பாலத்தீனத்தை ஆதரிக்கும் சீனாவால் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலை சமாளிக்க முடியுமா?

-டெஸ்ஸா வாங்க்-

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சீனா சமாதான தரகராகப் பங்கு வகிக்க விரும்புகிறது. ஆனால், அதை அடைவதற்கு சீனாவிற்கு சில வரம்புகள் உள்ளன.

வார இறுதியில் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடன், சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் யீ, ஒரு பெரிய பிராந்தியப் போரின் அச்சங்களுக்கு மத்தியில் மோதல் பற்றி விவாதித்தார். சீனாவுடன் இணைந்து தீர்வு காண முயல்வதாக அமெரிக்காவும் உறுதியளித்துள்ளது.

சீனாவின் மத்திய கிழக்கு சிறப்புத் தூதர் ஜாய் ஜுன் அரேபிய தலைவர்களைச் சந்திக்க அந்தப் பகுதிக்குச் சென்ற பிறகு, வாங் தனது இஸ்ரேலிய மற்றும் பாலத்தீனிய சகாக்களுடன் பேசியுள்ளார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

காஸாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹெஸ்பொலாவை ஆதரிக்கும் இரானுடனான தனது நெருங்கிய உறவை அமைதியை நிலைநாட்ட சீனா பயன்படுத்தும் என்ற நம்பிக்கையுள்ளது. இரானிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு சீனாவிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டதாக ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவிற்கு இரானுடன் மிகப்பெரிய வர்த்தக உறவு உள்ளது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரானுக்கும் செளதி அரேபியாவிற்கும் இடையே ஓர் அரிதான அமைதி ஒப்பந்தத்தை சீனா சாத்தியமாக்கிக் காட்டியது. காஸாவில் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து சீனாவுடன் தனது தொடர்பை வலுப்படுத்தத் தயாராக இருப்பதாக இரான் கூறுகிறது.

சீன அரசாங்கம், இந்த மோதலில் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளுடனும் ஒப்பீட்டளவில் சமநிலையான உறவைக் கொண்டிருக்கிறது. எனவே, சீனாவை இந்த விஷயத்தில் நம்பலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள நேஷனல் வார் கல்லூரியின் இணை பேராசிரியர் டான் மர்ஃபி கூறினார்.

குறிப்பாக, பாலத்தீனர்கள், அரேபியர்கள், துருக்கி மற்றும் இரான் ஆகிய நாடுகளுடன் சீனா நட்புறவைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். மேலும், இஸ்ரேலுடன் நட்புறவைக் கொண்ட அமெரிக்காவுடன் சேர்ந்து, சீனாவால் அனைத்து நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வர முடியும் என அவர் கூறினார்.

ஆனால் இந்த விவகாரத்தை உற்று நோக்கும் மற்ற சிலர் கூறுகையில், மத்திய கிழக்கு அரசியலில் சீனாவால் சிறிய அளவிலேயே பங்காற்ற முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.

சீனா பாலத்தீன்

இஸ்ரேலை சமாளிக்க கஷ்டப்படும் சீனா

“இந்தப் பிரச்னையில் சீனாவால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. மத்தியக் கிழக்கு பிராந்தியத்தைச் சுற்றியுள்ள நாடுகளோடு பேசும்போது, இந்த பிரச்னைக்கு சீனா தீர்வு காணும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை,” என்று அட்லாண்டிக் கவுன்சிலில் ஆராய்ச்சி செய்யும் மத்தியக் கிழக்கு நாடுகளுடனான சீனாவின் உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற ஜொனாதன் ஃபுல்டன் கூறினார்.

இந்த மோதலைப் பற்றிய சீனாவின் முதல் அறிக்கை இஸ்ரேலை கோபப்படுத்தியது. சீனா தனது அறிக்கையில் ஹமாஸை கண்டிக்கவும் இல்லை இஸ்ரேலின் தற்காப்பு உரிமையைக் குறிப்பிடவுமில்லை என்று தனது “ஆழ்ந்த ஏமாற்றத்தை” இஸ்ரேல் வெளிப்படுத்தியது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது வரலாறு காணாத தாக்குதலை அக்டோபர் 7ஆம் தேதி காஸா பகுதியில் தொடங்கினர். இதில் 1,400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 239 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

அப்போதிருந்து, காஸா மீது இஸ்ரேல் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் 8,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலும் இப்போது துருப்புகள் மற்றும் டாங்கிகளை காஸா எல்லைக்குள் அனுப்பியுள்ளது.

தனது முதல் அறிக்கையின் மீது இஸ்ரேல் கோபத்தை வெளிப்படுத்திய பிறகு, சீன இராஜதந்திரி வாங், இஸ்ரேலிடம் “எல்லா நாடுகளுக்கும் தற்காப்பு உரிமை உண்டு” என்று கூறினார். ஆனால் அவர் மற்ற இடங்களில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் “தற்காப்பு எல்லைக்கு அப்பாற்பட்டது” என்று கூறினார்.

சீனா பாலத்தீனத்தை ஆதரிப்பதற்குப் பின்னால் இருக்கும் வரலாறு

சீனா பாலத்தீனம்

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலைப் பற்றிய சீனாவின் முதல் அறிக்கை இஸ்ரேலை கோபப்படுத்தியது.

பாலத்தீனத்திற்காக நீண்ட காலமாக வெளிப்படையாக சீனா அனுதாபம் காட்டுவதால் மற்ற நாடுகளுடனான உறவில் சமநிலையைப் பேணுவது சீனாவிற்கு கடினமாக உள்ளது. பாலத்தீனம் மீதான சீனாவின் அனுதாபத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு உள்ளது.

“தேசிய விடுதலை” இயக்கங்கள் என்று அழைக்கப்படும் இயக்கங்களுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங் ஆதரவாக ஆயுதங்களை அனுப்பினார். மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் தளங்கள் என இஸ்ரேலை தைவானோடு மா சேதுங் ஒப்பிட்டுப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்தைய தசாப்தங்களில், சீனா தன்னுடைய பொருளாதார கொள்கைகளை விரிவாக்கியதோடு இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்கியது. இஸ்ரேலுடன் சீனா இப்போது 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வர்த்தக உறவைக் கொண்டுள்ளது.

ஆனால் பாலத்தீனர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா தெளிவாகக் கூறியுள்ளது. சமீபத்திய மோதல்கள் பற்றிய அவர்களின் கருத்துகளில், சீன அதிகாரிகளும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும்கூட சுதந்திரமான பாலத்தீனிய அரசின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இதன் பக்க விளைவாக தேசியவாத பதிவர்களால் விரும்பப்படும் யூத எதிர்ப்பு குறித்த பதிவுகள் ஆன்லைனில் அதிமாகியுள்ளன. சீன சமூக ஊடகங்களில் சிலர் பாலத்தீனர்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி இஸ்ரேலின் செயல்களை நாசிசத்தோடு ஒப்பிட்டுள்ளனர். இதற்கு பெய்ஜிங்கில் உள்ள ஜெர்மன் தூதரகத்திலிருந்து கண்டனம் வந்திருந்தது.

பெய்ஜிங்கில் உள்ள இஸ்ரேலிய தூதரக ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட முயலும் சீனாவுக்கு இவை அனைத்துமே இடைஞ்சலாகத்தான் இருக்கும். இப்படி நிறைய சிக்கல்கள் இருக்கும்போது, சீனா ஏன் இந்த விவகாரத்தில் ஈடுபடுகிறது?

சீனா இஸ்ரேல்

பாலத்தீனம் மீதான சீனாவின் அனுதாபத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு உள்ளது.

பாலத்தீனத்தை சீனா ஆதரிப்பதன் அரசியல் பின்னணி என்ன?

மத்திய கிழக்கில் மோதல் விரிவடையும் பட்சத்தில் அந்தப் பகுதியில் உள்ள சீனாவின் பொருளாதார நலன்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பது ஒரு காரணம்.

பெய்ஜிங் இப்போது எண்ணெய்க்காக வெளிநாட்டு இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. மேலும் ஆய்வாளர்கள் அதில் பாதி வளைகுடாவில் இருந்து வருவதாக மதிப்பிடுகின்றனர். சீனாவின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கையின் முக்கியத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் (பிஆர்ஐ) மத்திய கிழக்கு நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மற்றொரு காரணம், மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் சீனாவிற்கு அதன் நற்பெயரை சரிப்படுத்திக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பை அளிக்கிறது.

“பாலத்தீனர்களுக்கு ஆதரவாக நிற்பது அரபு நாடுகள், முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் மற்றும் உலகளாவிய தெற்கின் பெரும் பகுதிகளில் கவனிக்கப்படும் என்று சீனா நம்புகிறது,” என டாக்டர் மர்ஃபி சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவிற்கு மாற்றாக சீனா தன்னை உலக அரங்கில் நிலைநிறுத்த முயலும் தற்போதைய நேரத்தில் மத்தியக் கிழக்கில் இந்தப் போர் வெடித்துள்ளது. அமெரிக்காவின் மேலதிகார தலைமையின் தோல்வியாக தான் கருதும் விஷயங்களை சீனா விமர்சித்து வரும் அதேவேளையில் சீனா தலைமையிலான ஒரு உலக ஒழுங்கிற்கான திட்டத்தை சீனா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே முன்னிறுத்தி வருகிறது.

சீனா இஸ்ரேல்

மத்தியக் கிழக்கில் மோதல் விரிவடையும் பட்சத்தில் அந்தப் பகுதியில் உள்ள சீனாவின் பொருளாதாரா நலன்களுக்கு ஆபத்து ஏற்படும்.

அதிகாரப்பூர்வமாக, இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதற்காக அமெரிக்காவை தாக்கிப் பேசுவதை சீனா தவிர்த்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் சீன அரசு ஊடகம் தேசியவாத எதிர்வினைகளைத் தூண்டுகிறது. மத்தியக் கிழக்கில் நடப்பதை இஸ்ரேலின் அமெரிக்க ஆதரவுடன் இணைத்துப் பேசுகிறது என்று டாக்டர் மர்பி குறிப்பிட்டார்.

சீன ராணுவ செய்தித்தாளான பிஎல்ஏ டெய்லி, “எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதாக” அமெரிக்காவை குற்றம் சாட்டியது. இதே வார்த்தைகளைக் கொண்டுதான் ரஷ்யா-யுக்ரேன் போரில் யுக்ரேனுக்கு உதவியதற்காக அமெரிக்காவை விமர்சிக்க சீனா பயன்படுத்தியது. அரசு நடத்தும் ஆங்கில நாளிதழான தி குளோபல் டைம்ஸ் ரத்தக்கறை படிந்த கைகளுடன் அமெரிக்க அரசின் குறியீடாக பார்க்கப்படும் அன்கில் சாமின் கார்ட்டூனை வெளியிட்டது.

பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும் ஒரு பார்வை என்னவென்றால், பெய்ஜிங் அமெரிக்காவிற்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதனால் அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கை குறைக்க முடியும். ஆனால், அதேநேரம், ஹமாஸை வெளிப்படையாகக் கண்டிக்காததன் மூலம், சீனாவின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்படும் அபாயமும் உள்ளது.

மேலும், தனது நீண்ட கால திட்டங்களில் சீனா எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் உள்ளன.

சீனா இஸ்ரேல்

“எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதாக” அமெரிக்காவை சீனா குற்றம் சாட்டியது.

பாலத்தீனத்தை ஆதரிப்பதால் சீனாவிற்கு ஏற்படும் சவால்கள்

சீனா எவ்வாறு தனது வெளியுறவு செல்வாக்கை அதிகப்படுத்தும் என்பது முதல் சவால். ஏனென்றால், சீனா இந்த விவகாரத்தில் முஸ்லீம்-பெரும்பான்மை நாடுகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்க்கிறது. ஆனால், தனது நாட்டில் உள்ள உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்ததாக சீனா மீது குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் திபெத்தில் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது என்றும் சீனா மீது குற்றச்சாட்டு உள்ளது.

அரபு நாடுகளுடன் சீனா கட்டியெழுப்பியுள்ள வலுவான உறவுகளின் அடிப்படையில் அரபு நாடுகளுக்கு சீனா மீது வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு பிரச்னையாக இருக்காது எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் ஈடுபாடு காட்டுவது போல் சீனா நடிக்கிறது என்ற கோணத்தில் பார்க்கப்பட்டால் சீனாவிற்கு அது சவாலாக இருக்கும். ஹமாஸ் மோதலைப் பயன்படுத்தி தனது சொந்த நலன்களை சீனா முன்னேற்றுகிறது என வைக்கப்படும் விமர்சனம் முன்னதைவிட மோசமான சவாலாக சீனாவிற்கு இருக்கும்.

பாலத்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறுவதன் மூலம் அரபு நாடுகளின் ஆதரவைப் பெறலாம் என்று சீனா கருதுகிறது என்றும் அதே நேரத்தில் ஹமாஸ்-இஸ்ரேல் பிரச்னையில் அரபு நாடுகளிடையே ஒற்றுமை குரல் இல்லை என்றும் டாக்டர் ஃபுல்டன் கூறினார்.

சீனா மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை மட்டுமே விரும்புவதாகவும், “பாலத்தீன பிரச்னையில் சுயநலம் இல்லை” என்றும் வாங் கூறினார்.

இது உண்மை என்பதை உலகுக்கு உணர்த்துவதே சீனாவிற்கு சவாலாக இருக்கும்.

Previous Story

இஸ்ரேல்: சொந்த காசில் சூனியம்.!

Next Story

இஸ்ரேல் போட்ட குண்டால் 15 பேர் உடல் சிதறி பலி..