நான் மக்களை நேசிக்கின்றேன் மக்கள் என்னை நேசிக்கிறார்கள் -லாபீர் ஹாஜி

‘நான் மட்டுமல்ல மோடி, அபுல் கலாம் போன்ற மா பெரும்
மனிதர்களும் ரயில் வியாபாரிகளாக இருந்திருக்கின்றார்கள்’

கண்டி மாவட்டத்தில் வித்தியாசமான ஒரு மனிதன் பாராளுமன்றத் தேர்தலில் நிற்பது பற்றிக் கேள்விப்பட்டு அவரை சந்தித்தேன். லாபீர் ஹாஜி என்ற அவர் நமக்கு வழங்கிய விசேட செவ்வியை இங்கே தருகின்றோம்.

1.நீங்கள் கல்வி கற்ற பாடசாலை?
ராசின் தேவி மகா வித்தியாலயம்- கண்டி

2.உங்கள் இளமைப் பருவம் பற்றி?
எனது இளமைப் பருவம் மிகவும் துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது. படிக்கின்ற போதே வறுமையால் உழைக்கவும் வந்தது. ஒரு சின்ன உதாரணம். புரிந்து கொள்வீர்கள்;. ஒரு பென்சிலை இரு துண்டுகளாக வெட்டி எங்களுக்கு தாயார் பங்கிட்டுத் தருவார்.

3.உங்களது அரசியல் பிரவேசம் எப்படித் துவங்குகிறது?
சிறுவயது முதல் எனக்கு ஐதேக மீது ஒரு விருப்பும் பிடிப்பும் இருந்தது. அதனால் அந்தக் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். நான் கட்சிக்குச் செய்த பங்களிப்புக்காக மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார்கள்.

4.முதல் மாகாணசபைத் தேர்தலில் உங்களது அனுபவங்கள்?
கண்டி-மெனிக்ஹின்ன என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம். அங்கு கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எனது பெயரைச் சொல்லி பேச அழைத்தார். பயம், அச்சம்! அங்கு எனது பெயர் இலக்கம் ஊர் ஆகியவற்றை மட்டுமே என்னால் உச்சரிக்க முடிந்தது. அதனைச் சொல்லிவிட்டு அமர்ந்து விட்டேன்.

5.பெரும் செல்வந்தர்கள் படித்தவர்கள் இருந்தும் 2013 தேர்தலில் மிக அதிகளவு வாக்குகளை எப்படிப் பெற முடிந்தது.?
முதலாம் முறை 26000 வாக்குகள். இரண்டாம் முறை அதனைவிட இரு மடங்கு வாக்குகளைப் பெற்று கண்டி மாவட்டத்தில் இரண்டாம் இடத்துக்கு வந்தேன். அதற்குக் காரணம் சபையில் எனது செயல்பாடுகளை அதிகமானவர்கள் அறிந்திருந்ததும் என்மீது மக்கள் ஏற்படுத்திக் கொண்ட உறவும் நம்பிக்கையுமாக இருக்க வேண்டும் எனக் கருதுகின்றேன்.

6.இந்தியாவில்தான் ரயில் மறிப்புப் போராட்டங்களைப் பார்த்திருக்கின்றோம் கண்டியிலும் நீங்கள் அப்படி ஒரு போராட்டம் பண்ணிய கதை சொல்லப்படுகின்றது?
கண்டி-பேராதனை புகையிரதப் பாதையை இரு வழிப்பாதையாக அபிவிருத்தி செய்யும் திட்டம். 200 வரையான குடும்பங்களை வெளியேற்ற அதிகாரிகள் கனரக இயந்திரங்களுடன் ஒரு நாள் வந்தார்கள். மக்கள் பதறி அடித்துக் கொண்டு எனது வீட்டுக்கு ஓடி வந்தார்கள்.

மக்களை நடுத் தெருவில் இறக்கிவிட்டு இந்த வேலையை செய்ய நான் அனுமதிக்க மாட்டேன். என்று தண்டவாளத்தில் படுத்து விட்டேன். எனது சடலத்தின் மேல்தான் இந்தக் காரியத்தை செய்ய முடியும் என்று தர்க்கம் பண்ணினேன். வந்தவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது. அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள். பின்பு பேச்சு வார்த்தை நடத்தி மக்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தேன். அந்த நிகழ்வை மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவு கூறுகின்றார்கள்.

7.மாகாணசபையில் சம்பளத்தை நீங்கள் பெறுவதில்லை என்று சொல்லப்படுகின்றது அது என்ன?
கடந்த 10 வருடங்களாக உறுப்பினராக இருந்தேன். நான் சிறுவயதில் பட்ட கஸ்டங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. சபைக்குப் போனால் அந்த சம்பளத்தை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு செலவிடுவது. அதில் ஒரு சதத்தையேனும் எனது சொந்தத் தேவைகளுக்கு பாவிப்பதில்லை எனத் தீர்மானம் எடுத்திருந்தேன்.

8.ஐதேக.வில் பெரும்பாலானவர்கள் சஜித்துடன்; போனபோது கண்டியில் ஒரு ஜனரஞ்சக அரசியல்வாதியான நீங்கள் ஏன் ரணில் அணியைத் தெரிவு செய்தீர்கள்.?
நான் கட்சி விசுவாசி. இந்தத் தேர்தலில் எனக்கு ஒரு வாய்ப்புத் தருமாறு சஜித் ஐதேக.வில் இருக்கும் போதே கேட்டேன். ஹலீமுக்கும், ஹக்கீமுக்கும் கொடுக்க வேண்டும். மூன்று முஸ்லிம்களை போட முடியாது என்றார். ஆனால் இன்று கொழும்பில் மூன்று பேரைப் போட்டிருக்கின்றார்.

ஹலீம், ஹக்கீம் ஒருவரை பட்டியலில் உள்வாங்கலாமே எனத் தர்க்கம் பண்ணினேன். சஜித் முடியாது என்றார். அப்படியானால் பெயருக்காவது தேசியப்பட்டியலில் எனது பெயரைப் போடுங்கள் என்றேன். அதனையும் நிராகரித்தார். என்னதான் மக்கள் ஆதரவு இருந்தாலும் அவர் இந்த வாய்ப்பை தரவிரும்பவில்லை.

9.கண்டியில் ஐதேக.வுக்கு ஆசனம் என்பது உங்கள் தனிப்பட்ட செல்வாக்கில் தங்கி இருக்கின்றது என்பது போல் தெரிகிறது?
புகழ் அனைத்தும் படைத்தவனுக்கே என்றார் சுருக்கமாக.

10.உங்கள் படிப்பறிவு பற்றி விமர்சனகள் இருக்கின்றது. அதற்கு என்ன பதில் தரப்போகின்றீர்கள்.?
வறுமை எங்கள் கல்வியைத் தீர்மானித்தது. நான் அதனை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. அது எனக்குத் தடையாகவுமில்லை. இரண்டாவது முறை இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் என்னைத் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன.? நான் உதவாக் கரை என்றால் மக்கள் தூக்கி எறிந்திருப்பார்கள். எஸ்.பி.திசாநாயக்க, முதலமைச்சர் சரத் ஏகநாயக்க போன்றவர்கள் எனது பேச்சாற்றலை பல முறை பாராட்டி என்னை உற்சாகப்படுத்தி இருக்கின்றார்கள்.

நான் புத்திஜீவிகள் குழு ஒன்றை வைத்திருக்கின்றேன். அவர்களின் வழிகாட்டலில் நான் சபை நடவடிக்கைகளில் ஆஜராகின்றேன். நான் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகின்ற போதும் இதே ஒழுங்கைப் பின்பற்றுவேன். அதனால் எனக்குப் பிழைக்காது. உலகில் மிகச் சிறந்த பல தலைவர்கள் பெரிய படிப்பாளிகள் அல்ல. ஸ்ரீ மாவோ, ஆர். பிரேமதாச, போன்றவர்களும் அப்படித்தான். ஆனால் அவர்கள் உலகம் போற்றும் நல்ல தலைவர்களாகப் புகழப்பட்டவர்கள்.

பாராளுமன்றம் என்பது பாடம் கற்றுக் கொடுக்கின்ற இடமாக நான் கருதவில்லை. மாறாக மக்கள் உணர்வுகளை அறிந்து அவர்களின் குரலாக நான் அங்கு எனது பங்களிப்பை செய்வது எப்படி என்பது எனக்குத் தெரியும். அதற்கான சமூக அறிவு என்னிடத்தில் இருக்கின்றது. நான் மக்களுடன் வாழ்பவன். புகழ் பெற்ற எழுத்தாளர் மாட்டின் விக்கிரமசிங்ஹ 4ம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். ஆனால் அவர் எழுதிய புத்தகங்களைத்தான் பட்டதாரிகள் படிக்க வேண்டி இருக்கின்றது.

11.100வீத இஸ்லாமிய உடையில் இருக்கின்ற நீங்கள் எல்லாச் சமூகங்களுடனும் மிக நெருக்கமான உறவில் இருக்கின்றீர்கள். இது எப்படிச் சாத்தியம்?
நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் என்னிடத்தில் இனவாதமோ மதவாதமோ கிடையாது. அதனால்தான் சிங்கள,தமிழ்,கிறிஸ்தவ மக்கள் என்னை நேசிக்கின்றார்கள். நான் இதயத்தால் ஒரு மனிதனாக மட்டும் வாழ்கின்றேன்.

12.நீங்கள் எங்கு போனாலும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள் அதன் இரகசியம் என்ன?
நான் அடுத்தவர்களை மதிக்கின்றேன் அவர்கள் என்னை மதிக்கின்றார்கள். பிறர் இன்பமும் துன்பமும் என்னுடையது என நான் நினைப்பவன். குறிப்பாக அடுத்தவர்கள் பிரச்சினைகளை எனது பிரச்சினையாக நான் எப்போதும் பார்ப்பவன் இது மக்களுக்குத் தெரியும்.

 

13.உங்களை எல்லோரும் வடை எனச் செல்லமாக அழைக்கின்றார்களே அது ஏன்?
உங்களுக்குத் தெரிந்திருக்கும். பிரன்சிஸ் கல்வி அமைச்சர் நஜாட் வல்லாவுத் பெல்காசிம் வறுமையில் ஒரு காலத்தில் மெரோக்கோவில் ஆடு மேய்த்த சிறுமி. அதனால் அவளை இன்றும் கோர்ட் கேர்ல் என செல்லமாக அழைக்கின்றார்கள். அதுபோல நானும் ஒருகாலதில் ரயில் வடை விற்றவன் இந்தியப் பிரதமர் மோடி கூட ரயிலில் டீ வியாபாரம் பண்ணியவர். ஜனாதிபதி அபுல் கலாமும் ரயிலில் பத்திரிகை விற்றவர் இதில் எனக்கு எந்தக் கட்புனர்வுகளும் கிடையாது. என்மீதுள்ள அன்பினால்தான் அரசியல் தலைவர்கள் கூட என்னை இப்படிச் செல்லமாக அழைக்கின்றார்கள்.

 

14.பாராளுமன்ற விவாதங்களை நீங்கள் எப்படிச் சமாளிக்கப் போகின்றீர்கள்?
துறைவாரியான நிபுணத்துவக் குழுக்கள் என்னிடமிருக்கின்றது. எந்தத் தலைப்பிலும் அவர்கள் என்னை நெறிப்படுத்துவார்கள். சமூகப் பிரச்சினைகளையும் தேவைகளையும் நான் நன்கறிந்தவன்.

15.உங்கள் வெற்றி வாய்ப்புப் பற்றி?
எனது வெற்றி என்று ஒன்றில்லை. அது மக்களுடைய வெற்றி. கண்டி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனுடைய வெற்றி. ஒவ்வொரு குடும்பங்களினதும் வெற்றி. அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். மக்கள் பிரச்சினைகளை எனது சொந்தப் பிரச்சினையாக்கிக் கொள்ளும் ஒரு மனிதன் நான். எனவே அவர்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க நான் அங்கு இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். என்னைப் பாராளுமன்றம் அனுப்பி வைக்கும் பணியை அவர்கள் செய்து முடிப்பார்கள். அது அவர்கள் வேலை. நான் மக்களை நேசிக்கின்றேன் அவர்கள் என்னை நேசிக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

சங்கக்காராவுக்கு ராஜபக்ஸாக்கள் அஞ்சுகிறார்களா!

Next Story

முஸ்லிம் தலைவர்கள் தம் சமூகத்தை விற்று பிழைக்கின்றார்கள்!