‘புரட்சி’

காட்டுத் தீ

யூசுப் என் யூனுஸ்

உலக வரலாற்றில் நிறையவே புரட்சிகள் பற்றிய வரலாறுகளும் கதைகளும் இருக்கின்றன. இது சமூகப் புரட்சி, சமயப் புரட்சி, கைத் தொழில் புரட்சி, அரசியல் புரட்சி என்றும்  அடையாலப் படுத்தப்படுகின்றன. இதில் நாங்கள் இங்கு பேசப் போவது அரசியல் புரட்சிகள் பற்றிய செய்திகளையாகும். அரசியல்  புரட்சிகள் என்று வரும் போது 1911ல் சீனாவில்   அதிகாரத்தில் இருந்த சிங் வம்சத்தை (1636-1911) விரட்டி விட்டு சீனத்து செம்படை 1911 பெற்ற வெற்றியை இது குறிக்கின்றது. அவர்கள் பெற்ற வெற்றி இன்று வரை நாட்டில் இருக்கின்றது. என்றாலும் அங்கு பல அரசியல் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டும் இருக்கின்றன.

அதே போன்று 1917 ல் ரஷ்யாவில் இரண்டாம் நிக்காலஸ் மன்னனைத் துரத்தி விட்டு ரஷ்யாவில் இடது சாரிகள் பெற்ற சோசலிஸ புரட்சியும் சமகாலத்தில் முக்கிய புரட்சிகளாகப் பார்க்கப் படுகின்றன. இது தவிர கியூபா வியட்னாம் ஈரான் போன்ற நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள் பற்றியும் நீண்ட வரலாறுகள் இருக்கின்றன.  இது தவிர உலகில் பரவலாக இராணுவப் புரட்சிகளும் சதிப்புரட்சிகளும் நடந்திருக்கின்றன. அண்மைக் காலத்தில் அதிகமான இராணுவப் புரட்சிகள்  ஆபிரிக்க நாடுகளில்தான் நடந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் இங்கு பேசப்பேவது நமது நாட்டில் நடந்த அகிம்சை வழியிலான மக்கள் புரட்சி தொடர்பான செய்திகளையாகும்.

இந்தப் போராட்டம் உலகிற்கு முன்னுதாரணமான ஒரு போராட்டமாகவும் அகிம்சை வழியான போராட்டமாகவும் உலகத்தாரால் பார்க்பட்டது. இந்தப் போராட்டத்துக்கான பின்னணி எப்படி ஆரம்பமானது என்பது அனைவரும் அறிந்த கதை. அது பற்றி நாம் நிறையவே தகவல்களைச் சொல்லி இருக்கின்றோம். குறிப்பாக ராஜபக்ஸ குடும்பத்தினர் இந்த நாட்டு மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தார்கள். அத்துமீறி அரசியல் அதிகாரங்களைப் பயண்படுத்தினார்கள் என்றும் குற்றம் சாட்டுக்கள் எழுந்தன. இதனால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கினார்கள். துவக்கத்தில்  மக்கள் தாமாகவே கிளர்ந்து எழுந்த ஒரு போராட்டமாகத்தான் இது பார்க்கப்பட்டது. ஆனால் பின்புலத்தில் அரசியல் சக்திகள் இருந்தன என்பதும் பகிரங்கமான செய்தி. இலங்கை அரசியல் போராட்டங்களை நெறிப்படுத்துவதில் முன்னணியில் இருக்கின்ற அணுரகுமார தலைமையிலான ஜேவிபியும் அதன் தொழிற் சங்க மகளிர் மற்றும் இதர அமைப்புக்களும், குமார் குனரத்தினம் தலைமையிலான ஜேவிபியிலிருந்து பிரிந்து போன  முன்னிலை சோஸலிசக் கட்சிளும் அதன் மாணவ அமைப்பான ‘அந்தரேயும்’ செயல்பட்டன.

பிரதான எதிரணியான சஜித் தலைமையிலான அணியும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டன. ஆனாலும் அது அரசுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அவர்களைக் கண்டு அரசு அச்சம் கொள்ளவும் இல்லை. ஆனாலும் முன்சொன்ன அணிகள்தான் இதில் தீர்க்கமான சக்தியாக இருந்தன-இருக்கின்றன. அரசும் அவற்றுக்குத்தான் பயப்படுகின்றது. ‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்தின் தீர்க்கமான ஒரு நாளாக மே 9ம் திகதி அமைந்தது. ஆளும் தரப்பினர் போராட்டக்காரர்கள் மீது நடாத்திய தாக்குலால் முழு நாடுமே பற்றி எரிந்தது. பிரதமர் மஹிந்த திருமலையிலுள்ள இராணுவமுகமில் தஞ்சம் அடைய வேண்டி வந்ததும் பதவி விலகியதும் தெரிந்ததே. அதன் பின்னர் ஜூன் 9ம் நாள்  நடத்த நாடு தழுவிய போராட்டத்தில் ஒரு மில்லியன் அளவு வரையிலான மக்களை கொழும்பில் கூடி ஜனாதிபதி மாளிகை, பிரதமர் வீடு, செயலகம், என்று அனைத்து கட்டிடங்களையும் முக்கிய அரச தொலைக் காட்சி நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டில் போராட்டக்காரர்கள் கொண்டு வந்தனர்.

இவை அனைத்தும் அகிம்சை வழியில் நிறைவேறினாலும் ஆங்காங்கே சிறு வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. இந்தப் பின்னணியில் ஜனாதிபதி நாட்டில் இருந்து தலைமறைவானதும் பிரதமராக இருந்த ரணில் ஜனாதிபதியாக வந்ததும் அனைவரும் அறிந்த கதைகளே. அவை அனைத்தும் மக்களில் கண்முன்னே இன்னும் இருப்பதால் அவற்றை விளக்க வேண்டிய தேவை நமக்கில்லை. இப்போது நாட்டில் புதிதாகத் தோன்றி இருக்கின்ற நிலையைப் பார்ப்போம்.

இந்த மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது என்ற நிலைபாடு ஓரிரு தினங்கள் கூட நீடிக்கவில்லை. இடையில் புரட்சிக்கு ஆப்பாக வந்த ரணில் பிரதமராகி இன்று ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருப்பது. பலயீனமான ராஜபக்ஸாக்களைவிட நாட்டு நிலமையை மேலும் மோசமாக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டக்காரர்கள் புரட்சி வெற்றி பெற்றுவிட்து இதற்குப் பின்னர் நாட்டில் முன்னமாதிரியான ஒரு ஊழல் அற்ற அரசை தம்மால் ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் இருந்தனர். அரச அதிகாரிகளும் நிருவனங்களின் தலைவர்களும் புரட்சி வெற்றி பெற்றுவிட்டது நாமும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சுருதியை மாற்றி வாசிக்கத் துவங்கிய போது, கதை சற்றும் எதிர்பார்க்காத ஒரு திசையை நோக்கி நகரத்துவங்கியது.

இங்குதான் ரணில் சிலருக்கு ஹீரோவாகவும் பலருக்கு வில்லனாகவும் அரங்கை ஆக்கிரமிக்கத் துவங்கி இருக்கின்றார். தலைமறைவாக ஒளித்திருந்த மொட்டுக் கட்சியினர் அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை ரணில் பெற்றதால் தற்போது மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றார்கள். மக்கள் உணர்வுகளுக்கு முற்றிலும் மாற்றமாகத்தான் தமது உறுப்பினர்கள் பராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களித்திருக்கின்றார்கள். இது விடயத்தில் பணம் தீர்க்கமான சக்தியாக இருந்திருந்தாலும் எப்டியோ ராஜபக்ஸாக்களின் அதிகாரம் மீண்டும் நாட்டில் நிலை நாட்டப் பட்டிருக்கின்றது.

தலைமறைவாக இருந்தவர்கள் இன்று மீண்டும் தடிகளை எடுத்துக் கொண்டு  ஒரு கை பார்ப்போம் என்பது போல பேசுகின்றார்கள். மீண்டும் கோட்டா நாட்டுக்கு வரும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றது. எனவே எஞ்சி இருக்கின்ற காலத்தை அடக்குமுறை மூலமாவது மொட்டுக் கட்சி முன்னனெடுக்க முனையக் கூடும். மக்கள் உணர்வுகளும் நாடாளுமன்ற செயல்பாடுகளும் ஒன்றுக் கொன்று முரணான திசையில் இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றது. இது ஆரோக்கியமான ஒரு நிலை அல்ல. ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக இருந்த மக்கள் இன்று ரணிலுக்கும் அவரை அதிகாரத்துக்குக் கொண்டு வந்த நாடாளுமன்றத்துக்கும் எதிராக இருக்கின்றார்கள். இவர்களை அரசு அடக்கி வைக்க முனைகின்றது.

இதற்கிடையில் அரசாங்கம் அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்குவதில் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. பொருட்களின் விலைகள் மேலும் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புக்கள். வெளிநாடுகளில் இருந்து எந்த நல்ல சமிக்ஞைகளும் நாட்டுக்குக் கிடைக்கவில்லை. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யபடுகின்றவருக்கு வருகின்ற சம்பிரதாய வாழ்த்துக்கள் கூட இது வரை ரணிலுக்குக் கிடைக்கவில்லை. வந்த ஓரிரு வாழ்த்துக்களும் ஏனோதானோ என்று மிகத் தாமதமாக வந்திருக்கின்றது. இதிலிருந்து மக்கள் விருப்பதுடன் இன்று அதிகாரித்தில் இருப்பவர்கள் பதவிகளில் அமர்த்தப்படவில்லை என்பதனை சர்வதேசம் புரிந்து கொண்டிருக்கின்றது என்பது உறுதியாகின்றது.

மக்கள் விருப்பு எப்படி இருந்தாலும் மொட்டுக் கட்சியினர் இன்னும் சில காலத்துக்கு அதிகாரத்தில் இருப்பார்கள் என்ற கருத்து இருப்பதால் அரசியல்வாதிகள் மன நிலையில் பட்சோந்தி மாற்றங்களைக் காண முடிகின்றது. வானெலி தொலைக் காட்சிகளைத் திறந்தால் அரசுக்கு எதிரான போராட்டகாரர்களை வேட்டையாடுகின்ற செய்திகளையும் கதைகளையும்;தான் அங்கே பார்க்க முடிகின்றது. நடுநிலையாக செயல்படத் தயாரான அரச அதிகாரிகளும் கோட்டா காலத்தில் காரியம் பார்த்த பணியில் செய்படுவதற்றுத் தம்மை மாற்றிக் கொள்ளும் மன நிலைக்கு மீண்டும் வந்திருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோம்.

தோற்றுப் போன ஒரு சதிப் புரட்சிக்கு நடந்த கதைதான் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. பல ஆயிரக் கணக்கானவர்கள் கைது செய்து துண்புருத்தப்படும் நிலை நாட்டில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்தியா, சீனா, மற்றும் அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் எப்படிக் காய்களை நகர்த்தப் போகின்றது என்பதும், மக்கள் விசுவாசம் அற்ற ஒரு அரசாங்கத்தை சர்வதேசம் எப்படிக் கவனிக்கப் போகின்றது என்பதனையும் எதிர் வரும் நாட்களில் பார்க்க முடியும்.

நன்றி:31.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இரானிடம் அணுகுண்டை தயாரிக்கும் திறன் உள்ளது

Next Story

இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது - அதிபர் ரணிலுக்கு குடியரசு தலைவர் கடிதம்