நீதி அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும்! 

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் தெரிவித்த எதேச்சாதிகார கூற்றைக் கண்டித்துள்ள இலங்கையின் தொழிற்சங்கத் தலைமை, மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென நீதி அமைச்சரை வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 27ஆம் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரி, இலத்திரனியல் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில், நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான தீர்வாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவது குறித்து முன்மொழிந்த நிலையில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் துறைமுகம், எண்ணெய்க் கூட்டுத்தாபனம், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் வைத்தியத் துறைகளில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை சட்டப்பூர்வமாக இரத்து செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக இதனை இரத்து செய்வது மிகவும் பொருத்தமானது எனவும், காவல்துறைக்கும் இராணுவத்திற்கும் இந்த உரிமை இல்லை என்பதே அவரது வாதமாகவும் அமைந்திருந்தது. மக்களைப் புறக்கணிப்பது நியாயமற்றது எனவும், இந்த போராட்டங்களுக்குப் பின்னால் நாசகார சதிகள் இருக்கலாம் எனவும் அவர் கூறியிருந்தார்.

துறைமுகங்கள், எரிபொருள் மற்றும் மின்சார சபையில் அண்மைக்காலமாக நிலவும் அமைதியின்மையைக் கருத்திற்கொண்டு அமைச்சர் சதித்திட்டங்களை குறிப்பிட்டதாக தொழிற்சங்க தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டை ஆட்சி செய்வதில் எவ்வித நோக்கமும் இல்லாதபோது, சரியான திட்டமிடல் மற்றும் இலக்குகளுடன் பொது சேவையை பராமரிக்க முடியாதபோது, வீழ்ச்சி அடைந்து வரும் தேசிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்மொழிய முடியாத நிலையில் நீதியமைச்சர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

எவ்வாறாயினும், மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்து ஜனநாயக சமூக வெளிகளை முடக்கும் ஆட்சிக்கு சட்டம் இயற்றுவது இந்த அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கின் ஒரு பகுதியல்ல என்பதை தொழிற்சங்க தலைவர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு நினைவூட்டியுள்ளனர்.

தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 தொழிற்சங்கங்கள் சார்பாக அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், நீதி அமைச்சரின் ஜனநாயக விரோதப் பிரேரணைகள் வெறுமனே அரச ஊழியர்களை மாத்திரம் இலக்கு வைக்கவில்லை என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினரும், நீதி அமைச்சருமான அலி சப்ரி மக்களுக்கு பொறுப்புக் கூறாமல் இருந்தாலும், 69 இலட்சம் மக்களுக்காக தீர்மானங்களை மேற்கொள்ளாது 22 மில்லியன் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதே அதிகாரத்திற்கு வந்த அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பு என்பதை உழைக்கும் மக்களின் தொழிற்சங்கத் தலைமை அமைச்சருக்கு நினைவூட்டுகிறது.

நாளுக்கு நாள் சரிந்து வரும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வுக்கான தேசிய திட்டத்தை உடனடியாக முன்வைப்பதற்கு பதிலாக, ஜனநாயக சமூகத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை ஒழிப்பதற்கான முன்மொழிவுகளை முன்வைத்தமைக்காக, சுயமரியாதை இருந்தால் மக்களிடம் மன்னிப்பு கேட்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அமைச்சரின்வெட்கக்கேடானபிரேரணைகளைஉடனடியாகமீளப்பெறக்கோரிஅரசமற்றும்தனியார்துறைகளில்உள்ளஅனைத்துதொழிற்சங்கங்களும்இணைந்துபொதுப்போராட்டத்தில்ஈடுபடவேண்டும்எனதொழிற்சங்கத்தலைவர்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Previous Story

கெஜ்ரிவால் கிண்டல்!

Next Story

முனியை சந்திக்க குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்ற பேராயர்