தீர்வுக்கு ஒன்றிணைந்த கலந்துரையாடல்- ரணில்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாட வேண்டும் என, இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, ‘தினகரன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “நாடு பெரிய பிரச்னைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இடைக்கால அரசாங்கமா அல்லது தனியான அரசாங்கத்தை அமைப்பதா என்பது தொடர்பிலும் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்றும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

எனினும், இத்தகைய சூழ்நிலையில் தேவையற்ற செலவுகள் நிறுத்தப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நம்பிக்கையில்லா பிரேரணை, புதிய அரசியலமைப்பு தொடர்பில் பேசப்படுகிறது. அதனைப் பேசலாம். ஆனால், தற்போதைய நிலையில் பிளவுகளுக்கு முன் இணைந்து செயற்படுவதிலேயே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாட வேண்டும்” என்றார்.

Previous Story

 பாலமுனை:பொலிஸ்-பொது மக்கள் மோதல்

Next Story

“IMF உதவி என்பது வெறும் கனவே" சம்பிக்க