போராட்ட களத்தில் ஆயுதம் ஏந்தி  பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய பகுதியில், முகத்தை மறைத்து, ஆயுதம் ஏந்திய நபர்கள், மோட்டார் பைக்கில் சென்றது விவாதப் பொருளாகியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் நேற்றைய தினம் கூடிய வேளையில், நாடாளுமன்ற நுழைவாயில் வளாகத்தை அண்மித்த பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலக கோரியே இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

இதன்போது குறித்த பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

திடீரென வந்த மோட்டார் பைக்குகள்

இவ்வாறான நிலையில், திடீரென இலக்கத் தகடுகள் அற்ற, ஆயுதம் ஏந்தி, முகங்களை முகக்கவசத்தினால் மூடியவாறு 4 மோட்டார் சைக்கிள்கள் போராட்டம் நடத்தப்பட்ட பகுதிக்கு வருகைத் தந்த நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இவ்வாறு போராட்டம் நடத்தப்பட்ட இடத்திற்கு வருகைத் தந்த மோட்டார் சைக்கிள்களினால், போராட்டக்காரர்கள் மத்தியில் அமைதியின்மை நிலவியது.

இதையடுத்து, பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள், மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்தவர்களை மறித்து கேள்வி எழுப்ப முயற்சித்த போது, மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்தவர்கள் போலீஸாரின் ஆணையை பொருட்படுத்தாது, பயணித்திருந்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டிருந்த போராட்டக்காரர்கள் மத்தியில் அமைதியின்மை நிலவியது.

ராணுவம் விசாரணைக்கு கோரிக்கை

ராணுவத் தலைமையக பணிப்பாளர் நடவடிக்கைகளின் வழிகாட்டலுக்கு அமையவே, நான்கு பேர் அடங்கிய ராணுவ ரைடர்ஸ் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இதன்போது, ஒழுக்கமற்ற விதத்தில் போலீஸ் அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு செயற்பட்ட 2 போலீஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறும் ராணுவத் தளபதி, போலீஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

போலீஸ் உத்தியோகத்தர்களின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை குறித்து விசாரணைகளை நடத்துமாறு போலீஸ் மாஅதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரிடம் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளதாக ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

போலீஸாரின் பதில்

நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவத்திற்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குறித்து போலீஸ் மாஅதிபரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் போலீஸ் மா அதிபர் சுயாதீன விசாரணைகளை நடத்துவதாகவும் போலீஸ் தலைமையகம் கூறுகின்றது.

எதிர்கட்சி கேள்வி?

மோட்டார் சைக்கிள்களில் வருகைத் தந்தவர்கள் யார் என்பது குறித்து அறிந்துக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபையில் கேள்வி எழுப்பினார்.

இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிள்கள், முகக் கவசம் அணிந்தவர்கள், இவர்கள் வேறொரு குழுவா? இரகசிய இராணுவமா? இதற்கான பதிலை நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் சட்டம் மற்றும் அமைதியை பேணுவதற்கான பொறுப்பு போலீஸார் வசம் காணப்படுவதாக கூறிய அவர், அதனாலேயே போலீஸார் கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் பதில்

மோட்டார் சைக்கிள்களின் இரு புறங்களிலும் இலக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

தான் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடியதாகவும், அவர் இதனை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

எனினும், இன்றைய தினம் குறித்த மோட்டார் சைக்கிள்களில் முன்புறமும், பின்புறமும் இலக்கத்தகடுகளை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி உறுதியளித்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கோவிட் காலப் பகுதியிலும் இந்த மோட்டார் சைக்கிளில்கள் வீதிகளில் பயன்படுத்தப்பட்டதாகவும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சபையில் குறிப்பிட்டார்.

கடும் பஞ்சம் ஏற்படும் – சபாநாயகர்

இதனிடையே, இலங்கையில் எதிர்காலத்தில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றமை குறித்து அனுமானிக்க முடிவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று (06) கலந்துக்கொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறான பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகியுள்ள சூழ்நிலையிலேயே, இன்று நாட்டின் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமாகும்

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையும் சாத்தியம் காணப்படுவதாக பொருளியல் நிபுணர்களை மேற்கோள்காட்டி அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

நாட்டில் இன்று எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மேலாக சென்று, கடுமையான உணவு பஞ்சம் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அனுமானிக்க முடிகின்றது என அவர் கூறுகின்றார்.

நாடாளுமன்றத்தில் தாம் செயற்படும் விதத்திலேயே இதனை கட்டுப்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஜனநாயக வரைவுக்குள் தீர்வு

மக்கள் எதிர்நோக்கியுள்ள நியாயமான கஷ்டங்களினாலேயே, தம்மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதை தாம் உணர்ந்துக்கொள்ள முடிவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தாம் தலைமைத்துவம் வகிக்கும் மக்களுக்கு தற்போது பொருளாதார அழுத்தத்தை உணர்ந்துக்கொள்ள முடிவதாக கூறிய அவர், அதனால், இந்த விடயத்தை நன்கு புரிந்துக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.

அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் திட்டத்தின் மூலம் வெற்றிக்கொள்ள முடியும் என்பதை வரலாற்றில் முன்னெடுத்த திட்டங்களின் ஊடாக உணர்ந்துக்கொள்ள முடியும் என தான் நம்புவதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றார்.

எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஜனநாயக வரைவுக்குள் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் தான் நம்புவதாக அவர் கூறுகின்றார்.

மேலும், அது வெற்றியளிக்காதபட்சத்தில், அது நாடாளுமன்ற ஜனநாயகம் வெற்றியளிக்காத விடயமாக கருதப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களில் முடிவடையும் என மஹிந்த யாப்பா அபேவர்தன கூறுகின்றார்.

நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வி அடைந்தமையினால், ஆயிரக்கணக்கான உயிர்களை கடந்த காலங்களில் இழக்க வேண்டிய நிலைமை தனது அனுபவத்தில் இரு முறைகளில் கண்டுக்கொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதனால், தோல்வி அடையாத வகையில் செயற்பட வேண்டும் என தான் நம்புவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றார்.

Previous Story

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் அரச வன்முறையாளர்களை  இறக்கிய நிஷ்சங்க சேனாதிபதி

Next Story

ஜனாதிபதி  விலகினால்: அரசியலமைப்பு கூறுவது !