ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 15ம் தேதி அலாஸ்காவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்புக்கான சுற்றுப்பயணத்தின்போது விளாடிமிர் புதினின் பாதுகாவலர்கள் Poop Suitcase-யை கையுடன் எடுத்து சென்றதாவும், அந்த சூட்கேஸில் புதினின் மலம், சிறுநீரை சேகரித்து மீண்டும் ரஷ்யா கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புதினின் பாதுகாவலர்கள் இப்படி செய்வது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் நேரடியாகவும், புதினிடம் தொலைபேசியிலும் டிரம்ப் பேசி வந்தார்.

இந்நிலையில் தான் உக்ரைன் போருக்கு பிறகு நேற்று முதல் முதலாக டிரம்ப் – விளாடிமிர் புதின் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் இருவரும் சந்தித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தனி சூட்கேஸ்
இருப்பினும் டிரம்ப் – புதின் இடையேயான சந்திப்பு என்பது அமெரிக்கா -ரஷ்யா இடையேயான மோதலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது விளாடிமிர் புதின் குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிரம்ப் சந்திப்பின்போது விளாடிமிர் புதினின் பாதுகாவலர்கள் அலஸ்காவிற்கு Poop Suitcase எனும் மலம் சேகரிக்கும் சூட்கேஸை கையில் எடுத்து சென்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பத்திரிகையாளர்கள் சொன்ன தகவல்
அந்த சூட்கேஸில் புதினின் மலம், சிறுநீரை தனியே சேகரித்து மீண்டும் ரஷ்யா கொண்டு வந்துள்ளனர். இதற்கென சிறப்பு பை மற்றும் சூட்கேஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ‛தி எக்ஸ்பிரஸ் யுஎஸ்’ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மேட்சில் எனும் பத்திரிகையில் புலனாய்வு பத்திரிகையாளர்களாக உள்ள மிகைல் ரூபின் மற்றும் ரெஜிஸ் ஜென்டே ஆகியோரை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

என்ன காரணம்?
இதற்கு முக்கிய காரணம் புதினின் உடல்நலம் குறித்த விஷயங்களை ரகசியமாக வைப்பது தான். சமீபகாலமாக புதினின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதுபற்றி இன்னும் புதின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.
இப்படியான சூழலில் புதினின் இயற்கை உபாதையை வெளிநாட்டினருக்கு கிடைத்தால் அதனை ஆய்வு செய்து அவரது உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும், வெளியுலகிற்கு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது.
2017 முதல் தொடரும் நடைமுறை
இதனை தடுக்கும் வகையில் தான் புதினின் அலஸ்கா விசிட்டின்போது அவரது பாதுகாவலர்கள் மலம் சூட்கேஸை கையிலேயே எடுத்து சென்றுள்ளனர். விளாடிமிர் புதினின் பாதுகாவலர்கள் இப்படி செய்வது ஒன்றும் புதிது அல்ல. இந்த நடைமுறை கடந்த 2017 ம் ஆண்டில் இருந்து தொடங்கி இப்போது வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மே 2017 ல் பிரான்ஸ் நாட்டுக்கு விளாடிமிர் புதின் சென்றபோது பாதுகாவலர்கள் Poop Suitcase-யை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். 1999ம்ஆண்டுக்கு முன்பும் சில தலைவர்கள் இத்தகைய நடைமுறையை பின்பற்றி உள்ளனர்.





