பிஞ்சுகள்.. “உடல் உறுப்புகள் விற்பனைக்கு”ஆப்கன் வறுமை

நாளுக்கு நாள் ஆப்கன் மக்களின் நிலைமை பரிதாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. பசி, பட்டினியால் அம்மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.. இப்போது தங்கள் கிட்னியை விற்று சாப்பிடும் நிலைமைக்கும் ஆளாகி உள்ளனர்..!

ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கிறது.. காரணம், பல்வேறு நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை ஏற்கனவே முறித்து கொண்டுவிட்டன.. பல்வேறு உலக நாடுகள் ஆப்கனை தனிமைப்படுத்தியும் விட்டன..

இதுவே கடுமையான பொருளாதார நெருக்கடியை அங்கு ஏற்படுத்தி விட்டது.. அந்த நாட்டின் நாணய கொள்கையும் பலவீனமடைந்து விட்டது.. அமெரிக்கா 9400 கோடி டாலர்கள் ரிசர்வ்வை வங்கியிலிருந்து நிறுத்தி வைத்து விட்டது..

நிதியுதவி

சர்வதேச நிதியம், உலக வங்கிகளும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதையும் நிறுத்திவிட்டன… தலிபான்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்று 39 நாடுகளை கொண்ட நிதி தடுப்பு குழுவும் எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த நிலையில், தலிபான் அரசாங்கமானது அளவுக்கதிகமான நிதிப்பற்றாக்குறையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது..

உலக நாடுகள்

சீனாவிலிருந்து பெரிய முதலீடுகளையும், அமெரிக்காவிடம் இருந்து உதவிக்கரத்தையும் தலிபான்கள் நீட்டியுள்ளனர்… இதுபோக, இந்தியா உள்ளிட்ட வேறு சில நாடுகளிலுடமும் உதவியை எதிர்நோக்கி உள்ளனர்.. அடுத்த மாதம் ஆப்கனுக்கு கோதுமையை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.. எனினும், ஆப்கனின் நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலைமையோ அதைவிட மோசமாகி கொண்டுள்ளது.

ஆப்கன் மக்கள்

இங்கு, சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது… ஆப்கன் மக்களுக்கு சமீபகாலமாகவே வேலைவாய்ப்பு இல்லை.. கையில் காசும் இல்லை.. பட்டினியும் வறுமையும் பின்னி எடுத்து வருகிறது.. அதனால் 2 மாதங்களாகவே, தங்களது வீட்டில் உபயோகித்து கொண்டிருக்கும் பொருட்களை தெருக்களில் கொண்டு வந்து விற்கும் அளவுக்கு படுமோசமான நிலைமை ஏற்பட்டு விட்டது.

பட்டினி

தெருக்களில் பொருட்களை விற்பதால், அந்த பொருட்களுக்கு உரிய பணமும் கிடைப்பதில்லை.. இதில் ஓரளவு கிடைக்கும் பணத்தை வைத்துதான், குடும்பமே சாப்பிடும் நிலைமை அங்கு உருவானது.. இதற்கு பிறகு தங்கள் வீட்டு பெண் குழந்தைகளை வறுமைக்காக விற்கும் முடிவுக்கும் சென்றனர்.. இப்போதோ, நிலைமை அதைவிட அங்கு மோசமாகிவிட்டது.. சுமார் 2.2 கோடி மக்கள் பசியில் வாடி வருவதாக, பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா வேதனை தெரிவித்துள்ளார்.

கிட்னி

வேலையிழப்பு, பஞ்சம், வறுமை ஆகியவற்றால் ஆப்கன் கிராமங்களில், மக்கள் சிறுநீரகத்தை விற்று உணவு தேடி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது… உடல் உறுப்புகள் விற்பனைக்கு என்று ஆங்காங்கே விளம்பர பலகையும் தொங்கி கொண்டிருக்கிறதாம்.. ஹெரட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளனராம்..

கண்ணீர்

ஒரு சிறுநீரகத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.70,000 வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.. இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், 5 வயது சிறுமிகளின் சிறுநீரகங்களும் விற்கப்படுகிறதாம்.. இதையெல்லாம் கேட்டு உலக நாடுகள் அதிர்ந்து போயுள்ளன.. தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளை தர முன்வந்துள்ளன.. எனினும், ரத்தக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது அந்த ஆப்கன் தேசம்..!

Previous Story

யுக்ரேன் பதற்றம்

Next Story

யார் பட்ட கடன் இது !