சமீபத்தில் கம்போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சண்டை நடந்திருந்தது. இதனையடுத்து தற்போது தாய்லாந்து பிரதமர் பேட்டோங்டார்ன் ஷினவத்ரா நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த உத்தரவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. கம்போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையில் நடந்த மோதல் சமீபத்தில் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த விவகாரத்தில்தான் தாய்லாந்து பிரதமர் சிக்கியிருக்கிறார்.
போர் குறித்த கம்போடியா பிரதமருடன், தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா போன் மூலமாக பேசியிருந்தார். இந்த பேச்சுவார்த்தை ஆடியோ வெளியில் கசிந்தது.
அதில் தனது சொந்த இராணுவத் தளபதிகளில் ஒருவரை விமர்சித்ததும், சமாதானமாக பேசியதும் பதிவாகியிருந்தது. இதுதான் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஒரு பிரதமர் சண்டை நடக்கும் எதிரி நாட்டுடன் பேசும்போது காட்டமாக பேசியிருக்க வேண்டும்.
ஆனால் அப்படி செய்யவில்லை. மட்டுமல்லாது சொந்த நாட்டு ராணுவ தளபதியை எதிரி நாட்டு தலைவரிடம் விட்டுக்கொடுத்து பேசியிருக்கிறார். இது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இதை வழக்காக விசாரிக்க தொடங்கியது. வழக்கை தொடர்ந்து விசாரித்த ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட இந்த நீதிமன்றம், பேட்டோங்டார்ன் ஷினவத்ரா நிரந்தரமாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது.