பாக்: மெகா ஹிட் ஆன ‘தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’ படத்திற்கு இந்தியாவில் தடை

மிகப்பெரிய அளவில் ஹிட்டான பாக்கிஸ்தானிய திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்கு இந்திய அதிகாரிகள் அனுமதி மறுத்ததையடுத்து அதன் வெளியீடு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிபிசிக்கு தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்தது ஏன்?

கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான பஞ்சாபி திரைப்படமான `தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’இன் (The Legend of Maula Jatt) ரீமேக் பதிப்பு பாகிஸ்தானில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. மேலும் இது பாகிஸ்தானில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படம் வட இந்திய மாநிலமான பஞ்சாபில் புதன்கிழமை வெளியாக இருந்தது.

இந்த படம் வெளியாகி இருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வெளியான முதல் பாகிஸ்தான் திரைப்படமாக இருந்திருக்கும்.

தெற்காசிய அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா சிக்கலான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தப் பதற்றங்கள் இரு நாடுகள் இடையேயான கலாசார பரிமாற்றங்களை பாதிக்கின்றன.

புதனன்று, ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர், பிபிசியிடம் படம் தடை செய்யப்பட்டது குறித்து தெரிவித்தார்.

இந்தியாவில் படத்தின் விநியோகஸ்தரான அவர் பிபிசிக்கு அளித்த தகவலின்படி, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பாகிஸ்தான் திரைப்படத்துக்கு அனுமதி மறுத்ததை அடுத்து, அதன் வெளியீடு இந்தியாவில் காலவரையின்றி நிறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியது.

மகாராஷ்டிராவில் தொடங்கிய எதிர்ப்பு

இந்தத் திரைப்படத்துக்குத் தடை விதித்தது ஏன் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாகக் கேட்க, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது. ஆனால் உடனடியாக பதில் கிடைக்கவில்லை.

`தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’ திரைப்படத்தில் பாகிஸ்தானின் மிகப்பெரிய நட்சத்திரங்களான ஃபவத் கான், மஹிரா கான் ஆகியோர் நடித்துள்ளனர். 2022இல் வெளியான இந்தத் திரைப்படத்தில் நாயகன் தனது பரம விரோதியான ஒரு மிருகத்தனமான குலத்தின் தலைவரை எதிர்கொள்ளும் கதையை விவரிக்கிறது. இது நாட்டார் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்.

இத்திரைப்படம் முதலில் இந்தியாவில் 2022இல் வெளியாக இருந்தது. ஆனால் அதன் திரையிடல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மாதம் வரை அதன் தயாரிப்பாளர் பிலால் லஷாரி இந்திய திரையரங்குகளில் விரைவில் வரும் என்று கூறி வந்தார்.

“படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன போதிலும், பாகிஸ்தானில் வார இறுதி நாட்களில் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் ஆகிறது. இந்தத் திரைப்படத்தை, ​​இந்தியாவில் உள்ள எங்கள் பஞ்சாபி ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

பாகிஸ்தானில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்தது ஏன்?

இருப்பினும், படம் இந்தியாவில் வெளியாகும் தகவல் மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் எதிர்ப்பைத் தூண்டியது. அங்கு பிராந்திய மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அரசியல் கட்சி “எந்தச் சூழ்நிலையிலும்” படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பை, இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத் துறையான பாலிவுட்டின் தாயகம்.

அங்கு ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, ஜீ ஸ்டுடியோஸ் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியுடன் எல்லை மற்றும் மொழியைப் பகிர்ந்துகொள்ளும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் படத்தை வெளியிட முடிவு செய்தது.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான உறவுகள் இருந்தபோதிலும், இந்தியாவும் பாகிஸ்தானும் கலை மற்றும் கலாசாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இருநாடுகளிலும் பார்க்கப்படுகின்றன.

பாகிஸ்தான் நடிகர்ளை கைவிட்ட பாலிவுட்

பாகிஸ்தான் நடிகளை கைவிட்ட பாலிவுட்

இந்தியாவின் பாலிவுட் மற்றும் பஞ்சாபி திரைப்படங்கள் பாகிஸ்தானில் பிரபலமாக உள்ளன. அதே நேரத்தில் பாகிஸ்தானிய தொடர்கள் இந்தியாவில் அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

இரு நாடுகளிலும் உள்ள கலைஞர்கள், திரைப்படம் மற்றும் இசைத் துறையில் இணைந்து பணியாற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்புகளின் வரலாற்றையும் கொண்டுள்ளனர்.

ஆனால், 2016இல் பாகிஸ்தான் நடிகர்களை பாலிவுட் கைவிட்டது. 2019இல் இந்திய திரைப்படங்களை பாகிஸ்தான் தடை செய்தது. அதன் பின்னர், இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ பதற்றங்கள் காரணமாக இத்தகைய ஒத்துழைப்புகள் நிறுத்தப்பட்டன.

இந்தியாவில் இருந்து சில பஞ்சாபி திரைப்படங்கள் பாகிஸ்தானில் சமீபத்திய மாதங்களில் திரையிடப்பட்டுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்சநீதிமன்றம் பாகிஸ்தானில் இருந்து கலைஞர்களை முழுமையாகத் தடை செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது, மனுதாரர்களை “அவ்வளவு குறுகிய மனப்பான்மையுடன்” இருக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது.

எனவே, மௌலா ஜாட் திரைப்படத்தின் உலகளாவிய வெற்றி, இந்தியாவில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று அதன் தயாரிப்பாளர்கள் நம்பினர்.

மௌலா ஜாட் திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் பிரபலமான பாகிஸ்தான் படைப்புகளில் நடித்ததற்காக இந்தியாவில் நன்கு அறியப்பட்டவர்கள். இவர்கள் இதற்கு முன் பெரிய பட்ஜெட் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர்.

Previous Story

ஆளும் கட்சி: போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்  சிலர் அதிருப்தியில்!

Next Story

வேட்புமனு சமர்ப்பனமும் புதிய நாடாளுமன்றமும்!