பாகிஸ்தான் பக்கம் துருக்கி சாய்ந்தது ஏன்? சீனாவுடன் கூட்டு சேர்கிறதா!

சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சர்வதேச நாடுகள் சில இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால், துருக்கி பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்திருந்தது. இந்த நிலைப்பாடு இந்தியாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

Image

துருக்கியின் முடிவுக்கு காரணம் என்ன? ஆசிய நாடுகளை ஓரணியில் திரட்டுகிறதா சீனா? உள்ளிட்ட கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த கேள்விக்கான பதிலை துருக்கியின் ‘அங்காரா இல்டிரிம் பியாசித் பல்கலைக்கழகத்தை’ சேர்ந்த இந்திய கல்வி மற்றும் சர்வதேச விவகார ஆய்வாளரான ‘ஒமைர் அனஸ்’ கொடுத்திருக்கிறார்.

India-Turkey

அவரது கூற்றுப்படி, இந்த முடிவு ஏதோ ஒரே நாளில் எடுக்கப்பட்டதல்ல என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, துருக்கி நேட்டோவில் உறுப்பினராக உள்ள நாடு. ஆனால் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 எனும் வான் பாதுகாப்பு அம்சத்தை வாங்கியிருந்தது.

India-Turkey

தனது எஃப்-35 எனும் போர் விமானம் தயாரிப்பு திட்டத்திலிருந்து துருக்கியை USA தூக்கியது. துருக்கி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் இந்த திட்டத்தில் சேர்வது எனில், காலில் விழாத குறையாக டிரம்பிடம் கெஞ்ச வேண்டும்.

இந்த பொழப்புக்கு, கவுரமா இருந்துக்கலாம் என்று முடிவெடுத்திருந்தது. இந்த முடிவு, துருக்கியை மேற்கத்திய நாடுகளின் உறவிலிருந்து மேலும் அந்நியப்படுத்தியது. ஆனால் நாம் ஆசியாவில் இருக்கிறோம். எனவே ஆசியாவில் யாரை ஆதரிப்பது என்பதில் தெளிவு வேண்டும் என்று சிந்தித்த துருக்கி, சீன-ரஷ்ய ஆதரவை உயர்த்திப் பிடிக்க தொடங்கியுள்ளது.

துருக்கிக்கு இருக்கும் ஆப்ஷனும் இது மட்டும்தான். எனவே நாங்கள் தனியாக இல்லை என்பதை காட்டிக்கொள்ள பாகிஸ்தானுக்கு ஆதரவளித்திருக்கலாம் என்று ஒமைர் கூறுகிறார்.

2019-2022 காலத்திலேயே பாகிஸ்தான் ஆதரவு என்கிற முடிவுக்கு துருக்கி வந்திருக்கலாம். இதை இந்தியா மோப்பம் பிடித்துவிட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட துருக்கி, இந்தியாவுக்கும் சப்போர்ட் செய்யலாம் என்று நினைத்து, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் நடுநிலை என்கிற கருத்தை தூக்கிக்கொண்டு வந்தது.

ஆனால் இந்தியா இதை ஏற்கவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நேரத்தில்தான் (2022) நாகோர்னோ-கராபாக் போர் நடந்தது.

அதில் அஜர்பைஜானுக்கு துருக்கி சப்போர்ட் செய்ய, அர்மீனியா தோல்வியடைந்தது. தோல்வியடைந்த அர்மீனியா இந்தியாவின் உதவியை நாடியது. இதை நூல் போல பிடித்துக்கொண்டு ஈரான், கிரீஸ், சைப்ரஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் என துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நாடுகளுடன் வலுவான உறவை அமைத்துக்கொண்டது இந்தியா.

சர்வதேச உறவில் இது ஒரு முக்கியமான புள்ளி. இங்கிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை துருக்கி வலுவாக முன்னெடுத்தது. மறுபுறம் இந்தியாவும் தனது வெளியுறவுக்கொள்கையிலிருந்து மாற தொடங்கியது.

அதற்கு முன்னர் வரை ‘குஜ்ரால் கோட்பாட்டைதான்’ நாம் பின்பற்றி வந்தோம். அதாவது நாம் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் அண்டை நாடுகளுடன் உறவில் இருப்போம். ஆனால், பிரதமராக மோடி வந்த பின்னர், இந்தியாதான் முதலில், இந்தியாவின் நலன்தான் முதலில் என்கிற கோட்பாட்டை முன் வைக்க தொடங்கியுள்ளோம்.

India-Turkey

இந்த பின்னணியில்தான் பாகிஸ்தானை துருக்கி ஆதரித்திருக்கிறது. பாகிஸ்தான் ஆதரவு என்பது சீன ஆதரவாகும். சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ எனும் வணிக பாதைக்கு துருக்கி முக்கியம். இதை இப்படித்தான் புரிந்துக்கொள்ள வேண்டும் என ஒமைர் அனஸ் கூறியுள்ளார்.

துருக்கி அதிபர் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்த பாக்., பிரதமர்

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவானது. மத்திய அரசின் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, நம் எல்லை மாநிலங்களில் பாகிஸ்தான் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தியது.

இந்த மோதலில், மேற்காசிய நாடான துருக்கியின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக, பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கிய துருக்கி, அதை செயல்படுத்துவதற்கான வீரர்களையும் அனுப்பி வைத்தது.

இந்த சூழலில், அரசு முறை பயணமாக துருக்கிக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் சென்றார். இந்த பயணத்தின் போது, இஸ்தான்புல்லில் அதிபர் தையிப் எர்டோகனை அவர் சந்தித்து பேசினார்.

அப்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, விவசாயம் ஆகியவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கு எதிரான தாக்குதலின் போது உதவியதற்காக துருக்கி அதிபர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். இதை தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் உறுதிபடுத்தியுள்ளார்.

அதில், ‘இஸ்தான்புல்லில் சகோதரர் அதிபர் எர்டோகனை சந்தித்தேன். சமீபத்திய பாகிஸ்தான், இந்தியா மோதலில் பாகிஸ்தானுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்.

அசைக்க முடியாத சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்னும் நெருக்கமாக செயல்படுவதற்கான உறுதியை நாங்கள் எடுத்தோம்’ என, தெரிவித்துள்ளார்.

 

Previous Story

6 மணிநேரத்தில்...583 ஆண்களுடன் உடலுறவு!

Next Story

லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் அதிவேக கார் புகுந்ததில் 27 பேர் காயம்