பட்டினி  அகதிகளின் கண்ணீர்க் கதை

-பிரபுராவ் ஆனந்தன்-

இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து படகு மூலம் தமிழ்நாட்டுக்கு இதுவரை 75 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். ஆனால், தாய்நாட்டை விட்டு வெளியேறி வந்த அவர்கள், அகதிகளாக பதிவு செய்யப்படாமல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக இதுபோல உரிய ஆவணமின்றி வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் வந்தால் அவர்கள் மீது கடவுச்சீட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள அந்நாட்டவர்களை மனிதாபிமான அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தாமல் அகதிகள் முகாமில் கண்காணிப்பில் தங்க வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அங்கு அந்த மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, உணவு பொருட்களின் விலையேற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களை தற்போது வரை அகதிகளாக பதியாமல் உணவு, தங்குமிடம் மட்டும் வழங்கப்பட்டது. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்களை அகதிகளாக பதிய வேண்டும் என இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்திய அரசு முகாம்களில் தங்கியுள்ள அவர்கள் அகதிகளாக பதியவில்லை என்றால் அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என தெரிய வருகிறது.

இலங்கை தமிழர்களை சந்தித்த தமிழக முதல்வர்

கடந்த 15ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின்; காணொலி காட்சி மூலம் இலங்கை தமிழர்களிடம் பேசினார்.

4 மாத கை குழந்தையுடன் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகம் வர என்ன காரணம் என முதல்வர் கேட்டார் அதற்கு பதில் அளித்த மேரி கிளாரா என்ற பெண் இலங்கையில் தற்போது உள்ள விலைவாசி உயர்வுக்கு எனது குழந்தையை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ முடியாது, குழந்தைக்கு கொடுக்கும் பால்மா ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. என்னால் அவ்வளவு பணம் கொடுத்து பால் மாவு வாங்கி குழந்தைக்கு கொடுக்க முடியாது என்பதால் உயிரை பணயம் வைத்து தமிழகம் வந்ததாக கூறினார்;.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த எங்கள் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறை வரை அழைத்துச் சென்றனர். ஆனால் தமிழக அரசின் சிறப்பு உத்தரவின் பெயரில் வழக்குகளை ரத்து செய்து விட்டு சிறையில் அடைக்காமல் மனிதாபிமான அடிப்படையில் எங்களை முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

இருப்பினும் எங்களை இதுவரை அகதிகளாக பதியவில்லை என மேரி கிளாரா முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் தற்போது வரை மத்திய அரசிடமிருந்து தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களை அகதிகளாக பதிவது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் இது தொடர்பாக மத்திய அரசுடன், மாநில அரசு தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் நீங்கள் அனைவரும் அகதிகளாகப் பதியப்படுவீர்கள்.

அதுவரை உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்திடம் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்துமாறும் அறிவுறுத்தினார்.

பதியாமல் முகாமில் தங்கி என்ன பயன்?

இது குறித்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் பிபிசி தமிழிடம் பேசுகையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் கடந்த 10ஆம் தேதி தமிழகத்திற்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ளோம்.

இலங்கையில் நாங்கள் பட்ட கஷ்டத்தை காட்டிலும் இங்கு நிம்மதியாக இருக்கிறோம். இங்கு வந்த பிறகுதான் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எங்களை வெளியே வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு அதிகாரிகளை கேட்கிறோம் ஆனால் எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

எங்களை வேலைக்கு போக அனுமதித்தால் தானே எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும் தொடர்ந்து பதிவு இல்லாமல் எங்களால் எத்தனை மாதம் இப்படி இருக்க முடியும்.

இலங்கையை விட இங்கு காய்கறி, அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை மக்கள் குறைந்த விலைக்கு பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை பார்க்கும்போது நாங்களும் வெளியே சென்று எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிட வேண்டும் என ஆசையாக இருக்கிறது.

நாங்கள் வந்த நாள் முதல் இதுவரை வீட்டில் சமைக்கவில்லை, எங்களுக்கு மூன்று நேரமும்; உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

நான் இலங்கையில் இருந்து வரும்போது பத்தாயிரம் ரூபாய் இலங்கை பணம் எடுத்து வந்திருந்தேன். அந்த பணத்தை இங்கு மாற்றி இரண்டு ஆயிரம் ரூபாய் வைத்துள்ளேன். என்னிடம் உள்ள பணம் முடிய போகிறது பணம் முடிந்தபின் என்ன செய்வது என்று தெரியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எங்களுடன் காணொலிக் காட்சி மூலமாக பேசியபோது உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால்; எங்களை அகதியாக பதிவது குறித்து எந்தவிதமான உறுதியான தகவலும் தெரிவிக்கவில்லை.

தற்போது அகதிகள் முகாமில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. இது குறித்து நாங்கள் அதிகாரியிடம் தெரிவிக்கையில் விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது.

எங்களுக்கு பாய், ஃபேன், தண்ணீர் குடம், உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டும் எங்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும். எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் வெளியே சென்று வேலை செய்தால்; மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும். எனவே எங்களை உடனடியாக அகதிகளாக பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நாங்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்ததற்கு அர்த்தமாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்திய ஏன் அகதிகளாக பதிய மறுக்கிறது?

இது குறித்து இலங்கையில் இருந்து வந்த மற்றொரு பெண் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடும் இன்னல்களுக்கு மத்தியில் என்னுடைய நகைகளை விற்று படகிற்கு பணம் செலுத்தி தமிழகத்திற்கு என் குடும்பத்துடன் அகதியாக வந்து தனுஷ்கோடியில் இறங்கினேன்.

வரும் வழியில் கடலில் ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் மழையால்; கடுமையாக பாதிக்கப்பட்டு, ‘வாழ்ந்தால் தமிழகத்தில் வாழ்வோம்; அல்லது கடலில் விழுந்து சாவோம்’ என்ற ஒரே நோக்கத்துடன் வந்த எங்களை நல்ல முறையில் வரவேற்ற தமிழக அரசு உடனடியாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

நான் தமிழகம் வந்து 25 நாட்களுக்கு மேலாகிறது ஆனால் தற்போது வரை எங்களை அகதியாக பதியவில்லை. இது எங்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இனி எங்கள் எதிர்காலம் தமிழகத்தில் தான் என தஞ்சம் புகுந்த எங்களை அகதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் வேறு எங்கு செல்வது.

எங்களை போல் பலரும் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வர தயாராக உள்ள நிலையில் இப்படி வந்தவர்களை அகதிகளாக பதியாமல் வைத்திருந்தால் எப்படி அவர்கள் தமிழகம் வர நினைப்பார்கள்.

அகதிகள் முகாமில் உள்ள அலுவலகத்தில் கேட்கும் போது மத்திய அரசு சார்பில் தற்போது வரை உங்களை அகதிகளாக பதிவு செய்ய எந்தவிதமான அதிகாரப்பூர்வ உத்தரவு வரவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் தான் உங்களை தற்போது இங்கு தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி அனுப்பும் பட்சத்தில் நான் எனது நகைகளை விற்று தமிழகம் வந்ததற்கான அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

எனவே தமிழக அரசு இந்திய அரசிடம் பேசி எங்களை அகதிகளாக பதிவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

திரும்பி செல்ல விருப்பம் இல்லை

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மற்றொரு இலங்கை தமிழர், நாங்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்தோம். பின்னர் அங்கிருந்து போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

இலங்கையில் இருப்பதைக் காட்டிலும் தமிழகத்தில் இருப்பது பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. நாங்கள் இலங்கையில் இருந்து கிளம்பும்போது விற்பனை செய்த உணவு பொருட்களின் விலை தற்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இன்னும் தொடர்ந்து விலை ஏற்றம் ஏற்படுவதுடன் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். குறிப்பாக நாங்கள் இலங்கையில் இருக்கும் போது 250 ரூபாய்க்கு விற்ற மைதா மாவு தற்போது 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பால் மாவு விலை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மண்டபம் அகதிகள் முகாமில் எங்களைச் சுற்றி உள்ள மக்கள் அனைவரும்; எங்கள் நாட்டு மக்கள் என்பதால் நாங்கள் எங்கள் நாட்டில் வாழ்வது போல் மகிழ்ச்சியாக உள்ளது.இங்கு காய்கறி மற்றும் உணவு பொருட்கள் விலை மிகவும் குறைவாக உள்ளதால் எங்களால் எளிதில் வாங்கிக்கொள்ள முடிகிறது. இலங்கையில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் பொருட்கள் இங்கு 100 ரூபாய்க்கு வாங்க முடிகிறது.

நாங்கள் கொண்டு வந்த பணம் முடிந்துவிட்டது. எங்களை வெளியே அனுப்பினால் தான் வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியும் ஆனால் எங்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் உள்ளேயே தங்க வைத்துள்ளனர்.

நான் கடந்த 1990ஆம் ஆண்டு போரின் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது மறுநாளே அகதியாக பதிவு செய்து அரசால் மாதம் 10 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

ஆனால், இன்று வரை எங்களை அகதிகளாக பதிவு செய்யாமல் முகாமில் அடைத்து வைத்துள்ளனர் என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் குழப்பமான மனநிலையில் தான் இங்கு தங்கி இருக்கிறோம் எங்களுக்கு மட்டுமல்ல எனக்கு முன்னால் வந்தவர்களும் இன்னும் அகதிகளாக பதியாமல் காத்திருக்கிறார்கள்.

நாங்களும் ஒவ்வொரு முறையும் அகதிகள் மறுவாழ்வு அதிகாரிகளிடம் கேட்கும்போது மேலிடத்தில் இருந்து எங்களுக்கு உத்தரவு வரும் வரை உங்களை அகதிகளாக பதிவு செய்ய முடியாது அதுவரை கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு தங்குமாறு சொல்கிறார்கள்.

எங்களை வேலைக்கு செல்ல அனுமதித்தால் தான் எங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கி கொடுக்கலாம் என்றார்.

திருப்பி அனுப்ப திட்டமா?

இது குறித்து ஓப்பர் தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், முன்பெல்லாம் அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களை உடனடியாக அகதிகளாக பதிவு செய்து மண்டபம் அகதிகள் முகாம் அல்லது தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்களுக்கு வீடு வழங்கப்படும்.

உயிர் பயம் காரணமாக இனி இந்த நாட்டில் உயிர் வாழ முடியாது என்று ஒரு நாட்டை விட்டு வருபவர்கள் மட்டும் அகதிகளாக பதிவு செய்ய முடியும்;. ஆனால் தற்போது இலங்கையில் இருந்து வருபவர்கள் பசி, பட்டினி என்று வருவதால் அவர்களை அகதிகளாக பதிவு செய்யாமல் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது தான் வழக்கம். தமிழக அரசின் சிறப்பு உத்தரவின் பெயரில் சமீபத்தில் இலங்கையில் இருந்து வந்துள்ள 75 பேரும் அகதிகளாக பதியாமல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

இவர்களுக்கு பதிவு கொடுக்க வாய்ப்பு இல்லை என எங்களுக்கு தெரிய வருகிறது. அகதிகளாக பதிவு செய்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பாமல் அவர்களுக்கு ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்படும் ஆனால் தற்போது வந்தவர்களுக்கு உணவு கொடுத்து விருந்தினர்களாக மட்டுமே தங்க வைத்துள்ளனர்.

இந்த 75 பேரையும் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அவர்களை பொருத்தளவு இது சிறையில் இருப்பது போல் தான் ஆனால் முகாம்களுக்குள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்.

இதுநாள் வரை தமிழகத்திற்கு அகதிகளாக வந்து ஒரு மாதத்திற்கு மேல் அகதிகளாக பதியாமல் யாரையும் தங்க வைத்ததில்லை. இதுவே முதல் முறை எங்களை பொறுத்தவரை இதே நிலை நீடித்தால் அவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்ப கூடிய நிலை தான் ஏற்படும்.

ஒருவேளை தற்போது வந்துள்ள இலங்கைத் தமிழர்கள் விரும்பினால் காவல் நிலையங்களில் பதிவு செய்து வெளியில் தங்கலாம். ஆனால் அவர்கள் அகதிகளாக பதிவு பெறாமல் எத்தனை நாட்கள் தமிழகத்தில் தங்கி இருந்தாலும் எந்த பயனும் இல்லை என்கிறார் ஓப்பர் தொண்டு நிறுவனத்தின்

Previous Story

என்னதான் ஒப்பந்தம் அது!

Next Story

ஹக்கீம் - நசீர் விவாதம்! ஆனால் தலைவர் வரார்!