பிரதமராகும் ஜனாதிபதி ரணில்!

-நஜீப் பின் கபூர்-

The president's choice for Chief Justice is no respecter of the law • Sri Lanka Brief

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாவதும் அமைச்சர்கள் பிரதமராவதும் பிரதமர்கள் ஜனாதிபதியாவதும். மன்னர்கள் பிள்ளைகள் அவர்களுக்குப் பின்னர் பதவிக்கு வருவதும் இயல்பானவை. இவை அனைத்துக்கும் மாற்றமாக இந்த சம்பிரதாயங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு சில மனிதர்கள் நாடுகளின் தலைவர்களாக வந்த வரலாறுகளும் நிறையவே இருக்கின்றது. அவ்வாறு பதவிகளில் அமந்தவர்கள் சிலர் நல்ல ஆட்சியாளர்களாகவும் ஹீரோக்களாகவும் கூட பதவியில் வகித்திருக்கின்றார்கள்.

இதே போன்று தேர்தல்களின் மூலம் பதவிக்கு வந்து நல்லாட்சி செய்த தலைவர்களும் இருக்கின்றார்கள். அவர்களின் நீண்ட பட்டியலையும் நாம் இங்கு சொல்ல வரவில்லை. நமது இருப்புக்காக அரசியல் யாப்புக்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள் மற்றும் தமக்குத் தேவையான வகையில் அரசியல் யாப்புக்களை மாற்றி அமைத்துக் கொண்டு நம்மை ஆட்சி செய்தவர்கள் குறிப்பாக 1948 முதல் இன்றுவரை உள்ள ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் யாப்புக்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

அத்தோடு இன்றைய ஜனாதிபதி ரணில் பிரமதராகப் போகின்றார் என்ற நமக்குக் கிடைத்திருக்கின்ற சில தகவல்களையும் பற்றித்தான் நாம் இந்த வாரம் பேசப் போகின்றோம். சுதந்திரத்துக்குப் பின்னர் 1972ம் ஆண்டு வரை ஆங்கிலேயர் நமக்கு அமைத்துக் கொடுத்த அரசியல் யாப்பின் படிதான் இங்கு ஆட்சி அதிகாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர் ஸ்ரீ மா அம்மையார் காலத்தில் கொல்வின் ஆர்.டி சில்வாவால் உருவாக்கப்பட்ட குடியரசு ஆட்சி முறையொன்று இங்கு ஏற்படுத்தப்பட்டது. அதுவரை பிரித்தானியாவின் மன்னரின் பிரதிநிதியாக இலங்கையின் தேசாதிபதி வில்லியம் கொபல்லாவ பெயரளவிலான ஜனாதிபதியாக புதிய அரசியல் யாப்பின் படி நியமனம் பெற்றார். பாராளுமன்றத்துக்கு அனைத்து அதிகாரங்களும் வந்தது.

ranil unp - Counterpoint

சோசலிச நாடுகளின் செல்வாக்கு ஆதிக்கம் பெற்றிருந்த அந்த நாட்களில் குடியரசு அரசியல் யாப்பை நாட்டில் தோற்றுவித்ததால் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் ஸ்ரீ மா அம்மையாரின் இந்த முயற்சியைப் பாராட்டி கௌரவித்தது. இந்தப் பின்னணியில் அவர் அன்று உலகில் மிகவும் செல்வாக்காக இருந்த அணிசேர நாடுகளின் ஜனரஞ்சகம் மிக்கத் தலைவராகவும் பதவியில் அமரமுடிந்தது.

ஸ்ரீ மாவோ அம்மையாரின் இந்த குடியரசு அரசியல் யாப்பை அப்போது அவருக்கு போட்டியாளராக இங்கு அரசியல் செய்த ஜே.ஆருக்கு சற்றும் பிடிக்கவில்லை. காரணம் அவர் மேற்கத்திய விசுவாசியாக இருந்து அரசியல் செய்தமையாகும்.

அதனால் அடுத்து வந்த தேர்தலில் ஸ்ரீ மாவோ அம்மையார் தோற்றுப் போனதால், அதிகாரத்தக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தனக்குப் பிடிக்காத குடியரசு அரசியல் யாப்புக்குப் பதிலாக 1978ல் புதியதோர் அரசியல் யாப்பை உருவாக்கி பதவியைத் தொடர்ந்தார்.

அவர் காலத்தில் தான் முதல் முறையாக குடம் விளக்கு என்ற சர்வசன வாக்கொடுப்பும் நாட்டில் நடைபெற்றது. அத்தோடு ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையையும் அவர் இரத்துச் செய்து பலிதீர்த்துக் கொண்டார்.

ஆணைப் பெண்னாக்கவும் பெண்னை ஆணாக்கவும் மட்டுமே முடியாது என்ற ஜே.ஆரின் வல்லாதிக்கம் மிக்க அரசியல் யாப்பு சில தசப்தங்கள் வரை இங்கு நீடித்தது. அந்த அரசியல் யாப்பில் இருந்த அதிகாரங்களை ஜே.ஆர். பாவிக்காத அளவுக்கு சிலர் தன்னலத்துக்காகப் பாவித்ததால் நாடு இன்று இந்த அவல நிலைக்கு வந்தது என்று குறிப்பிட முடியும்.

அதற்குப் பின்னர் மைத்திரி-ரணில் நல்லாட்சி காலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவுக்குக் குறைக்கப்பட்டாலும் அது காய் கனிவதற்கு முன்பே கிளை முறிந்து விழுந்தது போல நல்லாட்சியில் மைத்திரி-ரணில் முறுகளினால் பலன் கிடைக்கமால் போனது. அத்துடன் அவர்கள் அதிகாரமும் முடிவுக்கு வந்தது.

இந்த வாய்ப்பைத் தமக்கு சாதகமாக பவித்துக் கொண்ட ராஜபக்ஸாக்கள் மொட்டுக் கட்சியை அமைத்து மக்களுக்கு களனிப் பாம்பையும் வெடி குண்டையும் காட்டி பௌத்த பேரினவாதத்தை உசுப்பி மீண்டும் அதிகாரத்துக்கு வந்து மைத்திரி-ரணில் நல்லாட்சியில் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களையும் குறைக்கின்ற அனைத்து சரத்துக்களையும் யாப்புத் திருத்தத்தின் மூலம் மூலம் இல்லதொழித்ததுடன், ஜே.ஆர் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று போட்டிருந்த விதியையும் நீக்கி மஹிந்த ராஜபக்ஸாவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் நகர்வுகளை மேற்க் கொண்டனர்.

ஆனால் விதி அதற்கு மற்றமாக விளையாட, ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தை கைவிட்டு உயிர் தப்பினால் போதும் என்று ஓடி ஒழிக்க வேண்டி வந்தது. சில காலம் பெரும் செல்வாக்குடன் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ வெளிநாடுகளில் ஓடினார். இவை அனைத்தும் அண்மைய சம்பவங்களாக இருப்பதால் அவை மக்கள் மனங்களில் இன்றும் நினைவில் இருக்கும் என்பதால் அவற்றை நாம் இங்கு விரிவாக சொல்ல வேண்டி இருக்காது.

அதன் பின்னர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐ.தேக. தலைவர் ரணில் ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்த கதையும் நாம் கண்முன்னே பார்த்த காட்சிகள். அது பற்றியும் இங்கு கருத்துச் சொல்ல வேண்டி தேவை இல்லை. எனவே ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருக்கும் ரணில் பிரதமராக வர இருப்பது பற்றிய கதைகளையும் அதன் பின்னணி பற்றியும் சற்று விரிவாக இப்போது பார்ப்போம்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற சில ரணில் விசுவாசிகள் அவரைத் தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்துப் பிழைக்க முனைவதால், ரணில் நாட்டை சீரழிவில் இருந்து மீட்டுக் கொண்டு வருகின்றார். அவருக்கு இன்னும் சில காலத்தை குறைந்தது ஐந்து வருடங்களையாவது மேலும் கொடுக்க வேண்டும். மக்களுக்கு தேவைப்படுவது தேர்தல் அல்ல வாழ்வுதான்.!

Cartoon of the day | Daily News

அதனை ரணில் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தேர்தல் எதற்கு என்பது அவர்கள் வாதம். இவர்களின் ரணில் சாகாக்களான வஜிர அபேவர்தன, ரங்கே பண்டார போன்றவர்கள் முக்கியமானவர்கள். அதே போன்று ஆளும் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற சிலரும் இந்த கருத்தை அங்கிகரித்துப் பேசி அதன் மூலம் அரசியல் இலாபங்களையும் பதவிகளையும் பெற்றுக் கொண்டு சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ரஜபக்ஸாக்களில் எவரும் இது விவகாரத்தில் வாய்திறக்காமல் எங்களுக்கும் தேர்தல் வேண்டும்.! அது மக்களின் உரிமை என்று கதைக்கின்றார்கள் ஆனால் அவர்கள்தான் தேர்தலுக்கு ஆப்பு வைக்கின்ற சதியிலும் தலைமறைவாக இருந்து செயலாற்றுக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.

மொட்டுக் கட்சிக்குல் பல அணிகள் இருக்கின்றன என்பது உண்மைதான், ஆனால் அப்படி அணி பிரிந்து ஆட்டமாடுகின்ற பலர், காசுக்காக விளையாட்டை விற்க்கின்ற வீரர்கள் நிலையில்தான் இருக்கின்றார்கள். எனவே ஆளும் தரப்புக்கு ஏதாவது ஒரு விடயத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவை என்ற நிலை வரும் போது இவர்கள் விற்பனைக்குத் தயாராகத்தான் இருப்பார்கள். அது நாம் கடந்த காலங்களில் நேரடியாகப் பார்த்த காட்சிகள்.

இன்று நாடாளுமன்றிலும் எதிரணியில் இருக்கின்ற உறுப்பினர்கள் எவரையும் நம்ப முடியாது. தற்போது மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் விவகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு விவகாரத்தில் நமக்கு சில சந்தேகங்கள் வருகின்றன. இதற்கு முன்பும் இப்படியான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட போது இது போன்ற தீர்ப்புக்களை நீதிமன்றங்கள் வழங்கவில்லை.

அப்படி இருக்க இந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு மூலம் ஆளும் தரப்பில் பல்டிகளுக்கு எச்சரிக்கையைக் கொடுத்து அவர்களைத் தமது பிடிக்குள் தொடர்ந்தும் வைத்துக் கொள்ள சதிகள் நடக்கின்றனவோ என்று சந்தேகிக்க வேண்டி வருகின்றது. இதற்கு முன்னர் சில தீர்ப்புக்களை வழங்கியவர்கள் நாம் அன்று பக்கச் சார்பான தீர்ப்புக்களைக் கொடுத்து சிலரை காப்பாற்றி இருக்கின்றோம் என்று கொடுத்த வாக்குமூலங்கள் குறிப்பாக சரத் என் சில்வா ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை விவகாரத்தில் இப்படியான ஒரு கருத்தை சொல்லி இருந்தது நமக்கு நினைவுக்கு வருவதால் இந்த சந்தேகம்.

மொட்டுக் கட்சி மஹிந்தானந்த அலுத்கமகே சில தினங்களுக்கு முன்னர் நாவலப்பிடியாவில் ஒரு வைபவத்தில் பேசும் போது இன்னும் இரண்டு வருடங்களில்தான் நாட்டில் தேர்தல் வரும் என்று சொல்லி இருந்தார். இதற்கு முன்பு ஜனாதிபதித் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கு சிலர் முயன்று கொண்டிருக்கின்றார்கள் என்று ஜேவிபி தலைவர் அணுரகுமர திசாநாயக்க பகிரங்கமாகப் பேசி இருந்தார்.

அதே கட்சியைச் சேர்ந்த லால் காந்த இவர்கள் தேர்தலை நமக்குத் தட்டில் வைத்து ஒரு நாளும் தரமாட்டார்கள். மக்கள் போராடித்தான் அதனைப் பொற்றுக் கொள்ள வேண்டி வரும். அதற்காகத்தான் இப்போது நாம் மக்களைத் தெளிவு படுத்திக் கொண்டு வருகின்றோம் என்று சில வாரங்களுக்கு முன்னர் பேசி இருந்தார். ஆனால் நாம் ரணில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்த நாளில் இருந்தே அவர் தேல்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராக இல்லை, எனவே ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் ஆப்புத்தான் என்று அன்றே சொல்லி இருந்தோம். அதனை அடிக்கடி ஞாபகப்படுத்தியும் வந்திருக்கின்றோம்.

Dhammika Perera sworn in as a Member of Parliament

இலங்கையில் இருக்கின்ற நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கருத்து மக்களிடத்தில் நீண்ட நெடு நாட்களாக இருந்து வருகின்றது. எனவே ஜனாதிபதித் தேர்தலைத் தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்து, ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு மீண்டும் நாடாளுமன்றத்தக்கு அதிகாரங்களை வழங்கும் யோசனையை முன்வைத்தால் அதனை எவரும் எதிர்க்க முடியாது. ஏற்கெனவே இந்த யோசனைக்கு சஜித் அணி மற்றும் ஜேவிபி ஆதரவான நிலைப்பாட்டில் பேசி வந்திருக்கின்றன.

எனவே அவர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தால் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என்று ரணில்-ரஜபக்ஸாக்கள் இப்போது கணக்குப் போடுகின்றார்கள். இதன் மூலம் நாம் வழக்கமாக சொல்வது போல கடைசி நிமிடம் வரை இவர்கள் அதிகாரத்தில் இருக்க முனைகின்றார்கள் என்பது தெளிவானது. இதன் மூலம் மேலும் ஒரு வருடம் பதவியை நீடித்துக் கொள்ளும் ஒரு எதிர்பார்ப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது.

ஆனால் அவர்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும் என்று சொல்ல முடியாது. நாடாளுமன்றதில் நாம் குறிப்பிடுவது போல பதவிகளையும் பணத்தையும் கொடுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இந்த பிரரேணக்குப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தாலும் இதற்கு கருத்துக் கணிப்பும் கோர வேண்டி இருக்கின்றது.

இதற்கு முன்னர் ஜே.ஆர். காலத்தில் இப்படி ஒரு நிகழ்வு உதாரணமாக வரலாற்றில் இருக்கின்றது. இதனால்தான் இந்த சதியைத் தேற்க்கடிக்க ஜேவிபி புதிய வியூகம் ஒன்றை இப்போது மக்கள் முன் எடுத்துச் செல்கின்றது.

Anura Kumara Dissanayake receives life threats . - Sri Lanka News

அதன்படி ஜனாதிபதி முறையை நீக்கும் பிரேரணைக்கு நாமும் ஆதரவு அதே போன்று அந்தப் பிரேரனையை முன்வைக்கின்ற போதே உடனடியாக பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என்ற உத்தரவாதம் அதே பிரேரணையில் சொல்லப்பட்டிருந்தால் மட்டுமே நாம் அதற்கு இதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்ற நிபந்தனைகளை விதிதப்பது பற்றி தற்போது அவர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள்.

நாடாளுமன்றத்தில் இதனை ஆளும் தரப்பு நிறைவேற்றிக் கொண்டாலும் இந்த நாடாளுமன்றத்தை கலைக்கும் விவகாரத்தை முன்வைத்து கருத்துக் கணிப்பில் அதனைத் தேற்கடிக்கும் ஒரு முயற்சியும் அவர்களிடத்தில் ஆராயப்படுகின்றது என்று நமக்குத் தெரிய வருகின்றது.

இப்படியான ஒரு யோசனையை ரணிலுக்கு முன்வைத்திருப்பது மொட்டுக் கட்சி கோட்பாதர் பசில் என்றும் சொல்லப்படுகின்றது. இதன் மூலம் இதுவரை நிறைவேற்று அதிகாரம் தமக்கு வேண்டும் என்று பேசிய வந்த ராஜபக்ஸாக்களின் இந்த அந்தர் பல்டிக்கு மீண்டும் மக்கள் ஏமாறுவார்களா என்று நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் தங்களால் முடிந்த வரை அதிகாரத்தில் இருப்பதற்குத்தான் ரணில்-ரஜபக்ஸா தரப்பினர் முயன்று கொண்டிருக்கின்றார்கள் என்பது இதன் மூலம் தெரிகின்றது.

அவர்களின் இந்தத் தந்திரம் மூலம் தங்களிடம் இருந்து விலகிப் போனவர்களையும் மீண்டும் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டு திரும்பவும் மொட்டுக் கட்சியைப் பலப்படுத்துவதுதான் பசில் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அப்படி இவர்கள் வெற்றி பெற்றால் இன்று ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில்தான் மீண்டும் அதிகாரம் மிக்க பிரதமராகவும் கதிரையில் அமரப் போகின்றார். அதற்கான உத்தரவாதமும் அவருக்கு ராஜபக்ஸாக்களிளால் கொடுக்கபட்டிருக்கின்றது என்று ஒரு செய்தி.

இதற்கிடையில் 2024 வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கின்றது என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் இது எந்தத் தேர்தலுக்கு என்று இன்னும் தெரியாவிட்டாலும் 2024 நவம்பர் பதினெட்டாம் திகதி புதிய ஜனாதிபதி பதிவியேற்க வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்பு தேர்தல் அறிவிப்பு பிரச்சார நடவடிக்கைள் என்பனவற்றுக்கும் காலம் நிர்ணயிக்க வேண்டி இருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் இப்போது இருக்கின்ற உறுப்பினர்களில் உச்ச பட்சம் 134 பேரின் ஆதரவை ரணில்-ராஜபக்ஸாக்கள் பெற்றுக் கொள்ள முடியும். இன்னும் 16 பேரை விலைக்கு வாங்கி அவர்கள் இதில் வெற்றி பெற்றாலும் அல்லது ஒட்டு மொத்த உறுப்பினர்கள் 225 பேரின் ஆதரவைப் பெற்றுக் கொண்டாலும் மக்கள் கருத்துக் கணிப்புக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது.

திலித் ஜயவீர தற்போது தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரச் செயலகத்தை உத்தியோகபூர்வமாக கொழும்பில் திறந்திருக்கின்றார். அவர் மவ்பிம கட்சி வேட்பாளராக வருகின்றார். இந்தக் கட்சி வாசுதேவ நாணயக்காரவின் சகோதரர் ஹேமக்குமார நாணயக்காரவுக்கு ஏற்கெனவே சொந்தமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் வந்து இணைந்து கொள்ள இருக்கின்றார்கள் என்று திலித் தனக்கு விசுவாசமானவர்களிடத்தில் கூறி நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

இவர் தன்னை ஜனாதிபதி ரணில் மற்றும் கோட்டா ஆதரிப்பார்கள் என்றும் நம்புவதாகவும் தெரிகின்றது. தம்மிக்க பெரேரா ஆளும் தரப்பு வேட்பாளர் என்று ஒரு கதை. ஆனால் அவர் ராஜபக்ஸாக்களின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக களத்தில் குதிப்பதில் ஆர்வமாக இருக்கின்றார். தனது எதிர்காலத் திட்டங்களை அவர் தற்போது மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வருகின்றார்.

இதற்கிடையில் சஜித்-பொன்சேக்க மோதல் உச்ச கட்டத்தில் இருக்கின்றது. பீல்ட் மார்ஷலை களத்துக்கு கொண்டு வருவதற்கு கலிமுகத்திடல் போரட்டக்காரர்கள் குழுவில் சிலர் முயன்று வருவதாகவும் தெரிகின்றது. அவருடன் தற்போது நாடாளுமன்றததில் இருக்கின்ற டயனாவின் கணவனும் இருப்பதாகத் தெரிகின்றது.

என்னதான் ஜனாதிபத் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் இருந்தாலும் தேர்தலுக்கான எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் மக்களிடத்திலும் அரசியல் கட்சிகளிடத்திலும் மேலோங்கிக் கொண்டு வருவதையும் அதற்கான ஆயத்தங்கள் நடப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

நன்றி: 15.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காசா மக்களின் தினசரி வாழ்க்கை விளக்கம்!

Next Story

ஹமாஸ் குழுவினரின் ரகசிய சுரங்கங்கள்