பட்ஜட்டும் பல்டியும்!

-நஜீப் பின் கபூர்-

நாம் கடந்த வாரம் குறிப்பிட்டது போல ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்ஹ 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். இது ஊரும் உலகமும் சிரிக்கின்ற ஒரு வரவு செலவுத் திட்டம் என்றும் நாம் ஏற்கெனவே சொல்லி இருந்தோம். அது எவ்வளவு தூரம் யதார்த்தமாகி இருக்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்.

அத்துடன் இது முற்றிலும் ஐதேக. கொள்கைகளுக்கு இசைவாகத் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அடுத்து இந்த கணக்கு வழக்கு அறிக்கைகள் என்பது ஒரு ஊகம்-கற்பனை என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மறுபுறத்தில் பட்ஜட்டு சமர்ப்பிக்கின்ற அதே நேரம் புதிதாக ரணில் அரசு 1300 கோடி ரூபாய் பெருமதி மிக்க பணத்தை அச்சடித்திருக்கின்றார்கள். இது அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்கு என்று தெரிகின்றது.

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் வரவு செலவு அறிக்கைகள் என்பதும் இந்த ஊகம்-கற்பனை (யதார்த்தத்தின்) வெளிப்பாடாக திட்டமிடப்பட்டாலும், நமது நாட்டில் அது அரசியல்வாதிகளின் விருப்பு வெருப்பு அரசியல் தேவைகள் கற்பனை என்பவற்றின் அடிப்படையில்தான் வடிவமைக்கப்படுகின்றன. எனவே அதில் நம்பகத் தன்மை இருக்க வாய்ப்பு இல்லை. ரணில் சபைக்குச் சொன்ன அந்தக் கணக்குகளை இப்போது பார்ப்போம்.

  1. மொத்த வரவுகள் 3415 பில்லியன்
  2. துண்டுவிழும் தொகை 2404 பில்லியன்
  3. மொத்த செலவு 5819 பில்லியன்

என்றாலும் இந்த கணக்குகளில் எமக்கு உடன்பாடுகள் கிடையாது. வரவுகள் தொடர்பில் அவரது கணிப்புக்களில் முரண்பாடுகள் மூடிமறைக்கப்பட்ட புள்ளிவிபரங்கள்-தகவல்கள் இருக்கின்றன என்பது நமது குற்றச்சாட்டு. நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் 2023ல் தான் நடை முறைக்கு வரும். அப்போதுதான் இதன் நம்பகத் தன்மையை நாடு பார்க்கும்.

மொண்டசூரிக்குப் போகும் ஒரு பிஞ்சுக் குழந்தை கூட இதன் நம்பகத் தன்மைக்கு சான்றிதழ் வழங்க மாட்டாது. அந்தளவுக்கு இந்த நாட்டில் அண்மைக் கால வரவு செலவுத் திட்டங்கள் பற்றி அனைவரும் புரிதலுடன் கசந்து போய் இருக்கின்றார்கள். இதனால்தான் ஊர் சிரிக்கின்ற வரவு செலவு என்று நாம் இதனைச் சாடுகின்றோம். அத்துடன் வழக்கம் போல் ஒரு காலத்தில் நாம் ஆசியாவில் ஜப்பானுக்கு சமமான பொருளாதார வளத்தில் இருந்தோம் என்று ரணில் இந்த வரவு செலவு உரையிலும் சொல்லி இருந்தார்.

கெட்டுப் போன ஒரு குடும்பம் தமது மூதாதைகள் சொகுசு வாழ்வு பற்றிப் பேசிப் பெருமைபடுவது போலத்தான்  நமது அரசியல்வாதிகள் இந்த கதையை அவ்வப் போது நினைவு கூறி அதில் ஒரு சிற்றின்பத்தை கண்டு கொண்டிருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோம்.

அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கை என்பது பொதுவாக வருடத்தில் ஒரு முறை என்று இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் குறை நிறைப்பு என்றும் அவை அவ்வப்போது வருவதுண்டு.  இந்தக் குறை நிறைப்பு என்பது நமது நாட்டில் வருடத்தில் பல முறை வந்து போவதையும் நாம் பார்த்திருக்கின்றோம். எனவே நமது நாட்டில் வரவு செலவு குறை நிறைப்புகள் என்றும் ஒழுங்குகள் இருக்கின்றன.

1950 மற்றும் 1960களில் நமது நாட்டில் வரவு செலவுத் திட்டம் என்பது ஆணி அடித்தால் போல் உறுதியாக வருடத்தில் ஒரு முறை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கையாக இருந்தது. உலகில் பொருளாதார வளம் மிக்க நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் அது இன்றும் அப்படித்தான்  இருக்கின்றது.

நமது இளைய தலைமுறையினர் நாம் இங்கு கூறுகின்ற வருடம் ஒரு முறை மட்டும் வந்து போகின்ற வரவு செலவுத் திட்டங்களைச் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் நாள் தோரும் பஜெட். மக்களுக்குப் பொருளாதார நெருக்கடிகள். இது இலங்கையின் சமகால வரவு செலவு அறிக்கைகள் அல்லது பஜெட் பற்றிய எமது பொதுவான கருத்து.

வழக்கமாக நிதி அமைச்சர்கள் வரவு செலவு நாளில் ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வருவதும் அந்தப் பெட்டியை ஊடகங்கள் தமது செய்திகளில் காட்சிப்படுத்துவதும் வழக்கம். ஆனால் இந்தமுறை சில தாள்களைத்தான் ரணில் தனது கைகளில் எடுத்துக் கொண்டு சபைக்கு வந்தார்.

நமது வரவு செலவுத் திட்டங்களில் உள்ள ஏமாற்று கதைகளுக்கு-தகவல்களுக்கு நாம் ஒரு சின்ன உதாரணத்தை மட்டும் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். அந்த நமது கதையைக் கோட்க முன்னர் நமது நாட்டில் இருக்கின்ற மொத்தப் அரச பாடசாலைகளின் எண்ணிக்கை 10162 என்பதனை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த 2023  வரவு செலவுத் திட்டதில் பாடசாலைகளுக்கு ‘வைப்பை’ வசதி தருவதாக வரவு செலவுத் திட்ட உரையில் ரணில் சொல்லி இருக்கின்றார்.

இதே ரணில் 2015 தேர்தல் பரப்புரைகளின் போது நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் ‘வைப்பை’ வசதி தருவேன் என்று சொல்லி இருந்தது நம்மில் எத்தனை பேருக்கு ஞாபகத்தில் இருக்கின்றது.? அவர்கள் நல்லாட்சி 2015ல் அதிகாரத்துக்கு வந்தாலும் இது பாடசாலைகளுக்கு வரவில்லை?

2021 ஜூலை 25 நாள் முன்னாள் ஜனாதிபதி கோட்டா 10000ம் பாடசாலைகளுக்கு  உடனடி இன்டர்நெட் வசதி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அது எப்போதாவது பாடசாலைகளுக்கு வந்து சேர்ந்ததா? 2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தயாரிக்கின்ற போது கோட்ட தம்பி ஏழு தலை தனது வரவு செலவு அறிக்கையிலும்  மீண்டும் 10000ம் பாடசாலைகளுக்கு 2022ல் இருந்து இன்டர் நெட் வசதி என்று சொல்லி இருந்தது.

இப்போது 2023 வரவு செலவு அறிக்கையில் ஜனாதிபதி மீண்டும் ‘வைப்பை’- பாடசாலைகளுக்கு நவீன தொழிநுட்பங்கள் என்றெல்லாம் இந்த வரவு செலவுத்திட்டத்திலும் கதை விட்டிருக்கின்றார்.

ஒரு விடயத்தில் மட்டும் எத்தனை முறை இவர்கள் பாடசாலை மாணவர்களை மட்டும் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை மட்டும் எண்ணிப்பாருங்கள். இது மட்டுமா? உற்பத்திப் பெருக்கத்திற்கு  10000 மாதிரி விவசாயப் பண்ணைகள் பற்றியும் இந்த வரவு செலவு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் நல்லாட்சியில் அமைச்சர் தயா கமகே 10 ஆயிரம் விவசாயக் கிராமம் பற்றிப் பேசி இருந்தார். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் விஜேமுனி செய்யசா 2000ம் பழ உற்பத்திக் கிராமங்கள் பற்றியும் பேசி இருந்தார்கள்.  இதில் பத்தில் (1ஃ10) ஒன்றாவது எங்காவது உருவாக்கப்பட்டதா என்று கேட்கத் தோன்றுகின்றது. இவ்வாறான புள்ளி விபரங்கள்-வரவுகள் பற்றிய தகவல்களுடன் சபைக்கு வந்திருக்கின்ற பஜெட்டை இந்த நாட்டில் வாழ்கிகன்ற குடிமக்கள் எவ்வளவு தூரம் நம்புவாhகள்?

ரணிலின் சகா அமைச்சர் ஹரின் பார்ணாந்து, வரிகள் எதுவுமே அற்ற மிகச் சிறப்பான ரணிலின் 2023 வரவு செலவு அறிக்கை என்று இதனைப் புகழ்ந்து தள்ளி வருகின்றார்.  அதே நேரம் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து ஒன்றரை  ரில்லியன்  பணத்தை வரியாக அரசு எதிர்பார்க்கின்றது என்று குற்றம் சாட்டி வருகின்றார்.

இப்படியாகப் பார்க்கின்ற போது இந்த 2023 வரவு செலவு அறிக்கையும் ஒரு நகைச்சுவை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் எந்த நம்பகத் தன்மையும் கிடையாது. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் ரூபாவின் பணப் பெருமதி அதிகரித்திருக்கின்றது என்ற ரணிலின் பொய்யான தகவல். ரணிலின் ரூபாவின் பெருமதி அதிகரிப்புப் பற்றி மத்திய வங்கி ஆளுநரிடம் கேட்டால் அதற்கு அவர் பதில் கொடுக்காது ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அங்கிருந்து ஸ்கெப்பாகி விட்டார்.

நாட்டில் குழந்தைகளிடம் போசாக்கிண்மை ஏற்பட்டிருக்கின்றது என்று வைத்தியத் துறையினரும் உலக சுகாதார நிறுவனமும் சொன்ன போது இது பிழையான தகவல்கள் அப்படி எதுவும் நாட்டில் இல்லை. எவரோ உலகிற்குத் தவறான தகவல்களை வழங்கி அரசை நெருக்கடிகளுக்கு ஆளாக்கின்றார்கள் என்று ஆளும் தரப்பு அமைச்சர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால் இந்த வரவு செலவு அறிக்கையில் ஜனாதிபதி போசாக்கின்மையை ஏற்று கருத்து வெளியிட்டிருக்கின்றார். இது என்ன  முரண்பாடு.

நாட்டிலுள்ள இருக்கின்ற 57 இலட்சம் குடும்பங்களில் 34 இலட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை எதிர்பார்க்கின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியாக இருந்தால் நாடு எங்கே நோக்கி நகர்கின்றது என்று ஒருவர் புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையிலும் நெருக்கடியே இல்லாத ஒரு நிலையில்  பாதுகாப்ப அமைச்சுக்கு அதிக பணம் ஒதுக்கீடு செய்ப்பட்டிருக்கின்றது. மேலும் சிறை திணைக்களத்துக்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக பணம் ஒதுக்கிடப்பட்டிருக்கின்றது. வருகின்ற நாட்களில் அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இருங்கும் போது அவர்களை உள்ளே பிடித்துத் தள்ளுவதற்குத்தான் அரசு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றது என்பது இதிலிருந்து தெளிவாக்கின்றது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் கஞ்சா பற்றிய தனது கருத்துக்கு ரணில் செவிசாய்த்திருப்பது குறித்து டயான கமகே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார். ஆனால் இந்த கஞ்சா உற்பத்தி பற்றிய கருத்தை ஆராயவே ரணில் ஆலோசனை கூறி இருக்கின்றாரே அல்லாமல் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கான எந்த ஏற்பாடும் இதில் கிடையாது. இது பற்றி நாளை பௌத்த மதத்தை முன்னிருந்தி எதிர்ப்புக்கள் வரும் போது நான் ஒரு பேச்சுக்குத்தான் கஞ்சபற்றி ஆராயச் சொன்னேன் என்று நிச்சயம் ரணில் குறிப்பிட்ட தப்பிக் கொள்வார். ஆனால் அமைச்சர் டயானாவோ கஞ்சா உற்பத்தியில் வருகின்ற வருமானம் பற்றி பில்லியன் ரில்லியன் என்று நாட்டுக்கு கணக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

தற்போது ஒரு இலட்சம் ரூபா பணத்தை ஒருவர் வைத்திருக்கின்றார் என்றால் அதன் உண்மையான பெருமானம் வெரும் முப்பது ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் பேசும் போது குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கு கடந்த ஆண்டை விடக் குறைவான நிதியே ஒதுக்கீடு செய்ப்பட்டிருக்கின்றது என்றும் விஜித குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து அரசு ஊழியர்கள் சம்பளத்துக்கும் ரணில் அரச ஆப்பு வைக்க எண்ணி இருக்கின்றதா என்று யோசிக்க இடமிருக்கின்றது.

ரணிலின் நண்பர் அர்ஜூன் மஹேந்திரனின் மெண்டிஷ; கம்பணி அரசுக்கு 515 கோடி ரூபாயை வரியாகச் செலுத்த வேண்டும் என்று நீதி மன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது. அத்துடன் அதன் உற்பத்தியை நிறுத்தும் படியும் கேட்டிருந்தது. ஆனால் ரணில் மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்க அனுமதியை வழங்கி இருக்கின்றார். அப்படி இருந்தும் அந்த நிறுவனம் நீதிமன்ற உத்தரவை மதித்து இன்றுவரை பாக்கி வரிப் பணத்தை செலுத்தாமல் இருக்கின்றது.

இது ரணில் அவர்களது நண்பர் என்பதனாலா என்றும் விஜிதஹேரத் நாடாளுமன்றில் ரணிலிடம் நேரடியாகக் கேட்டார். அதற்கு அவர் பதில் கொடுக்கவில்லை. இதுதவிர இன்னும் பதினொரு சாராய உற்பத்தியாளர்கள் அரசுக்கு 5000 கோடி ரூபாய்களை வரியாக செலுத்த வேண்டி இருக்கின்றது.  இவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். கதை அப்படி இருக்க அரசு கீழ் மட்ட மக்களுக்குதான் இந்த 2023 பட்ஜட்டிலும் அதிக வரியை சுமத்தி இருக்கின்றது.

அத்துடன் நஷ;டத்தில் இயங்குகிகன்ற அரச நிறுவனங்கள் மட்டுமல்லாது பெரும் இலாபத்தில் இயங்குகின்ற இலங்கை டெலிகொம் நிறுவனம் மற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பனவும் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றது. இந்த வரவு செலவு அறிக்கை வருவதற்கு முன்னரே ஐஎம்எப்.பின் நோக்கங்களுக்கு ஏற்றவாறு அரசாங்கம் வரிகளை முன்கூட்டியே விதித்திருந்ததும் தெரிந்ததே. வரவு செலவு அறிக்கை வந்த மறுநாள் 634 பொருட்களின்  விலையை உயர்த்தி அரசு வர்த்தமானியை வெளியிட்டிருந்தது. எனவே வரியில்லா வரவு செலவ அறிக்கை என்று எப்படிச் சொல்ல முடியும்.?

தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற மொட்டுக் கட்சியினர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து மொட்டுக் கட்சிக்கு எதிராக குறிப்பாக ராஜபக்ஸாக்களுக்கு எதிராக பேசிவருகின்றார்கள். சிலர் சஜித் அணியுடன் இணைந்தோ அல்லது கூட்டாகவோ அரசியல் செய்யும் முயறச்சியில் கடந்த வாரம் இறங்கி இருந்ததையும் பார்க்க முடிந்தது. இது ஒன்றும் பெரிய இசுவே கிடையாது. வருகின்ற தேர்தலில் மீண்டும் நாடாளுமனறம் வருவதாக இருந்தால் ஒரு பிரதான அணியில் டிக்கட் வாங்குவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் நகர்வுகள்தான் இவை. இதில் மக்களுக்கு எந்த நலன்களும் கிடையாது. சுத்தமாக தன்னலம் சார்ந்த வியூகங்களைத்தான் அவர்கள் வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வரவு-செலவு அறிக்கைக்கான வாக்கெடுப்பு நடக்கின்ற போது மொட்டுக் கட்சியின் செல்வாக்கையும் மக்கள் நலன்களில் அக்கரையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் கண்டு கொள்ள முடியும்.

நன்றி: 20.11.2022 ஞாயிறு தினக்குரல்                             

Previous Story

இலங்கை பெண்கள் ஓமனில் பாலியல் தொழிலுக்கு விற்பனை 

Next Story

மலேசியா:GPS, BN, PN, GRS  இணைந்து அரசாங்கத்தை அமைக்க ஒப்புதல்