பல்பக்கத் தாக்குதல்! திணறுகிறது அரசாங்கம்!

நஜீப் பின் கபூர்

துவக்கத்திலேயே நெருக்கடியின் பாரதூரத்தை சொல்லிவிட்டு கதைக்கு வருவோம். இந்த பாரதூரமான கதை கூட எமது கண்டு பிடிப்பல்ல. பீ.பி. ஜயசுந்தர என்பரை நாடு நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றது. ஒரு காலத்தில் பொருளாதார படுகெலையாளி என்றும் இந்த மனிதனை விமல் வீரவன்ச விமர்சித்திருந்தார். இந்த பீ.பி. நாடு என்னதான் பொருளாதார ரீதியில் பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருந்தாலும் அவர் இராஜபக்ஸாக்களின் தேவைக்கு எங்கிருந்தாலும் பணத்தை தேடிக் கண்டு பிடித்துக் கொடுப்பது அவரது வழக்கமான திறமையாக இருந்தது. இந்த பணக் கொடுக்கல் விவகாரம் மூத்த ராஜபக்ஸாக்களுக்கு மட்டு மல்ல அவர்களது குஞ்சுகளுக்குக் கூட அள்ளிக் கொடுப்பதில் இந்த மனிதன் ஒரு போதும் பின் வாங்கியது கிடையாது. இல்லை என்று சொல்லியதும் கிடையாது.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கிங்ஸ் பெரி ஹோட்டலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பீ.பி.ஜயசுந்தர சொன்ன கருத்துக்களை அப்படியே இங்கு தருகின்றோம். இப்படி ஒரு நிலையை நாட்டுக்கு வரும் என்று நான் ஒரு போதும் எதிர் பார்க்கவில்லை. நாட்டில் என்னதான் நடக்கின்றது என்று எனக்குத் புரியவில்லை. நிலமை எனது கட்டுப் பாட்டையும் மீறிச் சென்று விட்டது. இதன் பின்னர் என்னால் ஒன்றும் பண்ண முடியுhது என்று அவர் பகிரங்கமாகப் பேசி இருக்கின்றார். ராஜபக்ஸாக்களின் பொருளாதார விற்பன்னராக இதுவரை பார்க்கப்பட்ட பீ.பி. கையை விரித்து விட்டார். இதிலிருந்து நாட்டு நிலமையை மக்கள் புரிந்து கொள்ள முடியும். அவரது இந்தச் செய்தி கேட்டு ராஜபக்ஸாக்கள் அதிர்ந்து போய் இருக்கின்றார்கள். கடைசி நேரத்தில் தானா உமக்கு இது புரிந்தது என்று வேறு இப்போது மூத்த ராஜபக்ஸ இவரை போட்டுத் திட்டித் தீர்த்ததாகவும் ஒரு தகவல் நமக்கு கிடைத்திருக்கின்றது.

நாமும் நெடுநாளாக நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஒன்று வருகின்றது என்று சொல்லி வருகின்றோம். அத்துடன் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட்டை முழுக்க குற்றம் சாட்ட முடியாது. இதற்கான நியாயங்களை நாம் முன்பே சொல்லி இருந்தோம். இப்போது மீண்டும் கொவிட் புது வேடம் தரித்து நாட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றது என்ற பரவலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை மூத்த சுகாதார அதிகாரிகளும் வைத்தியர்களும் உறுதிப் படுத்திக் கொண்டு வருகின்றார்கள். அப்படி அது உள்ளே நுழைந்து விட்டால் அதற்கு மாற்று வழி கண்டறிய வேண்டி இருக்கின்றது. ஆனால் அரசு வங்குரோத்து நிலையில் இருக்கின்றது. அதனை பீ.பியின் வார்த்தைகள் உலகிற்கே அம்பலப்படுத்தி இருக்கின்றது.

பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் ராஜபக்ஸாக்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பிலும் மேற்கொண்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களாகும். இந்த திட்டங்கள் நிறைவு பெற்றவுடன் நாடு டுபாய் கட்டார் மற்றும் சிங்கப்பூராக மாறிவிடும். மக்கள் செல்வத்தில் கொழிப்பார்கள் என்றுதான் நமக்குக் கதைகள் சொல்லப்பட்டிருந்தன. மேலும் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு. கொழுத்த சம்பளம் என்றெல்லாம் இந்த ஆசை வார்த்தைகளை நமது தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது கொவிட் எல்லாம் கெடுத்துப் போட்டது என்ற தோரனையில் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் பிழையான ஒரு தகவல் என்பது எமது வலுவான வாதம். இதற்ககான நியாயங்களை நாம் இங்கு பேச வரவில்லை. கடந்த கட்டுரைகளில்; அது பற்றி நிறையவே பேசி இருக்கின்றோம்.

பெருளாதார அல்லது டொலர் நெருக்கடியால் நாட்டில் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு. எரிபொருளைக் கொள்வனவு செய்யப் பணத் தட்டுப்பாடு. சீனாவை நம்பி அனைத்து நாடுகளையும் தற்போது அரசு எதிரியாக வைத்திருக்கின்றது. கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போல இப்போது இந்திய மற்றும் மேற்கு நாடுகளின் கால்களில் நமது தலைவர்கள் போய் மண்றாடுகின்ற அவலம். தற்போது நமது நிதி அமைச்சர் பசில் இந்தியாவின் கால்களில் விழுந்து மண்றாடுகின்றார். இது சீனாவுக்கு வலியைக் கொடுக்கக் கூடும். எனவே அது இலங்கை அரசாங்கத்தை ஒரு சந்தர்ப்பவதியாக பார்க்க இடமிருக்கின்றது. இன்னும் மலக் கழிவுகளுடன் சீன கப்பல் நாட்டை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் இன்று சீனாவை நாம் பகைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று இராஜாங்க அமைச்சர் சசிந்திர இராஜபக்ஸ கவலை தெரிவித்திருக்கின்றார்.

இந்தப் பின்னணியில் முழு நாடுமே சமயல் எரிவாயு ஆபத்தை எதிர் நோக்கி இருக்கின்றது. இதனைத் தயாரித்த லாப் லிட்ரோ நிறுவனம் நாம் கலவையில் ஜூலை மாதமளவில் மாற்றங்கள் செய்ததை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இப்போது அவைதான் சந்தைக்கு வந்திருக்கின்றது. இது பற்றி ஜனாதிபதி அமைத்திருக்கின்ற குழுவிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பிய போது அவர்கள் அதற்குப் பதில் கொடுக்க முடியாமல் திண்டாடியதை நாம் பார்க்க முடிந்தது. இது விடயத்தில் சொல்லப்படுகின்ற மாற்றுமொரு கதை, இதனை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பதற்காக அரங்கேரும் ஒரு நாடகம் என்று தெரிவிக்கப் படுகின்றது. கடந்த வருடங்களில் நாடுபூராவில் ஒரு வருடத்துக்கு நூறு இருநூறு வரையிலான வெடிப்பு சம்பங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று ஒரு நாளைக்கு பத்து இருபது சம்பவங்கள் என்று இது நடந்து கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி நியமித்திருக்கின்ற குழு வீடு வீடாகக் போய் வெடிப்புக்கள் பற்றி தற்போது கேட்றிந்து வருகின்றது.

வைத்தியசாலைகளில் மருந்துகளின் தட்டுப்பாடுகளுக்கும் இடமிருக்கின்றது என்று எச்சரிக்கபட்டிருக்கின்றது. டொலர் பற்றக்குறையால் எல்லாத் துறைகளும் தற்போது ஸ்தம்பித்துப் போய் இருக்கின்றது. சின்னச் சின்ன கைத் தொழில்களைச் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றைக் கைவிட்டு கூலித் தொழில்களில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். அல்லது வெளிநாடுகளுக்கு போகும் முயற்ச்சியில் இறங்கி இருக்கின்றார்கள். சௌபாக்கியமான வாழ்வைக் கொடுப்போம் என்று பதவிக்கு வந்தவர்கள் இன்று மக்களுக்கு வாழ வழியில்லாமல் பண்ணி விட்டிருக்கின்றனர். இதன் பின்னர் யார் பதவிக்கு வந்தாலும் மீட்சிக்கு வழிகிடையாது. மக்கள் ஒட்டாண்டியாக தெருக்களில் இன்னும் சில மாதங்களில் அழைகின்ற காட்சிகள்தான் கண்ணுக்குத் தெரிகின்றது. இதனால் பிச்சை போடுவதற்குக் கூட அப்போது ஆளில்லா நிலை வரும்.

இந்தப் பின்னணியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்றெல்லாம் எவராவது பேச முடியுமா? புதிய அரசியல் யாப்பின் கதையும் இதே விதமாகத்தன் அமையப் போகின்றது. எமக்கு மெதமூலனையில் இருந்து வருகின்ற ஒரு அந்தரங்கத் தகவலின்படி ஜனாதிபதியை அவர் சம்மத்துடன் பேசி ஆளை அரசியலில் இருந்து ஓரம் கட்டிவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஸாவை அதிகாரத்துக்குக் கொண்டு வந்து நடந்த தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் ஒரு நம்பிக்கையை இராஜபக்ஸாக்கள் மக்கள் மீது உண்டு பண்ணி அரசியலை முன்னெடுக்கின்ற திட்டமும் இருப்பதாகத் தெரிகின்றது.

நம்பியவர்கள் தம்பியை பிழையான வழியில் கொண்டு போய் விட்டார்கள். இதன் பின்னர் அப்படியான விடயங்கள் இடம் பெற நாம் இடமளிக்க மாட்டோம் என்று கதைகள் சொல்லப்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் ஜனாதிபதி ஜீ.ஆர். கடும் பிடிவாதக் காரராக இருப்பதால் இந்த முயற்ச்சியும் வெற்றியளிக்க வாய்புக் கிடையாது என்பது எமது கருத்து. முட்டிக் குனிவதுதான் அவரது இராஜதந்திரம் என்பது போலத்தான் அவர் செயல்பட்டுக் கொண்டு வருகின்றார். இதனால் பிரதமர் மிகுந்த விரக்தியில் இருப்பதாகத் தெரிகின்றது. பிரதமர் பதியைத் தவிர்ர்ந்த அனைத்துப் பதவிகளையும் அவர் தூக்கி வீசப் போக இருப்பதாக நெருங்கியவர்களிடத்தில் கதையாம். நாம் இங்கு சுட்டிக் காட்டிய விவகாரத்தில் இராஜபக்ஸாக்களின் முழுக் கவனமும் இப்போது இருப்பதாகத் தெரிகின்றது. ஆனால் பூனைக்கு மணி சூடுவது யார் எப்படி என்ற விடயத்தில் தான் பெரும் சிக்கல்.

நாட்டை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் கம்மியாக இருந்தாலும், மேற்கு மற்றும் இந்தியாவின் துனையுடன் ஏதாவது பண்ணலாம் என்று பசில் போன்றவர்கள் கருதினாலும் இனவாதிகள் அதற்கு இடம் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த இனவாதிகள் தற்போது பலயீனப்பட்டிருந்தாலும் அவர்களது இனவாதக் கருத்துக்கள் எடுபடாமல் இருந்தாலும், இப்படியான ஒரு நகர்வை முன்னெடுக்கின்ற போது நிச்சயம் அவர்கள் ஏதோ ஒரு வழியில் வம்பு பண்ணத்தான் செய்வார்கள்.

எனது வார்த்தைகளை இதன் பின்னர் சுற்று நிருபங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கட்டளையிட்ட ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல்களே தற்போது செல்லாக்காசாக மாறி இருக்கின்றது. இதுவும் நமது நாட்டு வரலாற்றில் என்றும் கேள்விப்பட்டாத பார்க்காத விவகாரம். வர்த்தமானிகள் என்பது ஒரு நகைச்சுவை போல் இன்று நாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. நிலமை இப்படி மிக மோசமாக இருந்தாலும் இந்த அரசுக்கு நல்ல வாய்ப்பாக இருப்பது மிகவும் பலயீப்பட்டிருக்கின்ற எதிரணியாகும். அவர்களினால் இந்த அரசுக்கு எந்த அச்சுறுதத்ல்கள்ளும் கிடையாது என்பதால் அவர்கள் என்றதான் செய்தாலும் மக்கள் அந்த அட்டகாசங்களுக்கு அடிமையாக நின்று வாழ வேண்டிய ஒரு நிலை தான் நாட்டில் இருந்து வருகின்றது.

இராஜபக்ஸாக்களின் அரசியல் இருப்பை ஜனாதிபதி ஜீ.ஆர். செயல்பாடுகள் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது என்று மொதமூலன வட்டாரங்களில் கவலையாக இருக்கின்றது. ஏதாவது புரட்சிகரமான மாற்றங்களை செய்து நிலமையை சமாளிக்க பெரும்பாலான இராஜபக்ஸாக்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் ஆர்வமாக இருந்தாலும் அது இலகுவான காரியமாக இருக்க மாட்டது என நாம் கருதுன்றோம்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் இது வரை அந்தப் பயணத்தில் சாதித்ததாகத் தெரியவில்லை. எரிபொருள் கொள்வனவுக்கு அவர் இந்தியாவிடம் இருந்து நீண்ட காலக் கடனை எதிர்பார்க்கின்றார். ஆனால் துவக்க பேச்சுக்களில் அதற்கான இணக்கப்பாடுகள் எட்டவில்லை. ஒரு வேலை பிரதமர் மோடியுடன் சந்திப்பில் இது சாத்தியமானாலும் ஆகலாம். இந்தியாவுக்குப் போன பசில் அங்கு ஒரு சமயல் செய்து பார்த்திருக்கின்றார். உயிர் வாய்வால் சமயல் செய்த அந்த முயற்ச்சிகளை அவர் இலங்கையில் அறிமுகம் செய்ய முயன்றாலும் ஆச்சர்யப் படுவற்க்கில்லை. எனவே சிலிண்டர் வெப்பு பின்னால் ஒரு வியாபாரம் இருக்கின்றதோ தெரியாது.

தற்போது இந்தியாவுக்குப் போய் இருக்கின்ற நிதி அமைச்சர் மீது தமிழ் தரப்புக்கள் இந்த முறை ஏதும் அழுத்தங்கள் கொடுக்காமல் இருந்தது ஏனோ தெரியவில்லை. இந்திய அவர்களைப் பெரிதாக மதிப்பதில்லை என்றதாலோ என்னவோ தெரியாது. இந்தியா ஈழத் தமிழர் விவகாரங்களில் தற்போது தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதால் தமிழ் தரப்புக்கள் மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்காவுடன்; இந்தியாவையும் இணைத்து ஏதும் பண்ணலாம் என்று யோசிப்பது போல் தெரிகின்றது. ஆனால் தற்போது நாட்டில் இருக்கின்ற அரசியல் பொருளாதார சூழ்லைகள் ஏதுக்கும் இடம் கொடுக்கின்ற நிலையில் இல்லை என்றுதான் நாம் கருதுகின்றோம்.

மேற்கு நாடுகளுக்குப் போன தமிழ் அரசியல்வாதிகள் எதனைச் சாதித்திருக்கின்றார்கள் என்று இது வரை தெரியவில்லை. இவ்வாறான விஜயங்களை மேற்கொள்ளும் போது கட்சி வட்டாரத்தில் கலந்து பேசிவிட்டு பேவதுதான் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த விஜயம் அடுத்த தலைமைத்துவத்தை முன்னிட்டு மேற் கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திர பயணம் என்ற கருத்தும் தமிழ் வட்டாரங்களில் தற்போது பேசப்பட்டு வருகின்றது.

Default thumbnail
Previous Story

வாகனம் கையளிப்பு

Next Story

வாராந்த அரசியல் - பீடாதிபதியின் தகைமை!