போதைக்கு அடிமையான வாசிம் அக்ரம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோகைன் போதைக்கு அடிமையானதாக கூறியுள்ளார். ஆனால், முதல் மனைவி இறந்த பின்னர் அதில் இருந்து விடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாசிம் அக்ரம்

புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான வாசிம், 2003ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் 900 விக்கெட்டுகளை எடுத்தவர் இவர்.

தனது வாழ்க்கை வரலாற்று நூலில் வாசிம்(56), உலகம் முழுவதும் தொலை காட்சிகளில் வர்ணனையாளராக பணியாற்றியபோது கோகையன் பயன்படுத்தத் தொடங்கியதாக கூறியுள்ளார்.

“தெற்கு ஆசியாவில், புகழ் பெறுவது என்பது, அனைத்தையும் நுகர்வதாக, கவர்ந்திழுப்பதாக மற்றும் கெடுப்பதாக இருக்கிறது,”என டைம்ஸ் பத்திரிகையில் அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு இரவில் 10 விருந்து நிகழ்வுகளுக்கு நீங்கள் போகமுடியும். சிலர் அவ்வாறு செல்கின்றனர். இதுதான் என்னைப் பாதித்தது.”

வாசிமின் முதல் மனைவி ஹுமா 2009ஆம் ஆண்டு அரிய வகை பூஞ்சை தொற்று பரவியதில் திடீரென உயிரிழந்தார்.

“இறுதியில் ஹுமாவின் சுயநலமற்ற, சுயநினைவிழந்த செயல் என்னை போதை பிரச்னையில் இருந்து காப்பாற்றியது,” என்றார் வாசிம்.

“அந்த வாழ்க்கை முடிந்து விட்டது. ஒருபோதும் அதனை திரும்பிப் பார்க்கமாட்டேன்,” என்கிறார் அவர்.

1984ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு வீரராக உருவான, இடது கை வேக பந்துவீச்சாளர் வாசிம், பாகிஸ்தானுக்காக 104 டெஸ்ட்போட்டிகள், 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1992ஆம் ஆண்டு உலக் கோப்பையை வென்றார்.

1993ஆம் ஆண்டு மற்றும் 2000ஆம் ஆண்டு காலகட்டத்துக்கு இடையே 25 டெஸ்ட் போட்டிகள், 109 ஒரு நாள் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். எல்லா காலத்திலும் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார் இவர்.

மான்செஸ்டரில் வசித்து வந்த ஹுமா மற்றும் அவர்களது இரண்டு மகன்களைவிட்டு வெளியிடங்களுக்குப் பயணிக்கும்போது கோகைன் பழக்கம் தனக்கு வளர்ந்ததாக வாசிம் அக்ரம் சொல்கிறார்.

“இது போதுமான தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்காது என்பதாக இங்கிலாந்தில் நடந்த ஒரு விருந்தில் எனக்கு தரப்பட்டது. அப்போது இந்த பழக்கம் தொடங்கியது. ஆனால், என்னுடைய பழக்கம், மிகவும் தீவிரமாக என்னுள் வளர்ந்தது. நான் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று ஒரு புள்ளியில் உணர்ந்தேன்,” என்று சொல்கிறார்.

“ஹுமா, இந்த தருணத்தில் பெரும்பாலும் தனிமையாக உணர்ந்தார் என்பது எனக்கு தெரிந்தது. தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தோருக்கு அருகில் கராச்சியில் சென்று வசிக்க வேண்டும் என்ற தனது ஆசை குறித்து அவர் பேசினார். ஆனால், அதற்கு நான் தயக்கம் காட்டினேன்.”

“ஒரு எல்லைக்கு உட்பட்டு கராச்சி செல்வது எனக்கே பிடித்திருந்தது. ஆனால், பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல நாட்கள் விருந்துகள் பற்றிய எனது கவலையால் வேலை என்று பாசாங்கு செய்தேன்.

வாசிம் அக்ரம்

காலம்சென்ற அவரது மனைவி அவரது போதைப் பழக்கத்தைக் கண்டுபிடித்த பின்னர், அதில் இருந்து விடுபட உதவி நாடினார் வாசிம். லாகூரில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் அவருக்கு மோசமான அனுபவம் நேரிட்டது. 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான வர்ணனையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானார்.

போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலைத் தணிக்கும் வகையில் போதைப் பொருள் பயன்பட்டது. அந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு மனைவி இறந்த நிகழ்வு தம்மை உலுக்கி அந்தப் பழக்கத்தில் இருந்து மீள உதவியது என்கிறார் அவர்.

அதன் பின்னர் அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவியுடன் இளம் மகளும் உள்ளார்.

தவிர, வாசிம் அக்ரம் தான் விளையாடும் காலத்தில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். தாம் அந்த முறைகேட்டில் ஈடுபடவில்லை என்று அவர் மீண்டும் மறுத்தார்.

2000ஆம் ஆண்டு, மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில், பாகிஸ்தானின் சலீம் மாலிக், அதா-உர்-ரஹ்மான் ஆகியோர் விளையாட தடைவிதிக்கப்பட்டனர்.

இந்த முறைகேடு குறித்து நீதிபதி மாலிக் கயூம் அளித்த அறிக்கையில், வாசிம் மேட்ச் பிக்ஸிங் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். “சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்ல முடியாது” என்பதால் அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அனுமதிக்கக் கூடாது” என்றும் கூறப்பட்டது.

“அவரது நன்னடத்தையை சந்தேகிக்கும் வகையில் சில சான்றுகள் உள்ளன,” என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதும் வரை அதனை நான் படிக்கவில்லை என்று வாசிம் கூறினார்.

“நான் குற்றமற்றவன் என்று எனக்குத் தெரியும்,” என்றார் அவர்.

“ஒவ்வொன்றும் அவர் சொன்னார், அவள் சொன்னார், யாரிடம் இருந்தோ நான் கேள்விப்பட்டேன், வாசிம் யாரோ ஒருவர் மூலம் ஒரு செய்தியை அனுப்பினார் என்பதாக இருக்கிறது. ஒன்று கூட சரியானதாக இல்லை”

“என் குழந்தைகள் வளர்ந்து அவர்கள் கேள்விகள் கேட்கிறார்கள் என்பதால் இது எனக்கு சங்கடமாக இருக்கிறது,” என்கிறார் வாசிம்.

Previous Story

தென் கொரிய ஹாலோவீன் நெரிசல்:மேலும் சில தகவல்கள்

Next Story

"எல்லா நாளும் கோலியே காப்பாற்றுவாரா"