-நஜீப் பின் கபூர்-
(நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல்)
******
“நாமல் தலையில் நின்று கொண்டு
பாதாள உலகத்தாருடன் நமக்குத்
தொடர்புக்கள் கிடையாது
என்று சென்னாலும் அதனை எவரும்
ஏற்று கொள்ளமாட்டார்கள்”
******
சில நேரங்களில் இந்தவாரம் என்ன தலைப்பில் அரசியல் விமர்சனம் பண்ண முடியும் என்று நாம் யோசிப்பதுண்டு. ஆனால் இப்போது சில தலைப்புக்களில் இருந்து நாம் விலகிச் செல்லமுடியாது என்ற கட்டாயத்தில் இருந்து வருகின்றோம். சில தினங்களுக்கு முன்னர் அனைத்து ஊடகங்களும் ரணில்… ரணில்… என்றுதான் இருந்தது.
இப்போது ஐஸ்… ஐஸ்… என்றுதான் அனைத்து ஊடகங்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. நாம் வழக்கமாக சொல்வது போல இதில் நிறையவே போலிக் கதைகளும் அரசியல் உள்நோக்கங்களுடனான தகவல்களும் காணப்படுகின்றன.
எது பொய் எது உண்மை என்று சராசரி மனிதர்கள் கண்டு கொள்ளும் வரை அந்த செய்திகள் சில காலம் அல்லது நாட்களுக்கு உயிர்வழக் கூடும். நமது இந்தக் கட்டுரையிலும் முடிந்தவரை புதியதும் நம்பகமானதுமான பல தகவல்களையே வழக்கம்போல எமது வாசகர்களுக்குக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
அதற்கு முன்னர் எதிரணிகள் நாடாளுமன்றத்தில் நாம் எப்படி ஐக்கியமாக நடந்து கொள்வது அல்லது பலமான என்பிபி. அரசுக்கு முகம் கொடுப்பது என்று சில தினங்களுக்கு முன்னர் கலந்து பேசி இருக்கின்றார்கள். அந்தக் கூட்டம் சஜித்-ஐமச தலைமையில் நடந்திருக்கின்றது.
முழு நாடுமே சபக்கேடாக இருக்கின்ற இந்த போதை வியாபாரத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒரே குரலில் சொல்லி வருகின்ற இந்த நேரத்தில் எதிரணியினர் குறிப்பாக பிரதான எதிரணியான ஐமச. அதற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு இந்த இந்த கூட்டத்தை கூட்டி இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
இவர்கள் முதலில் பொது மக்கள் பணத்தை தனது தனிப்பட்ட தேவைகளுக்குப் பாவித்த குற்றச்சாட்டில் கைதான ரணிலை மீட்டுக் கொள்ள ஐக்கியப்பட்டனர். இப்போது போதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற இந்த நேரத்தில் இவர்கள் ஐக்கியப்பட்டிருப்பது அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பாதுகாப்பதற்காகவா என்று கேள்வி எழுப்ப வேண்டி இருக்கின்றது.
அரசுக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐமச.க்கும் அதன் தலைவரான சஜித்துக்கும் இருக்கின்ற இந்த நல்ல வாய்ப்பை பாவித்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற இருக்கும் நல்ல வாய்ப்பை இந்த நேரத்தில் கூட்டணி அமைத்து செயல்பட முனைவது எந்தளவுக்குப் புத்தி கூர்மையானது.?
இவர்கள் எந்தளவுக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுகின்றார்கள் என்று நமக்குப் புரியவில்லை. எதிரணிகள் பாதையைப் புரிந்து பயணிக்கின்றதா என்ற கதைகள் அப்படி இருக்க ஐஸ் கதைக்கு வருவோம்.
நமது பொலிஸ் இந்தோனேசிய பொலிசாருடன் இணைந்து நடாத்திய வேட்டையில் அவர்களே எதிர்பார்க்காத முறையில் ஓரே இடத்தில் ஆறுபேர் சிக்கியதும் அதற்கு ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேரடியாகக் ஆர்வமாக செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் இந்தோனேசிய அரசு இரு நாட்டுத் தூதுவராலயங்கள் கொடுத்த ஒத்துழைப்பு என்பன சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்ற நேரத்தில் இந்தக் கைதும் அவர்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களையும் பின்னணியில் இருந்து ஒத்துழைத்தவர்களுக்கும் பெரும் கலக்கத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தி இருப்பதும் நமக்கு நன்றாகப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இது பற்றி நாம் கடந்த வாரம் கூட சில வார்த்தைகளைச் சுருக்கமாகச் சொல்லி இருந்தோம்.
என்பிபி. அரசு பதவியேற்ற சில நாட்களில்தான் இந்த கொண்டேனர்கள் நாட்டுக்குள் வந்திருக்கின்றது. என்பிபி. வெற்றிபெறும் அவர்கள் போதை வியாபாரத்துக்கு எதிராக இந்தளவு கடுமையாக நடந்து கொள்வார்கள் அதில் அவர்கள் சாதிப்பார்கள் என்று போதை வியாபாரிகளும் பாதாளக் குழுக்களும் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அந்தளவுக்கு அவர்கள் மிகவும் வலுவான நிலையில் இருந்து கொண்டுதான் தமது வியாபாரத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் இவர்களுக்குக் தாராளமாக கிடைந்து வந்திருக்கின்ற என்பது சிறுபிள்ளை கூட அறிந்த செய்திதான்.
இதற்கு நல்ல உதாரணம்தான் என்பது (80) கிலோ போதைவஸ்து நிமல் லன்சா வீட்டில் பிடிபட்ட போது ஹெலிக்கப்டரில் அங்கு உடனே பறந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அன்று அவரை காப்பாறிவிட்டார்.
இன்று சர்ச்சைக்குரிய இந்த இரு ஐஸ் கொண்டேனர்கள் பற்றிப் பார்ப்போம். கடந்த ஜனவாரி அளவில் இவை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கின்றது. அதே மாதம் 27ல் இவை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
இந்த இரு கொண்டேனர்களும் அதற்கு சில மாதங்கள் அல்லது வாரங்களுக்கு முன்னர் ஏதாவது ஒரு துறைமுகத்திலிருந்து கப்பலில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும்.
கெண்டேனர்களை கப்பல்களில் அனுப்பும் போது அதனை அனுப்பிவர் அது சென்றடையும் துறைமுகம் அந்த நாட்டில் அதனைப் பெற்றுக் கொண்டவர். வந்த இடத்தில் துறைமுகத்தில் இருந்து அது சென்றடைய வேண்டிய இடத்துக்கு எடுத்துச் சென்றவர். அதற்குப் பாவிக்கப்பட்ட வாகனம் என்பன பதிவில் இருக்க வேண்டும்.
இதுதான் அதற்கான விதி-ஒழுங்கு. அப்படி எடுத்துவரப்பட்ட இந்த இரு கெண்டேனர்களும் மீத்தெனிய என்ற இடத்துக்கு எடுத்து வரப்பட்டிருக்கின்றது.
இந்தத் தகவல்களை இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களில் இருந்து தெரிய வந்திருக்கின்றது. கைதைத் தொடர்ந்து சம்பத் மனம்பேரி தலைமறைவாகி இருக்கின்றார். கொண்டேனர்களில் இருந்த ஐஸ் மூலப்பொருள் மனபேரி சகோதரி காணியில் மறைக்கப்பட்டிருக்கின்றது. அவர்தான் அன்று ஊடகங்களில் பேசி இருந்தார்.
மேலும் துறைமுகத்திலிருந்து இந்த இரு கெண்டேனர்களை வெளியே கொண்டு வருவதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கினார்களா.? இதற்காக துறைமுகத்தில் திட்டமிட்ட ஒரு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டதா? இந்த நாட்களில்தான் நாட்டில் வெங்காய தட்டுப்பாடு.
அப்போது நிறையவே கொண்டேனர்கள் துறைமுகத்திற்கும் வந்து கொண்டிருந்தன. சர்ச்சைக்குரிய 323 கெண்டேனர்களில் இது அடங்காது என்று பொலிஸ் திட்டவட்டமாக கூறி இருக்கின்றது. மேலும் துறைமுகத்துக்கு வரும் கெண்டேனர்களை சிவப்பு மஞ்சல் பச்சை என்ற குறியீடு குத்துவது வழக்கம்.
அப்படி இவற்றை வகைப்படுத்த மூவர் அடங்கிய ஒரு குழு அங்கு இருக்கின்றது. இந்தக் குழு முறையாகத் தனது பணிகளைச் செய்து வந்ததா என்பதில் குழறுபடிகள் இருந்ததா என்பதில் நமக்கு பல சந்தேகங்கள். சிவலி அருக்கொட என்பவர் அதன் தலைவராக இருந்திருக்கின்றார். அவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.
மனம்பேரிகளின் இந்த இரு கெண்டேனர்களும் பச்சை குறியீடு குத்தப்பட்டிருந்ததாக சொல்லப்படுகின்றது. பிங்கான் பொருட்களுக்கான மூலப்பொருட்களாக காட்டப்பட்டதால் அதற்குப் பச்சை குறியீடு பெறப்பட்டதாகவும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. (மஞ்சல் சற்று சந்தேகம் சிவப்பு மிகவும் சந்தேகம்.
பச்சை சந்தேகம் இல்லாதது என்பது அதன் பொருளாகும்.) ரணில் காலத்தில் 2218 கெண்டேனர்கள் எந்தவிதமான பரிசோதனைகளும் இல்லாமல் வெளியேற்றப்பட்டிருக்கின்றது. அப்படியாக இருந்தால் ராஜபக்ஸாக்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்க முடியும் என்பதனை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள்.?
மேலும் மீத்தெனிய கந்தான தங்கல்ல என்ற இடங்களில் இது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுவரெலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஐஸ் தொழிச்சாலை ஒன்று ஆரம்பிக்கின்ற கதையும் தெரிய வந்திருக்கின்றது. இப்போது அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி தகவல்களைச் சற்றுப்பார்ப்போம்.
ஒருவர் சம்பத் மனம்பேரி மற்றவர் பியல் மனம்பேரி. சம்பத் மனம்பேரி தலைமறைவாகி இருக்கின்றார். பியல் மனம்பேரி கைதாகி இருக்கின்றார். இவர்கள் இருவரும் மொட்டுக் கட்சி ஊடக அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள். அதன் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவிலும் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவேதான் தனது குருனாகலை மாவட்டத்தில் 12 இடங்களில் தேர்தல் பிரசாரங்களுக்கு அழைப்புக் கிடைத்திருந்த போதும் தான் இந்த பியல் மனம்பேரியின் தளாவ கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் மேலும் அவர் தாராளமாக காசு செலவு செய்யக் கூடிய ஒரு நல்ல மனிதன் என்றும் பியலை அங்கு புகழ்ந்து தள்ளி இருக்கின்றார் ஜென்ஸ்டன் பர்ணாந்து.
அவரது தேர்தலுக்கும் இவர் பணத்தை அள்ளிக் கொடுத்திருக்க வேண்டும் என்பது இதிலிருந்து நாம் உணர முடியும். அகுனுகொலபெலஸ்ச பிரதேச சபை தளாவ வட்டாரத்தில் பியல் மனம்பேரி மொட்டுக் கட்சியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்துக்கே வந்தார்.
பியல் மனம்பேரி கை நிறைய காசை தேர்தலில் செலவு செய்து அவரை ஆதரிக்க மொட்டுத் தலைவர்கள் அங்கு கூடாரமே போட்டுக் கூத்தாடினாலும் பியல் 687 வாக்குகளை மட்டுமே தனது வட்டாரத்தில் பெற முடிந்தது.
தளாவ வட்டாரத்தை என்பிபி. வெற்றி பெற்றது இரண்டாம் இடத்துக்கு ஐமச. வேட்பாளர் வந்தார். இந்த மனம்பேரி பற்றி மேலும் தேடிப்பார்த்தால் 09.01.1996ல் பொலிஸ் சேவையில் இணைந்திருக்கின்றார். பின்னர் பொலிஸ் உளவுப் பிரிவிலும் பணியாற்றி இருக்கின்றார்.
பொலிஸ் சேவையில் இருக்கும் போதே 09.08.2009ல் அரிசி மற்றும் பொருட்களை நாரேஹன்பிட்டியில் ஓரிடத்தில் கொள்ளையடித்த போது சிக்கியதால் தனது பதவி இழந்திருக்கின்றார். ரவிராஜ் கொலையிலும் இவர் கைதாகி தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டவர்.
மொனராகலை பொலிசில் இருந்த போது 125 கிலோ கஞ்சா கடத்தினார்-வைத்திருந்தார். என்றும் குற்றச்சாட்டு. தமிழ் வர்த்தகர் நடராஜ் (கலா அதிபதி) சொத்துக்களை கொள்ளையடித்து அவரைக் கொலை செய்தமை கப்பம் வாங்கினார் என்றெல்லாம் நிறையவே இவர் மீது குற்றச்சாட்டுக்கள்.
மேலும் இந்தோனேசியாவில் கைதாகி இருக்கின்ற பெக்கோ சமன் மனம்பேரி சகோதரர்களின் நெருக்கமான சகபடி என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பொது மக்களுக்கு இந்த உறவைப் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் அந்த நாட்களில் எப்படித் தப்பி இருப்பார் என்பதும் தெரிந்ததே.
தனது கட்சியில் இவர் இருந்தது உண்மை. அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வருவதால் நாம் இப்போது அவரைக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கி இருப்பதாக மொட்டுச் செயலாளர் கூறுகின்றார். இப்படிப்பாரதூரமான குற்றச்சாட்டு உள்ள ஒருவருக்கு எப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கபட்டது என்று கேட்டால் 8125 வேட்பாளர்கள் தமது கட்சி களம் இறக்கியதால் எப்படித் தேடிப்பிடிப்பது என்றும் கேள்விகள்.
மேலும் பல இலட்சம் ஆதரவாலர்கள் உள்ள ஒரு கட்சியில் இது போன்ற குற்றவாளிகள் இருக்கலாம்.! அதனைக் கண்டு கொள்ளத் தேவை இல்லை என்றுதான் கட்சி சார்பில் பேசுகின்றவர் ஆணவத்துடன் பதில் தருகின்றார்கள். இவர் ஒரு முறை தவறு செய்தவர் என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியும். எனவே மொட்டுக் கட்சி மீது இப்போது கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் (08.09.2025) சமுதிதவுடன் நடந்த ஒரு தொலைக் காட்சி உரையாடலில் கொடமுனே என்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி நாமல் தலையில் நின்று கொண்டு பாதாள உலகத்தாருடன் நமக்குத் தொடர்புக்கள் கிடையாது என்று சென்னாலும் அதனை எவராவது ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று அவர் அடித்துக் கூறுவதுடன், இந்த நேரடி விவாதத்தில் மற்றுமொரு ஒரு அதிரடியான தகவலையும் குறிப்பிட்டார்.
இது பற்றி நாம் முன்கூட்டித் தெரிந்து வைத்திருந்தாலும் அதனை வாசகர்களுக்கு சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பாவித்துக் கொள்கின்றோம். தெற்கில் நடைபெற்ற ஒரு ஜேவிபி. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடாத்தியதில் கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் அங்கு படுகொலை செய்யப்பட்டார்கள். பலருக்குக் காயம்.
(ஜூலம்பிட்டிய அமரே)
இந்த துப்பாக்கி சூடு நடாத்தியவர் ஜூலம்பிட்டிய அமரே என்ற நாடறிந்த பாதாளக்குழுத் தலைவர் என்பதனை மக்கள் நேரடியாகப் பார்த்தும் இருக்கின்றார்கள். நாம் ஜூலம்பிட்டியாவை கைது செய்யத் தேடிக் கொண்டிருந்த போது ஜூலம்பிட்டிய அமரே இப்போது ஜனாதிபதி மஹிந்தவின் தங்கல்லை-கார்ல்டன் வீட்டில் அவர்களுடன் இருக்கின்றார் என்ற தகவல் நமக்கு வந்தது.
அப்படி இருக்கின்ற போது நாம் எப்படி அவரைத் தேடி அங்கு போக முடியும்?. இன்று போலவா அன்று நாட்டில் சட்டங்கள் இருந்ததா என்று கேட்கின்றார். எனவே ராஜபக்ஸாக்களின் சட்டம் போதை மற்றும் பாதாள உலகத்தாருக்கு அவர்களுடனான தொடர்புகள் பற்றி என்னதான் ஆதாரம் தேவை என்பது கெடமுனயின் கேள்வியாக இருக்கின்றது.
மீண்டும் ஐஸ் கதைக்கு வந்தால் ஆங்காங்கே கண்டு பிடிக்கப்பட்ட மூலப் பொருட்கள் ஐஸ் போதைப் பொருட்களுடன் ஒத்துப்போவதாக பரிசோதனைகள் தெரிவிக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. மேலும் டசன் கணக்கான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்- பொலிசாருக்கும் இந்த போதை வியாபாரத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகள் இருக்கின்ற என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது கைது செய்யப்பட்டவர்களும் சந்தேகிக்கப்படுகின்றவர்களும் அவர்கள் தரப்பில் பேசுகின்றவர்களும் சொல்கின்ற கதைகளைப் பாருங்கள் குறிப்பாக மனம்பேரி சகோதரி ஒருவர் ஊடகங்களில் பேசிய வார்த்தைகளைப் பாருங்கள்.
பிந்திய தகவல்களின்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் போதை வியாபாரிகளுடன் குறிப்பாக கெஹெல் பத்தரவுடன் அவர்களுக்கு இருந்த நெருக்கமான உறவுகள் மற்றும் அதற்கான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றது.
இராணுவ அதிகாரிகள் பாதள உலகத்தாருக்கு ஆயுங்கள் விற்பனை செய்த தகவல்கள் வருகின்றன. தமக்கிருந்த மரணப் அச்சுறுத்தலால் அப்படி செய்ய வேண்டி வந்ததாகவும் வேறு வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர். இது என்ன கதை.!