பூவுக்கு அழிவு! தலைக்கு வாழ்வு! என்ன அட்டகாசமான கதை இது!

-பிரமிளா கிருஷ்ணன்-

கரு

கருவில் இருப்பது பூவா தலையா? பூ என்றால் பெண் குழந்தை, தலை என்றால் ஆண் குழந்தை. இதுபோன்ற குறியீட்டுச் சொற்களை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஸ்கேன் மையங்களில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சொல்வதற்கு பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை ‘பெண் குழந்தை’ என தெரிய வந்தால் போலி மருத்துவர்கள் மூலமாக கருக்கலைப்பும் நடைபெறுகிறது என்று தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், தருமபுரியில் வனஜா என்ற கர்ப்பிணி பெண் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்ததும், போலி மருத்துவர்கள் மூலம் பணம் செலுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். முறையாக மருத்துவம் பயிலாத போலி மருத்துவர்கள் வனஜாவின் வயிற்றில் இருந்த கருவை அகற்ற முடியாமல் வயிற்றுக்குள் கரு சிதைந்த நிலையில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீடு திரும்பிய வனஜா வலியால் அவதிப்படவே, அவரது தாய் அவரை அவரச சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோதுதான், போலி மருத்துவர்களின் உதவியுடன் கருச்சிதைவு நடைபெற்றது என அரசு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

தொடர்ச்சியாக சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வனஜாவுக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு, அவர்களிடம் நவீன ஸ்கேன் கருவி இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த கும்பல் பல கர்ப்பிணி பெண்களை ஒரு வீட்டுக்கு வரவழைத்து ஸ்கேன் செய்து கருக்கலைப்புக்கு ஊக்குவித்தும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கருக்கலைப்பு எவ்வாறு எளிதாக நடைபெறுகிறது என பிபிசி தமிழ் தகவல்களை சேகரித்தது. பெண்கள் அமைப்புகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலரிடமும் பேசினோம். ஸ்கேன் மையங்களை நடத்துவோர்கள் பேச முன்வரவில்லை.

ஆனால் கருக்கலைப்பு செய்ய உறவினர் பெண் ஒருவரை அழைத்துச் சென்ற பெண் தனது அடையாளங்களை மறைத்து கள நிலவரத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

முதலில், ஸ்கேன் மையங்களில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் குறித்து கேட்டபோது, சமூக ஆர்வலர் செந்தில்ராஜ் தெளிவுபடுத்தினார்.

”பல ஸ்கேன் மையங்களில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் குறியீடுகள் மூலம் பாலினம் சொல்லப்டுகிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் கருக்கலைப்பு பரவலாக நடக்கிறது என்பதற்கு அவவ்போது பதிவாகும் வழக்குகள் சாட்சியாக உள்ளன. ஸ்கேன் மையங்களில் கருவில் உள்ள குழந்தை பூ என்றால் பெண் குழந்தை என்றும் தலை என்றால் ஆண் குழந்தை என்றும் சங்கேதமாக பாலினம் சொல்லப்படுகிறது.

வெகு எளிதில் பாலினத்தை தெரிந்துகொண்டு, பல பெற்றோர் கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பெண் குழந்தை என தெரியவந்தால், கருக்கலைப்பு செய்யும் நடைமுறை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காணப்படுகிறது,”என்கிறார் செந்தில்ராஜ்.

வேலைவாய்ப்பின்மை மற்றும் சாதிமறுப்பு திருமணங்களும் பெண் கருக் கொலைக்கான காரணங்களாக இருப்பதாக விவரித்தார் அவர். ”தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பலர் பெங்களூரு, கேரளா, சென்னை என வெளியிடங்களுக்கு சென்று வேலைபார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தொழில் வளர்ச்சி இங்கு குறைவு. குழந்தைகளை வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி வளர்க்கிறார்கள் என்பதால், இளவயது திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன.

கரு

அதோடு, முன்னைவிட, சாதிமறுப்பு திருமணங்கள் அதிகரித்துவிட்டன. அதிலும் தருமபுரியை பொறுத்தவரை, வன்னியர்-தலித் சமூகங்களுக்கு இடையே பதின் பருவ சிறார்கள் இடையே திருமணங்கள் நடைபெறுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. பதின்பருவத்தில் சாதி மாறி பெண் குழந்தைகள் திருமணம் செய்துகொள்வதை பெற்றோர்கள் அவமானமாக கருதுகின்றனர்.

வேலைவாய்ப்பு தேடி அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லவேண்டிய நிர்பந்தத்தில் உள்ள பெற்றோர்களால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியவில்லை என்பதால் ஒரு பெண் குழந்தை இருந்தால் போதும், இரண்டாவது அல்லது மூன்றாவது பெண் குழந்தை என தெரியவந்தால், கருக்கலைப்பு செய்துவிடவேண்டும் என எண்ணுகிறார்கள்,”என்கிறார்.

மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் செய்ய வேண்டிய செலவுகளும் பெற்றோர்களை கருக்கலைப்புக்கு தள்ளுகிறது என்கிறார்.

”முன்னைவிட விலைவாசி கடுமையாக அதிகரித்து விட்டது. வறுமையில் வாழும் பெற்றோர்கள் இனிவரும் காலங்களில் தங்களது வருமானத்தை வைத்து பெண் குழந்தைகளுக்கு செலவு செய்யமுடியுமா என வேதனையில் உள்ளனர். இந்த தவிப்பில்தான் கருக்கலைப்பு செய்துகொள்ள போலி மருத்துவர்களை நாடுகிறார்கள்,” என்கிறார் செந்தில் ராஜ்.

தேசிய குடும்ப நல ஆய்வின்படி, தமிழ்நாட்டில், 2015-16ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 954 பெண் குழந்தைகள் இருந்தனர். அதே ஆய்வில் 2020-21ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 878 பெண் குழந்தைகள்தான் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதால்தான் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல பெண்களுக்கு குறைந்தது ஒருமுறையாவது கருக்கலைப்பு செய்துகொண்ட அனுபவம் இருக்கும் என்கிறார் தருமபுரியைச் சேர்ந்த வள்ளி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ”என் உறவினர் பெண்ணுக்கு தற்போது வயது 25. அவருக்கு 17 வயதில் திருமணம் நடந்தது.

தற்போது அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது, நான்காவதும் பெண் குழந்தை என தெரியவந்ததால், கருக்கலைப்பு செய்யவேண்டும் என வீட்டு பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அவரது கணவருக்கு வேறு திருமணம் செய்யப்போவதாக அந்த பெண்ணை மிரட்டினார்கள். வேறு வழியின்றி நான் கருக்கலைப்புக்கு அழைத்துச்சென்றேன். எங்கள் ஊர்களில் பல பெண்கள் குறைந்தது ஒருமுறையாவது கருக்கலைப்பு செய்த்தவர்களாக இருப்பார்கள்,”என்கிறார் வள்ளி.

கரு

மேலும் அவர், கிராமங்களில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வந்தால் அதற்கான தீர்வுகள் உடனடியாக கிடைப்பதில்லை என்பதாலும் பெண் குழந்தைகளை பெற்றோர் விரும்புவதில்லை என்கிறார். ”பெற்றோரின் கவனிப்பின்றி, வயதானவர்களின் மேற்பார்வையில்தான் பெரும்பாலான குழந்தைகள் வளர்க்கிறார்கள்.

பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தால், புகார் தெரிவித்தாலும், அதில் நீதி கிடைப்பதற்கு பல காலங்கள் ஆகின்றன. இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தை தேவையில்லை என்றும் பெண் குழந்தையை கருவில் அழிப்பதை தீர்வாகவும் எண்ணுகிறார்கள்,”என்கிறார் வள்ளி.

தமிழ்நாட்டில் தொடரும் கருக்கலைப்பு சம்பவங்களைத் தடுப்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் பேசினோம். குறிப்பாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் ஏன் கருக்கலைப்பு தொடர்கதையாகவே உள்ளது என வினவினோம்.

”தருமபுரியில் கருக்கலைப்பு செய்த நபர்கள் கைதாகியுள்ளனர். தனியார் ஸ்கேன் மையங்கள் பலவும் பேராசை காரணமாக கருக்கலைப்பு செய்து அதிக காசு சம்பாதிப்பதில் குறியாக உள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஸ்கேன் மையங்களில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சொல்கிறார்களா என்ற சோதனை நடந்துவருகிறது. விதி மீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்போம். அதோடு தர்மபுரி மலை கிராமங்களில் இள வயது திருமணங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

அதுவும் கருக்கலைப்புக்கு ஒரு காரணாமாக உள்ளது. சமூக நலத்துறை மூலமாக நாடகம் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,”என்கிறார். மேலும், தமிழ்நாட்டில் பெண் கருக்கலைப்பை குறைப்பதற்கு சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Previous Story

அதானிக்கு மின் திட்டம்: கோட்டாபய-மோதியின் அழுத்தம்- அதிகாரி ராஜினாமா

Next Story

ரஷ்யா விமான லடாய்