-நஜீப் பின் கபூர்-
(நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல்)
“பாராளுமன்றத்தை மக்களுக்காக திறந்து விட வேண்டும்.
இது சமூகவிரோதிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கின்ற
இரகசிய பதுங்கு குழியாக இருக்கக் கூடாது.
மக்கள் எதற்காக இந்தளவு பாரிய அங்கிகாரத்தை
நமக்குத் தந்திருக்கின்றார்கள் என்பதனை அதிகாரிகளும்
அரசு ஊழியர்களும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்”
நமது பத்தாவது நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி அனுர ஆற்றிய உரை வரலாற்ற முக்கியத்துவம் வாய்ந்தது. நமது நாட்டில் இது வரை ஜனாதிபதியாக பதவியேற்ற எவரும் இதுபோன்ற ஒரு உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றியது கிடையாது என்று சொல்லுவதை விட ஏற்கெனவே இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் இப்படியான உரையை ஆற்றுகின்ற ஆற்றல் அவர்களுக்கு இருக்கவில்லை என்பது எமது பார்வையாக இருக்கின்றது. அடுத்து தனது தேர்தல் பரப்புரைகளில் அவர் எவற்றை எல்லாம் பேசி வந்தாரோ அதனைத்தான் அவர் அங்கும் சுருக்கமாக பேசி இருக்கின்றார்.
ஏற்கெனவே இருந்த ஜனாதிபதிகள் தேர்தல் மேடைகளில் ஒன்றைப்போசி அதனை அடியோடு மறந்துதான் தமது உரைகளை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தி வந்திருக்கின்றார்கள். அப்படி அவர்கள் பேசிவற்றை எதைனயுமே செய்யவில்லை. அது பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டியதுமில்லை.
ஜனாதிபதி அனுரவின் உரையில் யதார்த்தமும் கண்டிப்பு எச்சரிககைகளும் கலந்திருந்ததாகத்தான் நாமக்கு அவதானிக்க முடிந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கு குடி மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் அதில் இருக்கின்ற எதிர்பார்ப்புகள் பற்றியும் நன்கு உணர்ந்தவராக இருக்கின்றார்.
பத்தாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருக்கின்றவர்களில் உறுப்பினர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் (145பேர்) புதியவர்களாக இருப்பதால் அவர்களை ஆரோக்கியமான மார்க்கங்களில் சுலபமாக வழிநடத்திச் செல்ல அது உதவும் என்றும் அவர் அங்கு கூட்டிக் காட்டினார். இது அவரது நாடாளுமன்றத்தை சுத்திகரிக்கும் சிரமதான அழைப்புக்குக் கிடைத்த மக்கள் அங்கிகாரம் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
பாராளுமன்றத்தை மக்களுக்காக திறந்து விட வேண்டும். இது சமூகவிரோதிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கின்ற இரகசிய பதுங்கு குழியாக இருக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். மக்கள் எதற்காக இந்தளவு பாரிய அங்கிகாரத்தை நமக்குத் தந்திருக்கின்றார்கள் என்பதனை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று எச்சரிக்கை களந்த அவரது உரையில் நிறையவே அர்த்தங்கள் இருந்தன.
நாட்டின் பொருளாதார நிலைபற்றி அவர் பேசும் போது அதில் ஏற்படுகின்ற சிறியதோர் அசைவும்-அதிர்வும் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஐஎம்எப்.புடன் மூன்றம் கட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் அங்கு சுட்டிக் காட்டியதுடன், மக்களின் ஏழ்மைக்கு மாற்றுத் திட்டங்கள் பற்றியும் அவரது உரையில் சொல்லப்பட்டது. இது தவிர உடனடியாக தனது அரசாங்கம் மேற்கொள்ள எதிர்பார்க்கின்ற பல துறைகள் பற்றியும் அவர் பெயர் குறிப்பிட்டடு அங்கு பேசி இருந்தார்.
கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட பலவேறுபட்ட தரப்புக்கள் மர்மமான படுகொலைகள் மூடி மறைக்கப்பட்டிருக்கின்ற குற்றச் செல்களுக்கும் தனது அரசாங்கம் உரியவகையில் நீதி தரும் என்றும் அவர் அடித்துக் கூறி இருக்கின்றார். அவை காலத்தால் மறக்கடிக்கப்பட தனது அரசாங்கம் இடம் வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த கால மனிதப் படுகொலைகள் ஈஸ்டர் தாக்குதல் லசந்த, தாஜூதீன் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்ற படுகொலைகள் பற்றித்தான் அவர் அங்கு சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நீதிதுறையின் செயல்பாடுகள் பற்றியும் அவர் அங்கு விமர்சனங்களை தெரிவித்தார்.
அதிகார வார்க்கத்துக்கு ஒரு சட்டம் அப்பாவிகளுக்கு ஒரு சட்டம் என்று நாட்டில் சட்டங்கள் இருக்க முடியாது என்றதுடன், இன மத ரீதியில் எவருக்கும் இங்கு பாகுபாடுகள் இருக்க முடியாது. அப்படி எவரும் தமது பலத்தை இங்கு காட்டுவதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை கலந்த தொணியிலும் அவரது உரை இருந்தது. பொதுவாகப் பார்க்கின்ற போது அவரது தேர்தல் கால மேடைப் பேச்சுக்களுக்கும் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றி உரைக்கும் மிக நெருக்கமான வார்த்தைகளைத்தான் அங்கு காண முடிந்தது. அவரது நாடாளுமன்ற உரை அப்படி இருக்க, இப்போது கடந்த சில நாட்களாக நடந்து வருகின்ற அரசியல் நிகழ்வுகள் தகவல்கள் பற்றி பார்ப்போம்.
நமது பத்தாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து உடனடியாக அமைச்சர்கள் நியமனங்களும் நடந்திருக்கின்றன. அத்தோடு முதலாவது நாடாளுமன்ற அமர்வும் மிகவும் எளிமையாக கடந்த 21ம் திகதி நடந்தது. அதனை சம்பிரதாயமாக ஜனாதிபதி அணுர குமார ஆரம்பித்து வைத்திருக்கின்றார். புதிய சபாநாயகராக கம்பஹாவைச் சேர்ந்த அசோக்க சபுமல் ரங்வெலவும் பிரதி சபாநாயகராக கொழும்பைச் சேர்ந்த டாக்டர் ரிஸ்வி சாலியும் தெரிவாகி இருக்கின்றார்கள்.
அமைச்சுக்களுக்கான உதவி அமைச்சர்களும் இப்போது நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த புதிய சபாநாயகர் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்ததால் கடந்த காலங்களில் நெருக்கடிகளுக்கு இலக்கானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த கால சம்பிரதாயங்களுடன் ஒப்பு நோக்கின்ற போது இந்தப் பத்தாவது பாராளுமன்றத்தில் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்களில் இருத்தி இரண்டு (22) பேரில் இருபது பேர் (20) ஏதோ துறைகளில் பட்டதாரிகள். அதிலும் ஆறுபேர் பேராசிரியர்கள். மூன்று பேர் வைத்தியர்கள். மூன்று பேர் பொறியியலாளர்கள். ஒருவர் சட்டத்தரணி. இந்த அமைச்சரவை தொடர்பாக ஆரோக்கியமாகத்தான் நாம் பார்க்கின்றோம்.
ஆனாலும் இன ரீதியாக பார்க்கும் போது முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் ஒரு வலி தெரிவதையும் சொல்லி ஆக வேண்டும். இது தொடர்பாக பிரிதொரு இடத்தில் சற்று விரிவாகப்பார்க்கலாம். அதே போன்று இளைஞர் விவகாரத்துக்கு ஒரு முதியவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதிலும் விமர்சனங்கள் வருகின்றன.
இவை எல்லாவற்றையும் விட இந்த அமைச்சரவை நியமனத்தின் பின்னர் ஜனாதிபதி அணுர ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. தெற்காசிய நாடொன்றில் இப்படியான ஒரு உரையைதான் முதல் முறையாகப் பார்த்ததாகவும் ஒரு புகழ் பெற்ற அரசியல் ஆய்வாலர் ஒருவர் பதிந்திருந்தார்.
அணுர அளவுக்கு மிஞ்சிய ஆதிகாரம் குவிந்திருக்கின்ற இடத்தில் ஊழல் மிகைப்படுவது இயல்பானது. கடந்த காலங்களில் இதனை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நமக்கு கிடைத்திருக்கின்ற இந்த மித மிஞ்ஜிய அதிகாரம் விடயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி அணுர அங்கு சுட்டிக் காட்டி இருந்தார்.
இந்த மிதமிஞ்சிய அதிகாரம் தொடர்பில் ஜேவிபி. செயலாளர் டில்வின் சில்வாவும் அச்சமும் எச்சரிக்கையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்த அமைச்சர் அவையில் ஒரு முஸ்லிம் இல்லாமல் போனதை விட ஹம்பாந்தோட்டை நிஹால் கலப்பத்தி காலி நளின் ஹேவகே குருணாகல நாமல் கருணாரத்தனா சமன்மலி போன்றவர்கள் கெபினட் அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனது நமக்கு சற்றும் ஜீரணிக்க முடியாமல் இருந்தது.
ஜேவிபி.யைக் கட்டிக்காப்பதில் இவர்கள் ஆற்றிய பங்களிப்புத்தான் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தன. அதே போன்று என்பிபி. செயலாளர் டாக்டர் நளின் அபேசிங்ஹ தான் எந்த அமைச்சுக்களையும் ஏற்கப் போவதில்லை என்றுத் டில்வின் பாணியில் தெரிவித்து விட்டதாகவும் நமக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது.
இந்த அமைச்சரவையில் அரைவாசிக்கும் குறைந்தவர்கள்தான் ஜேவிபி. காரர்களாக இருக்கின்றார்கள். ஏனையோர் என்பிபி.யுடன் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது உதவி அமைச்சர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜேவிபி. காரர்களாக இருக்கின்றனர்.
முன்பு முஸ்லிம்கள் தரப்பில் எழுப்பப்பட்ட ஆதங்கத்துக்கு ஒரு பதில் கிடைத்திருக்கின்றது. முனீர் முலவ்பர் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் இந்தப் பிரதி அமைச்சர் பதவி முஸ்லிம்களின் முன்னைய மனக்குறையை எந்த வகையிலும் ஈடு செய்யும் என்று நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அது அப்படியே இடைவெளியாக இருக்கின்றது.
ஜனாதிபதி அணுர இந்த அமைச்சரவைத் தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைவர் சிறீதரன் கடுமையாக விமர்சித்து வருகின்றார். ஏன் தமிழருக்கு கடற்றொலில் அமைச்சைத் தவிர வேறு அமைச்சுக்கள் இல்லையா? யாழ்ப்பாணத்தில் அல்லது மட்டக்களப்பில் வெற்றி பெற்ற ஒருவருக்கு கல்வி அல்லது நிதி அமைச்சை வழங்கி இருக்கலாமே என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
சரோஜா போல்ராஜ் அமைச்சரக வந்ததைக் கூட அவர்கள் ஜீரணிக்கத் தயாராக இல்லை. அத்துடன் இவர்களில் எவரும் வடக்குக் கிழக்கை சேராதவர்கள் என்றும் விமர்சனங்களும் நடந்து கொண்டுதான் வருகின்றது. சிறீதரனின் இந்த ஆதங்கம் எந்த வகையில் ஏற்புடையது என்று தெரியவில்லை. சரோஜா போல்ராஜ் கணவன் பேரினத்தைச் சேர்ந்த ஒரு வைத்தியராக இருப்பதால் ஓரக்கண் பார்வையோ இது?
ஏறக்குறைய நான்கு தாசப்தங்களுக்கு முன்பிருந்து இந்த நாட்டில் அதாவது ஜேஆர். ஜெயவர்தன காலம் முதல் இந்த நாட்டில் நியமிக்கப்பட்ட அனைத்த அமைச்சரவைகளும் ஆட்சியாளர்களின் அன்றைய ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பத்தான் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இந்த முறை அமைச்சரவை ஒரு தனி நபரது விருப்பு வெறுப்புக்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு நியமனம் செய்யப்படவில்லை என்பது மிகத் தெளிவு. இது தொடர்பான தகவல்கள் நமக்குக் கிடைத்திருப்பதால்தான் நாம் இதனை உறுதியாக இங்கு பதிகின்றோம்.
அப்படித் தான்தோன்றித் தனமான நியமனம் பெற்ற அமைச்சர்கள் பார்த்த வேலைகள்தான் இன்று நாட்டை இந்த ஆதாள பாதாளத்தில் கொண்டு போய் நிறுத்தி இருக்கின்றது. உயர் பதவியில் இருந்தவர்கள் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் என்ற அனைவரும் கடந்த காலங்களில் ஊழல் பேர்வழிகளாக இருந்தனர். அதற்கான சிறப்பான தண்டனைகளையும் இன்று மக்கள் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றார்.
அனுர தரப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றவர்களை மக்களுக்குத் தெரியாது. அதனால் அனுபவம் உள்ள பலரை நாடாளுமன்றத்துக்கு மக்கள் அனுப்ப வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் கெஞ்சிப் பார்த்தார். அதே நேரம் நீங்கள் சொல்கின்ற அனுபவசாலிகளில் ஒரு பத்துப்பேரை எங்களுக்கு பட்டடியலிட்டுக் காட்டுங்கள்.
அவர்கள் தொடர்பான அனுபவங்களை நாம் மக்களுக்குப் பட்டியல் போட்டுக் காட்டுகின்றறோம் என்று ஜனாதிபதி அணுர ரணிலுக்கு அனுபவம் பற்றிய பேச்சுக்கு சுவரில் எறிந்த பந்து போல பதில் கொடுத்தார். ஆனால் இன்றுவரை ரணில் அந்தப்பட்டியலை பகிரங்கமாக அறிக்கவில்லை. அத்துடன் அனுபவம் பற்றிய கதையையும் ரணில் அத்தோடு நிறுத்திக் கொண்டார்.
இந்தக் கட்டுரையை நாம் தயாரிக்கின்ற நேரம் வரை தேசியப் பட்டியலை சமர்ப்பிக்காத கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி-சஜித், புதிய ஜனநாயக முன்னணி-ரணில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-ஹக்கீம் தரப்புக்கள் இருக்கின்றன. சஜித் தரப்பில் பல முக்கியஸ்தர்கள் போட்டியில் இருப்பதால் தலைவர் சஜித் முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் இருக்கின்றார். இம்டியாஸ், ஜீ.எல், டக்லஸ், ஹிருணிகா, சுஜீவ, கிரிஎல்ல என்போரும் இன்னும் பலரும் அடம்பிடிக்கின்றார்கள். இதில் ஹக்கீம், ரிசாட், மனோ என்போரும் இருக்கின்றார்கள்.
தமது கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரியாமல் ரவி கருணாநாயக்க பெயரைக் கொடுத்தது பெரும் கலவரமாக மாறி இருக்கின்றது. ஆனால் இது ரணில் சம்மதத்துடன்தான் நடந்திருக்கின்றது என்பது இப்போது தெளிவாகி வருகின்றது. இந்த ரணிலும் ரவியும் அரசியலில் மிகவும் நெருங்கிய சகாக்கள் என்பது அனைவரும் அறிந்த கதை. இப்போது இது பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்த போது அங்கு போலியாக ரணில் ரவியை விமர்சித்து நடாகமாடி இருக்கின்றார் என்பது தெரிகின்றது.
மு.கா.வுக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு தேசிய பட்டியல் உறுப்புரிமைக்கு டசன் கணக்கானவர்கள் போட்டி நிலை இருக்கின்றது. அந்தப் பதவிக்கு செயலாளர் காரியப்பர் தனது பெயரை ரவி பாணியில் கொடுத்திருப்பார் ஆனால் அதில் சட்டச் சிக்கல் இருக்கின்றது. தலைவர் ஹரிசுக்குத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்த ஒரு கதையும் அங்கு இருக்கின்றது.