துரோகிகளை சுத்திகரிப்பு செய்வோம்-புடின்

மாஸ்கோ: ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பலர் போராடி வரும் நிலையில்.. அதிபர் புடின் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

உக்ரைனில் ரஷ்யா போர் அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக போகிறது. இதுவரை உக்ரைனில் ஒரு சில நகரங்களை பிடித்து இருந்தாலும் ரஷ்யா மிகப்பெரிய முன்னேற்றம் எதையும் அடையவில்லை.

இன்னும் ஒரு வாரத்தில் ரஷ்யாவின் ஆயுதங்கள், குண்டுகள் தீர்ந்துவிடும் என்றும் அமெரிக்கா உளவுத்துறை முன்பே அறிவித்து இருந்தது. இன்னும் கார்கிவ், தலைநகர் கீவ் போன்ற நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன.

ரஷ்யா எதிர்ப்பு

இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவிலேயே மக்கள் சிலர் போராடி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் கூட உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் குரல் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் சேனல் 1 எடிட்டர் ஒருவர் டிவி நிகழ்ச்சியில் ரஷ்யாவில் ரஷ்ய அதிபருக்கு எதிராகவே பதாகை ஏந்தியது பெரிய சர்ச்சையானது. ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிராக பேசும் நபர்களுக்கு 15 வருடம் வரை சிறை தண்டனை கொடுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை

இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின் இது போன்ற போராட்டங்கள், உள்நாட்டு எதிர்ப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் இவர் கோபமாக பேசியது வீடியோவாக வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், நம் நாட்டில் இருக்கும் ஒட்டுண்ணிகளை, அழுக்குகளை, துரோகிகளை நாம் களைய வேண்டும். ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து இவர்கள் சதி செய்கிறார்கள்.

சுத்திகரிப்பு

இது போன்ற மக்களை நாம் சுத்தப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும். மேற்கு உலக நாடுகள் ரஷ்யாவை அழிக்க பார்க்கிறது. நம் மீது பொருளாதார தடைகளை விதித்து நம்மை அழிக்க பார்க்கிறார்கள். ரஷ்யாவில் யார் துரோகிகள் என்பது எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக நேர்மையான குடி மக்களுக்கும், துரோகிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை ரஷ்ய மக்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

சர்ச்சை

வாயிக்குள் புகுந்த பூச்சியை வெளியே துப்புவது போல இவர்களை நாம் வெளியே வீச வேண்டும். நமது நாட்டை இவர்கள் இன்றி சுத்தப்படுத்த வேண்டும். இது மட்டுமே நமது நாட்டையும், நமது நோக்கத்தையும் பாதுகாக்கும் ஒரே வழியாகும் என்று புடின் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் புடின் சுத்திகரிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

 

 

Previous Story

மீண்டும் ஜனாதிபதி செயலகம் முற்றுகை! 

Next Story

ரஷ்யாவின் இரகசியத் திட்டம்! மேற்கு நாடுகளிற்கு பெண்டகன் எச்சரிகை