நாம் தமிழர் – திமுகவினர் மோதல்

-ஏ.எம். சுதாகர்-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், மேடையில் இருந்த மைக்கையும் அவர்கள் பிடுங்கி வீசியதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியை பிபிசி தமிழ் தன்னிச்சையாக உறுதிப்படுத்தவில்லை.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசும்போது, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த திமுகவின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் மற்றும் சில திமுகவினர் மேடை மீது திடீரென்று ஏறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் பேசினர்.

இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மேடையில் இருந்த மைக் செட் கீழே தள்ளப்பட்டது. இது தொடர்பான காணொளி சமுக வலைதளங்களில் வைரலானதால் இந்த சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் காவல் துறையினர் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி தர்மபுரி மாவட்டம், அரூர் மொரப்பூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திடீரென உள்நுழைந்த திமுக குண்டர்கள் அத்துமீறி மேடையேறி நாம் தமிழர் கட்சியினர் மீது

என்ன நடந்தது?

நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு முன்னிலை வகித்த அக்கட்சியின் அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திலிப்பிடம் பேசினோம்.

“பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். எங்கள் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மொரப்பூர் திமுக ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், அண்ணல் நகர் அண்ணாதுரை, கேபிள் ராஜா உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டோர் மேடையில் ஏறி பேச்சாளரை தாக்க முற்பட்டனர். நாங்கள் பேச்சாளரை பாதுகாப்பு வளையமாக இருந்து காத்துக் கொண்டிருக்கும் போதே, தகாத வார்த்தைகளை பயன்படுத்தியவாறு மேடையில் இருந்த மைக், மேஜை ஆகியவற்றை தள்ளிவிட்டனர்,” என்று கூறினார்.

“கருத்துக்களை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் நாற்காலி, மைக்கை தூக்கி உடைத்து போட்டனர். பிரச்னை ஏற்படாமல் காவல்துறையினர் தடுத்து அவர்களை மேடையிலிருந்து இறக்கி அழைத்துச் சென்றனர்,” என்றார் திலீப்.

நாம் தமிழர் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட பொருளாளர் செந்தில் கூறும்போது, எங்களுடைய கருத்துகள் அவர்களுக்கு ஏற்புடையவை இல்லை என்றால் எங்கள் மீது வழக்கு போட வேண்டும். அதை விடுத்து இப்படி அநாகரிகமாக அராஜகமாக வன்முறையை கையில் எடுத்து எங்களை தாக்க முற்படுவது நாகரிகமான செயல் கிடையாது என்று தெரிவித்தார்.

ஹிம்லர்

“இது குறித்து இதுவரை நாங்கள் காவல் நிலையத்தில் எந்த புகாரும் கொடுக்க வில்லை. கட்சித் தலைமைக்கு தெரிவித்து இருக்கிறோம் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி எங்களுடைய எதிர்கால நடவடிக்கை இருக்கும்,” என்றார்இந்த விவகாரத்தில் மேடை ஏறி பிரச்னை செய்ததாக கூறப்படும் திமுகவின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன்னிடம் பேசினோம்.

“நாம் தமிழர் கட்சியினர் கூட்டம் தொடங்கிய நேரத்திலிருந்து எங்கள் தலைவரையும் தலைவர் குடும்பத்தாரையும் தரக்குறைவாக திட்டிக் கொண்டே இருந்தனர். நான் இது பற்றி காவல்துறையினரிடம் முறையிட்டேன். இதுபோல பேசாமல் இருக்க அவர்களை தடுத்து நிறுத்துங்கள் என்று கூறினேன். ஆனால் தொடர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் நானே மேடைக்குச் சென்று ஏன் இப்படி தரக்குறைவாக பேசுகிறீர்கள்? தலைவர் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் தானே ஆகிறது. அதற்குள் என்ன செய்துவிட முடியும் ? சற்று பொறுத்திருந்து பார்த்தால்தான் அவருடைய முழு செயல்படும் தெரியவரும் என்று சொன்னேன்,” என்றார்.

“இந்த வாக்குவாதம் நடந்தபோதே ஒரு குட்டி கலாட்டா நடந்து விட்டது. ஒரு மணி நேரம் நடந்த காட்சியில் 5 நிமிடங்கள் மட்டுமே எடிட் செய்த காணொளியை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்கள் கூறுவது போல நாங்கள் நாற்பது, ஐம்பது பேரெல்லாம் செல்லவில்லை. மூன்று பைக்கில் நாங்கள் ஆறு பேர் தான் வந்திருந்தோம். முதல்வர் உள்ளிட்டோரை அவதூறாக பேசியது குறித்து எங்களுடைய மொரப்பூர் இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார்,” என்றார் செங்கண்ணன்.

மொரப்பூர் காவல்துறை ஆய்வாளர் வசந்தாவிடம் இந்த விவகாரம் பற்றி கேட்டபோது, “நாம் தமிழர் கட்சியினர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்து இருக்கிறோம். நான் பொறுப்பேற்று இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. இதற்கு முன்பு இருந்த ஆய்வாளர்களிடம் நாம் தமிழர் கட்சியினர் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என அந்த ஆய்வாளர் கூறி விட்டார். இந்த நிலையில் அனுமதி பெறாமல் அவர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

திமுக இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் என்பவர் நாம் தமிழர் கட்சி மீது புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் மேடை போட்டு தகாத வார்த்தைகளை பேசினார் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் மீது மாவட்ட எஸ்பி அறிவுரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். செங்கண்ணன் மட்டுமே மேடைக்கு சென்றது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் இருந்து இது குறித்து எந்தவித புகார் மனுவும் வரவில்லை,” என்றார்.

Previous Story

பாத்திமா நஸ்ரின் சட்டத்தரணியாக சத்தியப் பிரமானம்

Next Story

திருநங்கையாக மாறிய மகனை கொலை செய்த தாய்!