலகிற்கும் பொதுவானதாக இருந்தாலும் குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு அதிலும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்தப்போர் பெரிய அழிவைக் கொடுக்கும். எனவேதான் அமெரிக்காவும் இஸ்ரேலும் போரை துவங்கினாலும் அதனை முடித்து வைப்பவர்கள் நாம்தான் என்று ஈரான் சொல்லி இருந்தது. இந்தளவுக்கு கொடூரமான தாக்குதல்களை ஈரானால் நடத்த முடியும் என்று நாம் நம்பவில்லை என்று ஆய்வாலர்கள் அதிர்ச்சி வெளியிடுகின்றார்கள்.
ஈருலகப்போரில் கூட மனித குலம் காணாத ஒரு அவலத்தை இந்தப் போரில் பார்க்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இன்று ஈரான் போரை தொடர விரும்புகின்றது. அதே நேரம் போரை துவங்கிய அமெரிக்க விரைவாக அதனை முடித்துக் கொள்ள விரும்புகின்றது. எனவே வரும் ஏழு நாட்கள் ஒட்டு மொத்த மனித இனத்தினதும் வாழ்வா சாவா தொடர்பான தீர்க்கமான காலமாக இருக்கும். நாம் இங்கு பேசிய விவகாரங்களைவிட இன்னும் பல விடயங்கள் சிக்கல்கள் போரில் இருக்கின்றன.
…………..********……………..





