“பிரதமரின் பட்டப்படிப்பை தெரிந்துகொள்ள உரிமை இல்லையா?” –  கேஜ்ரிவால்

பிரதமர் நரேந்திர மோதியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்குமாறு கூறிய மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியின் முதுகலை பட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வழங்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை இன்று(31/03/2023) குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பிரதமர் நரேந்திர மோதி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்

அதுமட்டுமின்றி கேஜ்ரிவாலுக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் பெர்சி கவினா பிபிசியிடம் தெரிவித்தார்.

அதோடு, இந்த உத்தரவை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டுமென்ற கேஜ்ரிவாலின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் கவினா கூறினார்.

2016ஆம் ஆண்டு அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோதியின் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்குமாறு கோரி மத்திய தகவல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்தைப் பரிசீலித்த அப்போதைய மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாரியலு, நரேந்திர மோதி முதுகலை பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் நகலை அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.

மத்திய தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பிரேன் வைஷ்ணவ் முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையில் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகல்களை வழங்க முடியாது. பிரதமர் பட்டம் பெற்றதன் விவரங்கள் ஏற்கெனவே பொதுவெளியில் உள்ளன. இது மாணவர்களின் தனி உரிமையை மீறும் செயல். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவது தவறு,” என்றும் வாதாடினார்.

அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பெர்சி கவினா இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழகத் தரப்பு வாதிடுவதைப் போல் பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்கள் பொதுவெளியில் இல்லை என்று தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டில் மத்திய தகவல் ஆணையம் தானாக முன்வந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மோதியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களைப் பகிரங்கப்படுவதற்கான உத்தரவை நிறைவேற்றியது.

இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், பிரதமருடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டுமென்ற உத்தரவில் பெரிய பொதுநலன் எதுவுமில்லை என்று அது குறிப்பிட்டது.

பிரதமர் நரேந்திர மோதி

“பிரதமரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதில் எந்தவொரு பெரிய பொதுநலன் நோக்கமும் இல்லை. மத்திய தகவல் ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுநலன் நோக்கம் எதுவுமில்லாத மோதியின் பட்டப்படிப்பு விவரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென்ற ஒரு தவறான உத்தரவை நிறைவேற்றுகிறது,” என்று குஜராத் பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டு, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியது.

மேலும், “யாரோ ஒருவரது குழந்தைத்தனமான ஆர்வத்தை திருப்திப்படுத்துவதற்காகவோ அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவதற்கு வழி செய்யும் வகையிலோ பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட வைப்பதற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தலாமா?” என்றும் பல்கலைக்கழகம் தரப்பு வாதிட்டது.

அதுமட்டுமின்றி, அவரது பட்டம் ஏற்கெனவே தனது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குஜராத் பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மாணவர்களுடனான நம்பிக்கையான உறவின் காரணமாக, மாணவர்களின் தகவல்களை வெளியிட முடியாது என்று கூறிய பல்கலைக்கழகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8இன் கீழ் விவரங்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டது.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரேன் வைஷ்ணவ், “பிரதமர் நரேந்திர மோதியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை குஜராத் பல்கலைக்கழகம் வழங்கத் தேவையில்லை” என்று கூறி, அந்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, “பிரதமரின் பட்டப்படிப்பைத் தெரிந்து கொள்ளக்கூட ஒரு நாட்டுக்கு உரிமை இல்லையா? சான்றிதழ் நகலைக் காட்ட நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பது ஏன்? அவரது பட்டப்படிப்பு சான்றிதழ் நகலைப் பார்ப்பது தவறா?

என்ன நடக்கிறது? படிப்பறிவற்ற அல்லது குறைவான படிப்பறிவுடைய ஒரு பிரதமர் நாட்டிற்கு ஆபத்தானவர்,” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Previous Story

மனித உரிமைக்கு IMF வேட்டு! 

Next Story

ஏப்ரல் 4ம் திகதி அதிரடிகள்!