‘போராட்டம்’

காட்டுத் தீ

-யூசுப் என் யூனுஸ்-

போராட்டக் குணம் என்பது நாம் அறிந்த வகையில் மனிதனுடைய பிறப்பிலிருந்து அல்லது கருவறையிலிருந்தே ஆரம்பிக்கின்றது என்று நம்புகின்றோம். சிசு தாயின் கருவறையில் இருக்கின்ற காலங்களில் வழக்கமான நாட்களைவிட அந்தப் பெண்ணுக்கு சில தேவைகள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றது அல்லது அவளிடத்தில் சில மாற்றங்கள் காணப்படுவதை அவதானிக்க முடியும். அதே போன்று குழந்தை பிறந்தது முதல் அது தனது தேவைகளை அடைந்து கொள்வதற்கு தாய்க்கு பல வழிகளில் அழுத்தங்களைக் கொடுக்கின்றது. பசிக்கின்ற போது அது அழுத்தங்களைத் தாய்க்குக் கொடுக்கின்றது. பாசி நீங்கினாலும் தாயின் அரவணைப்பில் அணைந்து கொள்ள நினைக்கும் போதும் அது  ஆர்ப்பாட்டங்களை செய்து தாயை தன்னிடத்தில் அழைத்துக் கொள்கின்றது.

இப்படியாக வளர்ந்து வருகின்ற நாட்களில் அது  பருவத்திற்கேட்ப  தனது தேவைகளை அடைந்து கொள்வதற்காக பல்வேறு முறைகளில் பெற்றோருக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது. இது போன்றுதான் அந்தக் குழந்தை தான் வாழ்கின்ற சமூகத்தில் ஒரு உறுப்பினராகும் போது தனது சமூகத் தேவைகளை அடைந்து கொள்ள பல வழிகளை நாடுகின்றது. அதே போன்றே இனம் சமூகம் என்ற சமூகத் தேவைகள்  வருகின்ற போது மனிதன் அவற்றை அடைந்து கொள்ள பல்வேறு வழிகளை நாடுகின்றான். அந்த உரிமைப் போராட்டம் இன, மத, சமூகப் போராட்டம், வர்க்கப் போராட்டம் என்று கூட அது அமைகின்றன. இந்த போராட்டங்கள் நியாயமாகவோ அநீயாயமாகவோ இருக்கலாம். சிலருக்கு நியாயம் என்று படுகின்ற விடயங்கள் இன்னும் சிலருக்கு பிழையாகத் தெரியலாம் இந்த இடத்தில்தான் மோதல்கள் வருகின்றன.

இந்தப் போராட்டங்களில் அரசியல் போராட்டங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இப்போது நாம் எமது நாட்டுக்கு வருவோம். இங்கு இன ரீதியிலான முரண்பாடுகள் இருக்கின்றன. சமூக வர்க்க ரீதியான முரண்பாடுகளும் இருக்கின்றன. இதனால்தான் 1971, 1980 முதல் 2009, (தமிழ் விடுதலைப் போரட்டம்.) மீண்டும் 1988-1989 களில் தெற்கில் சிங்கள இளைஞர்களின் போரட்டம் என்று இது வந்தது.  இப்படியாக வந்த அனைத்துப் போராட்டங்களையும் பதவியல் இருந்த அரசாங்கங்கள் முடக்கிப் போடுவதில் வெற்றி கண்டது. ஆனாலும் அந்தக் குழுக்களின் உணர்கள் இன்று வரை ஒரு முடிவுக்கு வந்ததாகவோ தீர்க்கபட்டதாகவோ இல்லை.

இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு சில தலைவர்கள் இருந்தார்கள்-இருக்கின்றார்கள். அவர்களின் ஆளுமையைப் பொறுத்து சில கோரிக்கைகள் வெற்றி கொள்ளப்பட்டும் பல கோரிக்கைகள் இன்றும் அதே நிலையிலும் இருந்த வருகின்றன.  தொழிற்சங்கப் போராட்டங்களும் அப்படித்தான். நாம் இங்கு அரசியல் போராட்டங்கள் பற்றிப் பார்ப்போம். சமகாலத்தில்  வித்தியாசமான போராட்டத்தையே நாம் அண்மையில் பார்த்தோம். இருந்த ஜனாதிபதி கோட்டாவையும் பிரதமர்  மஹிந்தாவையும் துரத்துவதற்காக நடந்த மக்கள் போராட்டம் அது.

போராட்டம் தனது இலக்கையும் எட்டியது. இடையில் வந்த ரணில் அந்த வெற்றியை சிதைத்து விட்டார் என்ற ஆதங்கம் இன்று நாட்டில் காணப்படுகின்றது. அந்தப் போராட்டம் முற்றுப் பெற்று விட்டது என்று நாம் கருதவில்லை எதிர்வரும் நாட்களில்  அது மீண்டும் துவங்கும் என்பது நமது கணக்கு. அதற்கான பின்னணி அப்படியே இருந்து வருகின்றது. புதிதாக பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணிலாலோ அல்லது அவர் அமைக்கின்ற அமைச்சரவை-பிரதமராலோ இந்த நெருக்கடிகளை ஒரு போதும் தீர்க்க முடியாது. இது ராஜபக்ஸாக்களின் தொடர்ச்சியான அரசாகத்தான் பயணிக்க போகின்றது அதற்கு மற்றுமொரு முகத்தை பொருத்தி இந்த அரசாங்கத்தை ரணிலுக்கு நாட்டுக்கோ உலகத்துக்கோ காட்ட முடியாது. அது அப்படி இருக்க இந்த நெருக்கடி மிக்க அரசியலில் நமது சிறுபான்மை கட்சிகள் தலைவர் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்ப்போம்.

வடக்கு கிழக்கில்  அரசியல் செய்கின் கட்சிகளிடத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த நிலைப்பாடு காணப்படவில்லை. கட்சிகள் போட்ட தீர்மானத்துக்கு முற்றிலும் முரணாகத்தான் அங்கு பலர் வாக்குகளை பதிவு செய்திருந்தார்கள் என்பதனை அவர்களே இன்று  பகிரங்கமாகப் பேசிக் கொண்டும் இருக்கின்றார்கள். இதனால்தான் நாம் ஒரு முறை குறிப்பிட்டிருந்தோம் தன்னலத்துக்கு வடக்கு கிழக்கில் தலைவர்கள் அரசியல் கட்சிகளை வைத்திருந்தாலும் தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினைகளை இனம் கண்டு தீர்க்கமான சந்தாப்பங்களில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் விடயத்தில் கூட்டணி சம்பந்தர், கஜேந்திரன,; விக்னேஷ்வரன், ஏன் டக்லஸூக்குக் கூட என்ன பிளவுகள் இருக்க முடியும். ஏன் அவர்கள் தமிழர்களின் நலன்கள் சார்ந்த விடயங்களில் ஐக்கியப்பட முடியாது?

இதனால்தான் இந்தியாகூட தலையீடு செய்கின்றது. அந்த தலையீடுகள் நியாயமோ அநியாயமோ அதில் இந்தியா தனது நலன்களில் மட்டுமே ஆர்வமாக இருந்து காய் நகர்த்துகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் கூட அதுதான் நடந்தது. ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஏதாவது இந்தியா இலங்கை அரசியல்வாதிகளுக்கு அலுத்தங்களைக் கொடுத்ததா? மேலும் இலங்கையின் நெருக்கடிகள் பற்றி சர்வ கட்சிக் கூட்டம் என்று இந்தியாவில் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றது. அதில் ஈழத் தமிழர் பற்றி ஏதாவது பேசப்பட்டதா என்று நாங்கள் கேள்வி எழுப்புகின்றறோம். அதனால்தான் இங்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்த அதிகார சபை பற்றி நாம் பேசி வருகின்றோம். களம் வாய்ப்பாக இருக்கின்ற போது துள்ளி விளையாட வேண்டிய தலைவர்கள் உறக்கத்தில் இருக்கின்றார்கள்.

இது முஸ்லிம் அரசியல் காட்சிகளை வைத்திருகின்கின்ற ஹக்கீம், ரிஷாட், அதாவுல்லா, ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களுக்கும் பொருந்தும். சமூகத்தின் பிரச்சினைகள் பொதுவாக இருக்;கின்ற போது பிரிந்து நின்று தன்னநலத்துக்கு அரசியல் செய்கின்ற போது ஒருபோதும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வராது வரவும் முடியாது. எனவேதான் இவர்களும் பிளவு பட்டு அரசியல் செய்தால்தான் பிழைக்கலாம் என்று நன்றாகவே இன்றுவரை வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். மலையகத்திலும் இதே நிலைதான் காணப்படுகின்றது. இவர்கள் சமூக நலுன்களுக்காகவாவது ஓரணியில் இணையாமல் இருப்பது தன்னல அரசியல் காரணங்களுக்காகத்தான் என்பது தெளிவு. எனவே சிங்கள சமூகத்தில் அரசியலைப் புனிதப்படுத்தவதற்காக நடக்கின்ற போராட்டங்கள் போல் சிறுபான்மை அரசியலிலுல் அலுத்த-போராட்டக் குழுக்கள்  அவசியமாகின்றது.

ஐயா பார்வைக்கு

காட்டுத் தீ – ‘வாய்ப்பு’ என்ற நமது பதிவுக்கு உங்கள் பதில் போல் அமைந்த ஒரு செய்தி பார்த்தோம். அதில் கூட்டமைப்பை சிதைக்க சிலர் வேலை பார்க்கின்றார்கள் என்றும் சொல்லி இருந்தீர்கள். தாங்கள் அமைப்புத்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்றும் சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.? தாங்கள் தலைமைத்துவம் ஏகோபித்த தீர்மானம் என்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் அன்றாடப் பிரச்சினைகள் அவதானிக்கப்படுவதாகவும் சொல்லப்ப்டிருந்தது.  அவற்றுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளையும் தொடர்பு கொண்டு தீர்வுக்கு முனைவதாகவும் சொல்லி இருந்தீர்கள்.

எல்லாவற்றிற்கும் பதில் வழங்கி இருந்த நீங்க தங்களது வயது மாட்டும் ஒரு சிக்கல்தான் என்றும் ஏற்றுக் கொள்வது போல் பதில் கொடுத்திருந்தீர்கள். இது இயற்கை சம்பந்தப்பட்ட விடயம். உங்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் அது பிரச்சினைதான்.  காற்று-வாய்ப்பு வரும் போது தூற்றிக் கொள்ளாததற்கு நீங்கள் மீண்டும் ஒரு உதாரணத்தை இந்த ஜனாதிபதித் தேர்தல்லின் போது ஏற்படுத்தி இருந்தீர்கள்.

இலங்கை தொடர்பாக இந்தியாவில் சர்வ கட்சிக் கூட்டம் நடந்தபோது நீங்கள் சொல்கின்ற தமிழர்களின் ஏக அரசியல் இயக்கமான உங்கள் கட்சி அங்கு செலுத்திய தாக்கம்தான் என்ன? இலங்கை விவகாரத்தில் இந்தியா தனது நலன்களில் மட்டும் கண்ணும் கருத்துமாக காரியம் பார்க்கின்றது. ஆனால் தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் அது எதையுமே கண்டு கொள்ளமால் நடந்து கொள்கின்றது. என்பது நமது குற்றச்சாட்டு. இந்தியா பெரிய நாடு ஏன் வல்லரசு என்று கூட கூறலாம். அதற்காக இந்தியா தமிழர் விவகாரத்தில்  எல்லாம் சரியாக செய்கின்றது என்றா சொல்ல வருகின்றீர்கள்?

யதார்த்தம் அப்படியாக இல்லை என்பதற்கும் இதுவும் ஒரு சான்றாக இருக்கின்றது. எனவே ஈழத் தமிழர் உரிமைகள் விடயத்தில் தாங்களின் தலைமைத்துவத்தில் மிகப் பெரிய பலயீனங்கள் இருக்கின்றது என்று நாம் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகின்றோம். ஏன் நீங்கள்தான் ஏகப்பிரதிநிதி என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்களே! நாடளுமன்றம் போக போட்டிக்கு நில்லுங்கள் மல்லுக் கட்டுங்கள். ஆனால் இனத்தின் அரசியல் விமோசனம் என்று வருகின்றபோது ஓரணியில் நின்று சிந்தியுங்கள்-அது காலதின் அவசரத் தேவை என்று மட்டும்தான் நாம் சொல்ல வருகின்றோம். சாதிக்க வாய்க்கும் போது சாய்மானக் கதிரையில் ஓய்வுக்காகக் காலத்தை விணடிக்க முடியாது.!

நன்றி:24.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரணில் சொத்துக்கள்  அதிர்ச்சி அறிக்கை!

Next Story

பிரிட்டன் பிரதமர்: ரேசில் முந்தும் லிஸ் டிரஸ்...      ரிஷி சுனக் பின்னடைவு!