தென் ஆப்ரிக்காவில் வாரிசுச் சண்டை மன்னருக்கு விஷம் ?

தென்னாப்பிரிக்காவின் ஜூலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேகத்தில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மன்னரின் தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெறுவதில் அசௌகரியமாக உணர்ந்ததால், அவர் எஸ்வதினி நாட்டில் மருத்துவ உதவியை நாடியதாக பிரதமர் மங்கோசுது புத்தலேசி கூறினார். எஸ்வதினி என்பது தென்னாப்பிரிக்காவுக்கு உள்ளே நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும்.

இது அவரது மூத்த ஆலோசகர்களில் ஒருவரின் திடீர் மரணத்துக்கு விஷம் கொடுக்கப்பட்டதே காரணம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், மன்னருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜூலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி

எனினும் மன்னரி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மன்னரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.அதேநேரத்தில், மன்னர் தற்போது மருத்துவமனையில் இல்லை. “தேவையற்ற பீதியை” உருவாக்கக்கூடாது என்று இளவரசர் ஆப்பிரிக்கா ஜூலு கூறியுள்ளார். இது தலைமை அமைச்சர் புத்தேலிசியின் அறிக்கைக்கு மறைமுக எதிர்ப்பாகத் தோன்றுகிறது.

ஜூலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் முன்னிலையில் மன்னர் மிசுசுலு முடுசூட்டப்பட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் முன்னிலையில் மன்னர் மிசுசுலு முடுசூட்டப்பட்டார்.ஆனால் 48 வயதான மன்னரின் கடும்பத்துக்குள்ளேயே அந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்கு கொடூரமான சண்டைகள் நடந்தன. அத்தகைய சண்டைகள் இன்னும் தொடருவதாகவே கருதப்படுகிறது.

ஜுலு என்பது தென்னாப்பிரிக்காவின் ஒரு பழங்குடி இனம். அதற்கென தனி நாடோ, எல்லையோ இப்போது இல்லை. ஆனாலும் தென்னாப்பிரிக்க அரசியலில் செல்வாக்கு செலுத்துவதுடன், ஜூலு இன மக்களுக்கு தலைவராகவும் கருதப்படுகிறார்.

தென்னாப்பிரிக்க அரசிடமிருந்து கிடைக்கும் பெரும் நிதியுதவியும் ஜூலு மன்னரின் செல்வாக்குக்கு மிக முக்கியமான காரணம்.

48 வயதான மிசுசுலு, முந்தைய மன்னரின் மகன். ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர், அவர் முறையான வாரிசு இல்லை என்றும் மறைந்த மன்னரின் உயில் போலியானது என்றும் வாதிட்டதால் வாரிசு சண்டை உருவானது. இதையும் தாண்டி கடந்த ஆண்டில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

மறைந்த மன்னர் ஸ்வேலிதினிக்கு ஆறு மனைவிகள், குறைந்தது 26 குழந்தைகள் இருந்தனர். மற்றொரு மகன் இளவரசர் சிமகடே மன்னராக வேண்டும் என்று இன்னொரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

மிசுசுலு மன்னருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தின் பின்னணியில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக எந்தக் கருத்தும் இல்லை.

தென்னாப்பிரிக்க காவல்துறை இன்னும் கூற்றுக்கள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

அரசர் மிசுசுலுவின் மூத்த உதவியாளர் டக்ளஸ் சபா, “திடீரென்று மயங்கி விழுந்ததாகவும், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும்” தனது அறிக்கையில், தலைமை அமைச்சர் புத்லெசி கூறினார்.

“இதைத் தொடர்ந்து மன்னருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது” என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டது.

“அவர் உடனடியாக எஸ்வதினியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெறுவதில் மன்னருக்கு தயக்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் அவரது பெற்றோர் இருவரும் தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று பின்னர் இறந்தனர்,” என்று தலைமை அமைச்சர் புத்லெசி கூறினார்.

ஜூலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி

ஜுலு சிம்மாசனத்திற்கு முறையான அரசியல் அதிகாரம் ஏதும் இல்லை.

எந்த ராஜ்ஜியத்துக்கு இவர் மன்னர்?

ஜுலு சிம்மாசனத்திற்கு முறையான அரசியல் அதிகாரம் ஏதும் இல்லை. தனியாக நாடு என்பதும் கிடையாது. ஆனால் தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஜூலு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மத்தியில் மன்னருக்கு செல்வாக்கு எப்போதும் உண்டு. ஜுலு இனத்தில் முடியாட்சியானது ஆண்டுக்கு 4.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வரி செலுத்தும் மக்கள் தொகையைக் கொண்டது.

ஜுலு ராஜ்ஜியம் கடந்த காலங்களில் ஒரு பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. இது 1879-ஆம் ஆண்டு நடந்த இசண்டல்வானா போரின் போது பிரிட்டிஷ் படைகளை தோற்கடித்ததற்காக உலகப் புகழ் பெற்றது.

இந்தப் பெருமைக்காகவே இதன் மன்னராவதற்கு போட்டி கடுமையாக இருக்கும். வாரிசுப் போர்கள் கொடூரமாக நடக்கும். சில சமயங்களில் ரத்தக் களரியாகிவிடும்.

புகழ்பெற்ற மன்னர் ஷாகா கா சென்சங்ககோனா 1816 -ஆம் ஆண்டில் அரியணையைக் கைப்பற்றுவதற்காக தனது சகோதரனைக் கொன்றார். அது அவருக்குமே நடந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகன் சூழ்ச்சி செய்து அவரைப் படுகொலை செய்தார்.

தற்போது மன்னராக இருக்கும் மிசுசுலு கா ஸ்வெலிதினியும் எளிதாக முடியைக் கைப்பற்றிவிடவில்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்த அவரது தந்தை குட்வில் ஸ்வெலிதினியின் இடத்தைப் பிடிப்பதற்காக மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பலர் போட்டியிட்டார்கள்.

Previous Story

 வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

Next Story

வன்முறையை நிறுத்துங்கள், பிரான்ஸில் கொல்லப்பட சிறுவனின் குடும்பத்தினர்.