நூலறுந்த காற்றாடியின் நிலைமையில் அரசாங்கம்!

நஜீப் பின் கபூர்

நாம் இங்கு எழுத்துக்களை சேகரித்து முடியுமான மட்டும் வார்த்தைகளில் மக்களுக்கு நாட்டு நிலமையைத் தொடர்ந்து சொல்லி வருகின்றோம். ஆனால் நாம் வார்த்தைகளில் சொல்வதை விட நிலமை மிகவும் மோசமாக-கோரமாக இருக்கின்றது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது இன்றோ நாளையோ அல்லது ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ வருடத்திலோ சீராகின்ற நிலையில் இல்லை. வண்டியிலுள்ள நான்கு டயர்களும் பஞ்சர். வண்டிக்கு எரி பொருள் கிடையாது. இந்த நிலையில் எஞ்சினிலும் பாரிய கோலாறு எப்படித்தான் ஐயா இந்த வண்டி ஓடமுடியும் என்றுதான் நாம் கேட்க வேண்டி இருக்கின்றது.

பிரச்சினையை கொரோனாவின் தலையில் கட்டிவிட்டு ஆட்சியாளர்கள் தப்பிக் கொள்ள முயன்றார்கள். இப்போது உக்ரைன் போருக்கும் முடிச்சுப் போடப்பார்க்கின்றார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறுதான் பிரச்சினைகளுக்கு மூலகாரணம் என்றார்கள். ஆனால் தேர்தல் மேடைகளில் ஒரு பத்து நிமிடங்களில் ஏனும் ஒருநாளும் மக்களை இருளில் போட மாட்டோம் என்று சொல்லி மக்களைக் கரகோஷம் பண்ண வைத்தும் உள்ள எல்லாப் பொய்களையும் இனவாத்தையும் கக்கித்தான்-சொல்லித்தான் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது என்பதை மூடிமறைக்க முடியாது. அதே போன்று கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளும் இதற்குக் காரணம் என்பதனையும் நாம் தொடர்ந்து சொல்லி வந்திருக்கின்றோம்.

இதில் யார் பங்கு அதிகம், யார் மக்களின் சொத்துக்களைக் கூடக் குறைய கொள்ளையடித்தார்கள் என்பதனையும் புத்திகூர்மையுள்ள மக்கள் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். இது பற்றி கடந்த கட்டுரைகளில் நாம் தொடர்ச்சியாக மக்களைத் தெளிவுபடுத்தி வந்திருக்கின்றோம். மீண்டும் மீண்டும் அந்த விவகாரங்களை இங்கு பேசாது இனியும் இந்த வண்டி நகர்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்பதற்க்கான விடயங்களை மட்டும் இங்கு பேசலாம் என்று எதிர் பார்க்கின்றோம்.

இந்த வாரம் 500மில்லியன் மற்றும் 400மில்லியன் என்று  இந்தியாவுக்கு இரு கடன்களைச் செலுத்த வேண்டி இருக்கின்றது. அதனை மேலும் ஒரு மாதங்கள் வரை நீடித்துத் தருமாறு கேட்டிருப்பதாக ஒரு தகவல். இந்தியா தருவதாகச் சொல்லி இருக்கின்ற 1000 மில்லியன்களில் கடனை திருப்பி அவர்களுக்கே கொடுக்கும் திட்டமோ என்னவோ தெரியாது. அப்படியானால் அதில் எஞ்சப் போவது வெறும் 100 மில்லியன் டொலர்கள் மட்டுமே, அதனை வைத்துக் கொண்டு என்னதான் பண்ண முடியும். இதற்க்கிடையில் பங்களதேஷிடம் இருந்து பெற்றுக் கொண்ட 200 மில்லியன் கடனை திருப்பிக் கொடுப்பதாற்கான நீடித்த இரண்டாவது தவணையும் அடுத்த மாதம் வருகின்றது.

அத்துடன் இந்தியா தருவதாகச் சொல்லி இருக்கின்ற பணத்தை வழங்குவதற்கு நிறையவே கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தக் கோரிக்கைகளுக்கு இணங்குவதில் அரசுக்கு நிறையவே நெருக்கடிகள் எதிர்நோக்க வேண்டி இருக்கின்றது. ஆனால் இதனை விட்டால் வேறு வழிகளும் அரசுக்குக் கிடையாது. உள்நாட்டில் அரசியல்வாதிகள் மக்களுக்கு சொல்வதைப் போல் இந்தியாவுக்கும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காலத்தை ஓட்ட இனியும் அரசாங்கத்தால் முடியாது. அதே போன்றுதான் சர்வதேசத்தையும் இதன் பின்னர் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்ற முடியும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

ஜனாதிபதி ஒரு திகதியைக் குறித்து இதன் பின்னர் ஒரு போதும் நாம் மின்சாரத்தை வெட்ட மாட்டோம் அது மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறுகின்றார். பிரதமர் நிதி அமைச்சர் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்களும் அப்படித்தான் வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படிச் சொல்லி மூன்று மணி நேரத்துக்குக் கூட சொன்ன படி செய்ய முடியவில்லை. இப்போது அது சதி என்று கூறுகின்றார்கள். எரி பொருள் கப்பலைக் கடலில் வைத்துக் கொண்டுதான் அதற்குக் கொடுக்க வேண்டி பணம் தேடி ஓடித்திரிகின்றது அரசாங்கம். அதற்கு வேறு கோடிக் கணக்கில் தாமதக் கட்டணம் அதிலும் கொமிஷ் வியாபாரமோ என்னவோ தெரியாது.

வேலை நாட்களைக் குறைப்பது பற்றியும் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு வேறு மக்களுக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதிகாரம் படைத்தவர்கள் இருக்கின்ற பிரதேசங்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக மின்னசாரம் என்று வேறு மக்கள் போர்க் கொடி. ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் எப்படி இது நடக்க முடியும் என்று பெண்களே ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களின் செயல்திறன் இல்லாததால்தான் மக்களுக்கு மின்சார வினியோகத்திலும் எரி பொருள் வினியோகதிலும் தொல்லைகள் என்று சொன்னார்கள். இப்போது அதனை விட நிலமை மிகவும் மோசமடைந்திருக்கின்றது. இவை எல்லாம் அப்பட்டமான பொய்கள் என்பது இப்போது தெரிகின்றது. நாட்டில் டொலர் கையிருப்பு வெறும் 400 மில்லியன் வரையில்தான் இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. இதன் பின்னர் எப்படித்தான் அரசு நகர முடியும் ஒரு நாளைக்கு 1200 கோடி வரை அரசுக்குத் தேவைப்படுகின்றது. தின வருமானம் 400 கோடி மட்டும்.

எந்தளவுக்குத் திறமையான வைத்தியார் நோயளிக்கு வைத்தியம் பார்த்தாலும் ஆள் தேருவதற்கான கட்டத்தை கடந்து போய் நிற்க்கின்றார். இதுதான் யதார்த்தம். அரசு நாம் ஐஎம்எப். பிடம் போக மாட்டோம் என்று கூறுகின்றார்கள். ஆனால் அதனிடம் மண்டியிடும் நிலையில்தான் அரசு இன்று இருக்கின்றது. வேறுவழியில்லை. அங்கு போனாலும் எதிர்பார்க்கின்ற வேகத்தில் நாடு மீள்எழப்போவதில்லை. அதற்கு குறைந்தது இரண்ட மூன்று வருடங்கள் தேவைப்படும். மக்கள் நிறையவே தியாகங்களைச் செய்ய வேண்டி இருக்கும். கோடிக் கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளயடித்தவர்கள் ஏதேனும் வெளி நாடுகளுக்கு ஓடிப் போய் பிழைத்துக் கொள்வார்கள். தற்போதய நிலையில் எந்த அரசு பதவிக்கு வந்தாலும் நிலை இதுதான். அதனை குடிமக்கள் நன்றாக விளங்கிக் கொள்வது ஆரோக்கியமானது. அதே நேரம்  அவர்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பதற்காவும் எதுவும் நடக்கப்போவதில்லை.

இதற்கிடையில் ஆளும் தரப்பினர் தமக்குள் குடுமிச் சண்டையைத் துவங்கி இருக்கின்றார்கள். இது ஒரு நாடகம் என்று சிலர் கருதுகின்றனர். இது நாடகம் என்பதனை விட ஏமாற்றுக்காரர்கள் ஒருவரை ஒருவர் மாட்டி விட்டு பிரச்சினையிலிருந்து தப்பிக் கொள்ளும் ஒரு முயற்ச்சிதான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. நிதி அமைச்சர் பீ.ஆர். தான் எல்லாவற்றிற்கும் காரணம் அவரை விரட்டியடித்தால் தான் நாட்டைக் காப்பற்ற முடியும் என்று இப்போது சிலர் பேசுகின்றார்கள். அவர் ஓர் அசிங்கமான அமெரிக்கனாம்.! விமல் வீரவன்ச பீ.ஆர். இருக்கின்ற அமைச்சரவையில்தான் ஒரு போதும் இருக்க மாட்டேன் என்று பகிரங்கமாகத் தற்போது கூறி வருகின்றார். அதே நேரம் கடந்த வாரம் நிதி அமைச்சர் பீ.ஆர். இதே வார்த்தையைத்தான் விமலுக்குக் கூறி இருந்தார். அதனால்தான் ஜனாதிபதி ஆளைத் தூக்கி இருந்தார். இது அனைவரும் அறிந்த கதை. எனவே ஒருவர் மற்றவருக்குப் பந்தை பாஸ் பண்ணி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதன் பின்னர் ராஜபக்ஸாக்களுடன் தனக்கு எந்த அரசியல் உறவும் இல்லை என்றும் தற்போது விமல் கூறி இருக்கின்றார்.

நிதி அமைச்சர் பீ.ஆர். ஆளும் தரப்பில் அனைத்து இடங்களிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டார் என்று நாம் மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லி இருந்தோம். இப்போது அவரை விரட்டியக்கின்ற வேலை நடந்து கொண்டிருக்கின்றது. ராஜபக்ஸாக்கள் அணிக்குள்ளிருந்தும் அவருக்கு எதிராக அம்பு எறிய ஆட்கள் தயார் நிலையில் இருக்கின்றார்கள். இதனை வரும் நாட்களில் பார்க்க முடியும். இதனால் இன்று ஆளும் தரப்பில் நிதி அமைச்சர் ஆதரவுக்குழு அவருக்கு எதிரான குழு மதில் மேல் பூனையாக நிற்க்கின்ற குழு என்று மூன்று அணிகள் இருக்கின்றன. அப்படியானால் ஜனாதிபதி, பிரதமர் என்போர் எந்த அணி என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம் அவர்களுக்கு எந்த அணியும் தற்போதைக்கு கிடையாது. என்றாலும் எவ்வளவு காலம்தான் இன்னும் அதிகாரத்தில் இருக்க முடியும் என்பதும், தமது வாரிசுக்கு என்ன நடக்கும் என்பதுதான் பிரதமருக்கு பதில் தெரியாத கேள்வியாக இருக்கின்றது.

இதற்கிடையில் ஆளும் தரப்பிலுள்ள எதிரணிகள்-கூட்டணிகள் என்று சொல்லும்  கதைகள் எல்லாம் மாயை என்பதுமதான் எமது கருத்து. கடந்த ஜனாதிபத் தேர்தலில் கோட்டா ஒரு இராணுவ அதிகாரி அவர் வேட்பாளராக வரக்கூடாது என்று பகிரங்கமாக பேசித் திரிந்தவர்தான் வாசுதேவ நாணயக்கார. ஜீ.ஆர். வேட்பாளராக வந்த போது அவர் பெட்டிப்பாம்பாகி விட்டார். இப்போது அவர் என்ன செய்கின்றார் என்று பாருங்கள்? தான் அமைச்சு வேலைகளைப் பார்க்க மாட்டோன் விமலுக்கும் கம்மன் பிலவுக்கும் நியாயம் வரும் வரை என்று கூறுகின்றார். ஆனால் அவர் அமைச்சர்.

சுதந்திரக் கட்சி என்ன செய்கின்றது. அதில் அமைச்சுப் பதவிகளை வகின்றவர்கள் தமது பதவிகளை விட்டுக் கொடுக்கத் தயார் இல்லாத நிலை. அந்தக் கட்சிக்கு ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாதுள்ளது. அதன் செயற்குழு என்னதான் தீர்மானம் போட்டாலும் அது வெறும் ஏட்டுச்சுரக்காய். மைத்திரி கூட சேற்றில் நட்ட தடிபோன்றுதான் காரியம் பார்க்கின்றார். இதற்கிடையில் மீண்டும் ரணில் பிரதமர் என்றும் ஒரு கதை ஊடகங்களில் வலம் வருகின்றது. நாம் வழக்கமாக சொல்வது போல அந்த செல்லாக் காசு மீது இப்படியாக மிகைப்பட்ட நம்பிக்கை வைப்பது கூட எவ்வளவு கேவலமான அரசியல் புரிதல் என்றுதான் கேட்க வேண்டி இருக்கின்றது. அதனை நம்புவதற்கும் நாட்டில் ஒரு கூட்டம் இருப்பது நம்மைப் பொறுத்து வேதனையான கதை.

இவற்றை விட மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால் நாங்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் நம்பி ஆளும் தரப்பில் தான் இருப்போம் என்று விரட்டப்பட்டவர்கள் கூறுவதுதான். இதே ஜனாதிபதிதான் இரட்டைப் பிரசைக்காரான தனது தம்பியை உள்ளே எடுக்க இவர்களிடத்தில் ஆதரவைப் பெற்றுக் கொண்டு அந்த விடயத்தில் சொன்னபடி இன்றுவரை காரியம் பார்க்கவில்லை என்றும் விமலும் கம்மல்பிலவும் வேறு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். என்னதான் இருந்தாலும் இரத்த உறவு கனதியாகத்தான் இன்று வரை இருக்கின்றது. அதில சேதம் ஏற்படும் என்பது எதிர்பார்க்க முடியாததொன்று.

தற்போது ஆளும் தரப்பில் உள்ள உறுப்பினர்கள்: தனியே மொட்டுத் தரப்பில் -116. சு.கட்சியில் -14. விமல் தரப்பு -6. வாசு தரப்பு -2. டக்லஸ் -2. கம்மன் பில -1. பிள்ளையான்-1 கம்யூனிட் -1 சமசமஜி -1 டிரன் அலஸ் -1 அசங்க நவரத்ன 1 திலிந்து குமார- 1 என்றும் இருக்கின்றார்கள். ஆனால் ஆளும் தரப்பிலுள்ள இந்தக் குட்டிக் காட்சிக்கள் மத்தியில் ஐக்கியம் கிடையாது. இந்த அரசு பதவியில் இருக்கும் வரை ஒட்டுண்ணியாக இருந்து பிடுங்கவதுதான் அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. மக்கள் இவர்களிடம் நம்பிக்கை வைப்பதாக இருந்தால் வேஸ்ட்-முட்டால்தனம். இதற்கிடையில் ஹக்கீம் ரிஷாட் ஆளும் தரப்புக்கு அனுப்பி வைத்தவர்கள் தலா 4, 3 என்று அரசுக்குத் துணையாக அங்கே இருக்கின்றார்கள். மலையகத்திலும் ஒன்று.

சந்திரிக்கா ஒரு காலத்தில் ஒரு ஆசனத்தை மட்டும் மேலதிகமாக வைத்துக் கொண்டு வெற்றிகரமாக அரசாங்கத்தை முன்னெடுத்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் பணத்துக்கும் பதவி பட்டங்களுக்கும் விலைபோகக் கூடியவர்கள் நிறையவே இருக்கின்ற இந்த நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்புக்கு உடனடியாக ஆபத்துக்கள் இல்லை. இவர்களுக்கு ஏதாவது வாய்க்கு அரிசி போட்டு விட்டால் இந்த அரசு காலத்தை ஓட்டி விடும். ஆனால் மக்கள் வீதிக்கு இறங்கினால் கதை வேறு.

தற்போது அரசுககும் அரச கட்டளைகளுக்கும் வர்த்தமானி அறிவிப்புக்களுக்கும் எந்தத் தொடர்புகளும் கிடையாது. அது நூலருந்த பட்டம் போல் தெடர்பில்லாமல் இருக்கின்றது. எனவே ஜனாதிபதி பிரதமர் நிதி அமைச்சர் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்கள் அரசு உயர் மட்ட அதிகாரிகள் எல்லாம் பேசுகின்ற கதைகளும் நடை முறையில் அமுலாவதில்லை.  இதனை நாம் சொல்லித் தெரிந்து கௌ;ள வேண்டியதில்லை மக்கள் அன்னறாடம் அனுபவித்து வருகின்றார்கள்.

இன்று அரச வருமானத்தை உடனடியாக அதிகரிப்பதற்கான எந்த மார்க்கங்களும் கிடையாது. ஆனால் செலவுகளைக் குறைக்க முடியும். அதனைத்தான் அரசு தற்போது செய்ய முயல்கின்றது. மேலும் அபிவிருத்தித் திட்டங்களை கைவிட முடியும். நாம் அறிந்த வரை ருவன்புர அதிவேக வீதி அமைப்புக் கைவிடப்பட்டதாக ஒரு தகவல். ஆனால் இது ஒரு முழுப் பிரச்சினையிலும் ஒரு பத்துசதவீத தீர்வைக் கூடத் தர மாட்டாது என்பதுதான் எமது கணிப்பு. எனவே நாட்டைக் கடவுள் நேரடியாக வந்தாலும் காப்பாற்ற முடியாத அளவுக்கு நமது அரசில்வாதிகள் அதை சீரழித்து விட்டார்கள். விரும்பியோ விரும்பமாலோ நாமும் எமது சந்ததியினரும் இந்த துன்பங்களுக்கு முகம் கொடுத்தாக வேண்டி இருக்கின்றது. இந்த இக்கட்டன நிலமையை அரசு குடிமக்களுக்கும் மூத்தவர்கள் இளையவர்களுக்கும் தெளிவு படுத்த வேண்டும்.

டொலர் விலை வருட இறுதியாகும் போது 350 ரூபாயைத் தொட்டாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை. உக்ரைன் போர் தொடர்ந்தால் எரி பொருள் விலை தற்போது இருப்பதை விட ஐந்து மடங்கு அதிகரிக்கலாம். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் போர் நமக்குப் பெரும் பாதிப்புக்களைக் கொண்டு வரும் என்று எச்சரிக்கின்றார். அப்படியானால் ஏற்கெனவே மரத்தால் விழுந்திருக்கின்ற நமது நிலை என்னவாக இருக்க முடியும்.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 13.03.2022

Previous Story

யுக்ரேன் போர்: "எவருக்கும் சாக விருப்பமில்லை" - ஆயுதமேந்திய சிறார்கள்

Next Story

ஊர் போக அமைச்சு வேண்டும்!