புதிய எல்லை நிர்ணயம் தெற்கில் இனச்சுத்திகரிப்பு உறுப்புரிமைக்கும் ஆப்பு!



  • ***  நஜீப் பின் கபூர்  ***

Election Commission Chairman Mahinda Deshapriya

1

நாம் அறிந்த வரை இந்த

புதிய எல்லை வடிவமைப்பு

சம்பந்தப்பட்ட அறிக்கைகளை

இந்த தனித்துவம் பேசுகின்ற

அரசியல்வாதிகள் தயாரிக்கவும் இல்லை

அவற்றை எல்லை நிர்ணயக் குழுவுக்கு

அனுப்பி வைக்கவும் இல்லை.

இதனால்தான் நமக்கு

இந்த நிலை என்பது முதலில்

நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”

2

நாம் தூக்கு மேடைக்குக்

கொண்டு வரப்பட்டு கழுத்தில்

தொண்டும் மாட்டி வைக்கப்பட்டிருக்கின்ற

நிலையில்தான் இப்போது

நமது பிரதிநிதித்துவம் பற்றி

பேசிக் கொண்டிருக்கின்றோம்.”

3

நாடாளுமன்றத்தில் இருக்கின்ற

சிறுபான்மைக் கட்சி முக்கியஸ்தர்கள்

மாவட்ட தேர்தல் எல்லைகள் வாக்குகள்

விடயத்தில் காட்டுகின்ற ஆர்வத்தை

இந்த உள்ளூராட்சி எல்லைகள் விவகாரத்தில்

ஒரு துளியேனும் காட்டவில்லை

ன்பதனை நாம் அடித்துக் கூறமுயும்.

அதனால்தான் இன்று உள்ளூராட்சி சபைப்

பிரதிநிதிதுவத்தில் நாம் இனச் சுத்திகரிப்புச்

செய்யப்பட்டிருக்கின்றோம்.”

தற்போது நாட்டு மக்களின் பொருளாதாரச் சுமைக்கு ஆட்சியாளர்கள் குழந்தைப் பிள்ளைக்கு முட்டாய் கொடுத்து சமாளிப்பது போல மிகச்சிறிய சலுகைகளை வழங்கி வருகின்றார்கள். அவர்களது இந்தச் சலுகைகள்கூட இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. தமிழ் சிங்களப் புத்தாண்டு நிறைவுடன் அவை பழையபடி உயர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த நிலையில் அரசாங்கம் புதிய பயங்கரவாதச் சட்டம் என்ற ஒன்றை மிக விரைவாக அமுல்படுத்தி அதன் மூலம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகள் மாணவர்கள் போராட்டங்கள் என்பவற்றை அடக்க முனைகின்றது.

ஆளும் மொட்டு மற்றும் ஜனாதிபதி ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை தவிர ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் போல் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் அறிந்த வரை நாடாளுமன்றத்தில் தனக்கு இருக்கின்ற 134 பெரும்பன்மையை வைத்து இந்தச் சட்டமூலத்தை அமுல் படுத்துவதற்கு ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன. மேலும் தற்போது எதிரணியில் இருக்கின்ற சிலரும் பட்டம் பதவி சலுகைகளுக்காக இந்த சட்டமூலத்தை ஆதரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அடுத்து வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகள் மஹவலி அபிவிருத்தி என்ற பெயர்களில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள காணிகளை ஏன் தனியார் காணிகளைக் கூட ஆக்கிரமிப்புச் செய்கின்ற நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. எப்போது எந்த நேரத்தில் வடக்குக் கிழக்கில் புத்தர் சிலைகள் முளைக்கும் என்பது யாருக்கும் தெரியாது.! பாதுகாப்பு படைத்தரப்பின் அனுசரனை கூட இவற்றுக்குத் தாராளமாகத் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றன. திருமலை குச்சவெளியில் சில தினங்களுக்கு முன்னர் விஐபி காவலர்களின் துணையுடன் வந்த பௌத்த தேரர்கள் இராணுத்தினரின் துணையுடன் அங்கு கட்டுமானப் பணிகளை நிருவ முயன்ற சம்பவங்களை சமூகவலைத் தளங்களில் பார்க்கக் கூடியாதாக இருந்தது.

இது தொடர்பான நாடாளுமன்றத்தில் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் ரவூப் ஹக்கீம் மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என்போர் கேள்வி எழுப்பிய போது பௌத்த கலாச்சாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமரத்ன தனக்கு இது பற்றி தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை அப்படி வந்தால் ஆராய்ந்து பதில் வழங்குவதகச் சொன்னார். குறிப்பிட்ட பௌத்த குருமாருக்கு அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவு எப்படி பாதுகாப்புக்கு வந்தது? துப்பாக்கியைக் காட்டி பொது மக்களை மிரட்டியது பற்றி அதே அமைச்சரைக் கேட்ட போது இது பாதுகாப்பு அமைச்சுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் அதனை அந்த அமைச்சில்தான் கோட்க வேண்டும் என்று அமைச்சர் பதில் வழங்கி நைசாக நழுவிக் கொண்டார்.

அன்றுதான் தமிழ் தரப்பினர் ஆயுதங்கள் தரித்து அரசுடன் மோதிக் கொண்டிருந்தார்கள். இன்று வெரும் கையுடன் இருக்கின்ற பொது மக்களை துப்பாக்கியுடன் வந்து மிரட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றது. இதற்குப் பதில் தருவதற்கு யாருமில்லை. இந்த நிலையில்தான் ஜனாதிபதி ரணில் இனப் பிரச்சினைக்கு 2023 சுதந்திரத்துக்கு முன்னர் தீர்வு தர முயன்றார்.! இது சுத்தமான நாடகம் என்பதை இதில் ஆர்வமாக இருந்தவர்கள் இன்றாவது உணர்கின்றார்களா? அவை அப்படி இருக்க நாம் இங்கு சொல்கின்ற விடயங்கள் எவ்வளவு மோசமான ஆக்கிரமிப்பு வன்முறை இனச்சுத்திகரிப்பு என்று ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.

இது உள்ளூராட்சி சபைகள் தொடர்பான விவகாரம். நமக்குத் தெரிந்த வரலாற்றுப் படி இந்த நாட்டில் இயக்கர் நாகர் ஆட்சி, அதற்குப் பின்னர் இந்தியாவில் இருந்து வந்த விஜயன், மன்னராட்சிக் காலம், தென்னிந்திய ஆக்கிரமிப்புகள் காலம், ஐரோப்பியர் வருகை,  குடியேற்ற நாட்டில் நம்மவர்கள் வாழ்ந்த காலங்கள். இந்த எல்லாக் காலங்களிலும் இங்கு பெரும்பான்மை சிறுபான்மை இனங்கள் என்று பல பிரிவு மக்கள் வாழ்ந்தார்கள். இன்று குறிப்பாக சிங்களவர்கள் தமிழர் முஸ்லிம்கள் கிருஸ்தவர்கள் மலேயர் பரங்கியர் தென்னிந்திய மக்கள் என்ற பிரிவினர் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் மக்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்திருக்கின்றனர். இன்றும் அப்படித்தான். அவ்வாறான இடங்களில் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் அந்தப் பிரதேசங்களில் சிறுபான்மையாகவும் இருந்து வந்திருக்கின்றனர். இது இயல்பானதும் இயற்க்கையானதும் என்று கூட சொல்ல முடியும். இப்படி வாழ்ந்த மக்கள் தமது பிரதேசங்களில் தமது சமய கலாச்சாரப் பாரம்பரியங்களை சுதந்திரமாக மேற்கொண்டும் வந்திருக்கின்றார்கள். அதே போன்று தமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மாகாணசபைப் பிரதிநித்துவம் என்று தமது சமூகங்கள் சார்பில் பிரதிநிதித்துவங்களைப் பெற்றும் வந்திருக்கின்றார்கள்.

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே சிறுபன்மை சமூகப் பிரதிநிதித்துவங்கள் இருந்தும் வந்திருக்கின்றது. மன்னராட்சி மற்றும் ஐரோப்பியர் காலத்தில் கூட இந்தப் பிரதிநிதித்துவம் இருந்து வந்திருக்கின்றன. இதில் உள்ளூராட்சிப் பிரதிநித்துவம் என்பது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஏதோவகையில் திருப்திக் கொள்ள முடியாவிட்டாலும் இங்குள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு அந்தந்த பிரதேசங்களில் அதற்கான பிரதிநிதித்துவ  உரிமைகள் இதுவரை பாதுகாக்கப்பட்டும் வந்திருந்தன. ஆனால் நாம் அறிந்த வரை வரலாற்றில் முதல் முறையாக தெற்கில் சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களின்  பிரதிநிதித்துவ உரிமைக்கு திட்டமிட்ட வகையில் இப்போது இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

அதே நேரம் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையினரான சிங்களவர்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற இடங்களில் இன்றும் அவர்களின் பிரதிநிதித்துவத்துக்கு பாதுகாப்பும் உத்தரவாதமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது இதுபற்றி நாம் சொல்ல வருகின்ற விடயத்துக்கு நேரடியாக வருவோம். தற்போது வர்த்தமானி வெளியிடத் தயார் நிலையில் இருக்கின்ற மஹிந்த தேசப்பிரியாவின் உள்ளூராட்சி வட்டாரங்களின் புதிய எல்லைகள் பற்றித்தான் நாம் இங்கு ஆராய இருக்கின்றோம். அதில்தான் தெற்கில் இந்த சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கு வேட்டு வைக்கப்பட்டிருக்கின்றது.

அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25 திகதியும் நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் தற்போது முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான புதிய உள்ளூராட்சி வட்டாரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சில வேலை அரசாங்கம்   ஏற்கெனவே அறிவிப்புச் செய்த தேர்தலை இரத்துச் செய்து விட்டு தேசப்பிரிய உறுப்பினர் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைத்திருக்கின்ற புதிய வட்டாரங்களின் அடிப்படையில் தேர்தலுக்கு அறிவிப்புச் செய்யவும் இடமிருக்கின்றது.

நமக்குக் கிடைத்திருக்கின்ற தகவல்களின்படி தெற்கில் சிறுபான்மை சமூத்தினர் பெருவாரியாக  வாழ்ந்த  வட்டாரங்களை புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் துண்டாடி அந்த வட்டாரங்கள் பேரின சமூகத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இதற்காக பேரின கிராம சேவகர் வட்டாரங்கள் புதிதாக அதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இது தென்னிலங்கையில் அனைத்து மாவட்டங்களலும் பரவலாக நடந்திருக்கின்றது.

இது தொடர்பாக நாம் ஏற்கெனவே அறியத் தந்த போது தங்கள் சிபார்சகளை நமக்கு முன்வைத்திருந்தால்  அது பற்றிப் பேசலாலம் அதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று மஹிந்த தேசப்பிரியவிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் நமக்குப் பதில் தருகின்றார். ஆனால் இது பற்றி கருத்துக்களை சிபார்சுகளைத் தரும்படி அரசியல் கட்சிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் தகவல்கள் அனுப்பி வைக்பட்டிருந்தன என்று கருத்தும் யதார்த்தமானது.

எல்லை நிர்ணய விவகாரத்தை பெரும்பான்மை இனத்தவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அப்படியான தேவைகளும் இல்லை. காரணம் தமது இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நேரடியாக இதில் ஈடுபடுவதால் தெற்கில் மட்டுமல்ல வடக்குக் கிழக்கில் அவர்கள் சிறுபான்மையினராக இருக்கின்ற இடங்களிலும் அவர்களது உறுப்புரிமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எஃகு இரும்புப் பாதுகாப்பு உத்தரவாதம் என்றும் இருந்து வருகின்றது. இது விடயத்தில் அவர்கள் விளிப்புடன் இருந்து வேலை பார்த்திருக்கின்றார்கள் என்பது புதிய வட்டாரங்கள் வடிவமைப்பில் அவதானிக்க முடிகின்றது.

எல்லை நிர்ணய குழுவால் சிறுபான்மை கட்சி முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்;ட சுற்றுநிருபங்களை அவர்கள் வழக்கம் போல் குப்பையில் இந்த முறையும் போட்டிருக்கின்றார்கள் என்பதும் தெளிவாகின்றது. நாம் அறிந்த வரை இந்த புதிய எல்லை வடிவமைப்பு சம்பந்தப்பட்ட அறிக்கைகளை இந்த தனித்துவம் பேசுகின்ற அரசியல்வாதிகள் தயாரிக்கவும் இல்லை அவற்றை எல்லை நிர்ணயக் குழுவுக்கு அனுப்பி வைக்கவும் இல்லை. இதனால்தான் நமக்கு இந்த நிலை என்பது முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அவற்றை உடனடியாக அனுப்பி வைக்குமாறு மஹிந்த தேசப்பிரிய நம்மிடத்தில் கேட்டிருக்கின்றார். எனவே இந்த செய்தியை நாம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி முக்கியஸ்தர்களின் அவதானத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

நாடாளுமன்றத்தில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சி முக்கியஸ்தர்கள் மாவட்ட தேர்தல் எல்லைகள் வாக்குகள் விடயத்தில் காட்டுகின்ற ஆர்வத்தை இந்த உள்ளூராட்சி எல்லைகள் விவகாரத்தில் ஒரு துளியேனும் காட்டவில்லை என்பதனை நாம் அடித்துக் கூறமுயும். அதனால்தான் இன்று உள்ளூராட்சி சபைப் பிரதிநிதிதுவத்தில் நாம் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டிருக்கின்றோம்.

நாம் தூக்கு மேடைக்குக் கொண்டு வரப்பட்டு கழுத்தில் தொண்டும் மாட்டி வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில்தான் இப்போது நமது பிரதிநிதித்துவம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். எனவே இது விவகாரத்தில் தெற்கிலுள்ள சிறுபான்மை சமூகத்தினர் தமது பலத்த கண்டனங்களைத் தெரிவித்து தமது உறுப்புரிமையைப் பாதுகாத்துக் கொள்ளும் நடடிவடிக்கைகளில் தாம் சார்ந்த அரசியல் தலைமைகளிடத்தில் அலுத்தங்களைக் கொடுத்து, விட்ட தவறுக்கு பரிகாரம் தேட வேண்டி இருக்கின்றது.  மேலும் நாடு பூராவிலுமுள்ள அரசியல் சிவில் சமூகங்கள் இது விவகாரத்தில் உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டும்.

சிறுபான்மை சமூகப் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்ட செயற்பாடு என்று இதனை நாம் சுட்டடிக் காட்ட முடியும். இது பற்றி ஆணைக் குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மேலும் கோட்டால் தான் இந்த எல்லை நிர்ணயத்தின் போது இனப் பிரதிநிதித்துவம் பற்றிக் கருத்தில் கொள்ளவில்லை என்பதனை அவர் ஏற்றுக் கொள்கின்றார். மொத்த வாக்காளர் எண்ணிக்கைக்குப் பிரதிநிதித்துவம் என்று தீர்மானங்களை எடுத்து இந்த வட்டாரங்களை நிர்ணயித்ததாக அவர் குறிப்பிடுன்றார்.

நாடு பூராவிலும் குறிப்பாக தெற்கில் இவ்வாறுதான் எல்லைகள் வடிவமைக்பட்டிருக்கின்றன. பிரதேச மட்ட அதிகாரிகள் திட்டமிட்டு தொடர்ச்சியாக இதுவரை  இருந்த சிறுபான்மை சமூகப் பிரதிநிதித்துவத்துக்கு நாடுபூராவிலும் வேட்டு வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு கண்டி மாவட்டத்திலுள்ள பாததும்பற பிரதேச சபையை ஓர் உதாரணமாக வைத்து இங்கு விளக்குகின்றோம். அங்கு 32 ஆக இருந்த பிரதிநிதித்துவம் தற்போது ஒன்பதாக (9) குறைக்கப்பட்டிருக்கின்றது.

அங்குள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 60965 பேர் இதில் 14000 பேர் (உடதலவின்ன, மடவளை) முஸ்லிம்களும் 1000 பேர்வரை தமிழர்கள். மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் இது 25 சதவீதம். இதுவரை சராசரியாக ஒவ்வொரு சபைகளிலும் ஐந்து-ஆறு வரையிலான சிறுபான்மைப் பிரதிநிதிகள் அங்கு தொடர்ந்தும் இருந்து வந்திருக்கின்றார்கள். இந்தப் புதிய வட்டாரங்களில் படி இதன் பின்னர் ஒரு உறுப்பினரைக் கூட அவர்களினால் அங்கு பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாக்கப்டடிருக்கின்றது.

இந்தப் பிதேச சபையில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்ற கிராம சேவர் பிரிவுகள் முறையே 611, 612, 637, 638, 639. குறிப்பிட்ட அனைத்து கிராம சேவர்கள் பிரிவுகளும் பின்வருமாறு பேரின கிராம சேவகர் பிரிவுகளுடன் தற்போது இணைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு நாம் அவற்றை அடைப்புக்குள் சுட்டிக் காட்டி இருக்கின்றோம். 611, 612 பிரிவுகள் மற்றும் 637,638 ஏற்கெனவே ஒன்றாக இணைக்கப்பட்டிருந்ததும் தற்போதய சொல்லப்படுகின்ற வாக்காளர் எண்ணிக்கையில் அது அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த பிரதேச சபையில் குறைந்தது மூன்று முஸ்லிம் வட்டாரங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அவை புவியல் ரீதியில் ஓரோ நிலத் தொடருடம் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அமைக்கப்படடிருக்கும் வட்டாரங்களின் முஸ்லிம் வாக்காளர்கள் சிதரடிக்கப்பட்டு உறுப்புரிமை பறிக்கப்பட்டிருப்தை பின்வரும் வட்டாரங்களில் இருந்து தெளிவாக அவதானிக்க முடியும். தெற்கில் சிதறி வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தினருக்கு இந்த நிலை என்றால்  இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் எப்படிக் கிடைக்க முடியும் என்று கேட்க வேண்டி இருக்கின்றது.

பாததும்பற பி.. புதிய வட்டாரங்கள் -9

1.மீகம்மன: 594, 601, 602, 603, (612).  

2.பொல்கொல்ல: 609, 610, (611)  615.

3.அபேசிங்ஹகம: 635, 636, (637) 639.

4.மடவள: 604: (638) 640, 641.

5.பிடியேகெதர: 595,596,597,633,634,(639),642,643,644,645

 

(ஏனைய வட்டாரங்கள் முறையே:

6.வத்தேகம: 594,598,599,600,620,621,622.

7.பரனகம: 623,624.625,627,628,631,632.

8.கஹல்ல: 605,606,608,613.614.

9.அபதென்ன: 616,617,618,619,629.630.)

என்ற கிராம சேவகர் பிரிவுகளுடன் இணைக்கப்ட்டிருக்கின்றன. பாததும்பற ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று தெற்கில் பரவலாக தமிழ் முஸ்லிம் பிரதிநித்துவங்கள் இனச்சுத்திகரிப்புக்கு இலக்காகி இருக்கின்றன. சிறுபான்மை சமூகங்களின் உரிமைக்காக அரசியல் கட்சி வைத்திருப்பவர்கள் இதற்கு நமக்குத் தரும் பதில் என்ன என்பது கட்டுரையாளனின் கேள்வியாகும்?

நன்றி: 09.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மாமன் மருமகன் விளையாட்டு!

Next Story

அல்-அக்ஸா மசூதிக்காக முட்டிக்கொள்ளும் முஸ்லிம்களும் யூதர்களும்: என்ன காரணம்?