கடந்த ஆண்டு செப்டம்பரில் இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்பொலா முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். சுமார் ஐந்து மாதத்துக்கு பிறகு அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். இதற்காக பெய்ரூட்டில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இந்த இறுதி ஊர்வலத்தில் ஹெஸ்பொலாவின் புதிய தலைவர் நயிம் கஸம் காணொளி வாயிலாக உரையாற்றினார். எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்போம்.
கொடுங்கோல் அமெரிக்கா எங்கள் நாட்டை கட்டுப்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். நஸ்ரல்லாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த சூழலில், முன்னதாக தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா ராக்கெட் லாஞ்சர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் தொடங்கியது. போர் விமானங்கள் தாழ்வாக பறந்ததால் அரங்கில் கூடியிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர்.