துமிந்தவை கைது செய்ய உத்தரவு –                                   மன்னிப்பும் இடைநிறுத்தம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை செயற்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அது தொடர்பிலான சட்ட ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு சட்ட மாஅதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகராகவும் கடமையாற்றி வந்த பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர

மகள் ஹிருணிகா பிரேமசந்திர உடன் உயிரிழந்த பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர

இலங்கையில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, கொழும்பு புறநகர் பகுதியான கொலன்னாவை – கொட்டிகாவத்தை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் அப்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா காயமடைந்திருந்தார்.

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலைக்கு துமிந்த சில்வாவே காரணம் என குற்றம்சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலைக்கு துமிந்த சில்வா காரணம் என தெரிவித்து, அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

துமிந்த சில்வா

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2021ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் தேதி ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமையை எதிர்த்து, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமசந்திர, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி இன்று, மே 31 இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன், துமிந்த சில்வாவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

யார் இந்த துமிந்த சில்வா?

கொழும்பு மாவட்டத்தில் 2010ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.

இலங்கையின் பிரபல கூட நிறுவனமான ஏ.பி.சி வலையமைப்பின் உரிமையாளரான ரெயினோ சில்வாவின் சகோதரரே, இந்த துமிந்த சில்வா.

இவ்வாறான நிலையில், இலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவிற்கும், துமிந்த சில்வாவிற்கும் இடையில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் துமிந்த சில்வாவின் தலையில் காயம் ஏற்பட்டு, வெளிநாட்டு சிகிச்சைகளின் ஊடாக அவர் குணமடைந்திருந்தார்.

இவ்வாறான நிலையில், இந்த கொலை தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Previous Story

ரணில் சீர்குலைத்து விட்டார்!

Next Story

பாலியல் தொழில் பற்றி உச்ச நீதிமன்றம்:  நடவடிக்கை கூடாது'