தலைவர் அஷ்ரப் பெயர் வேண்டாமென்னுமளவுக்கு SLMC செயற்பாடுகள்

-இம்ரான் மகரூப் எம்.பி –

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் பெயர் கூட வேண்டாமென்று முஸ்லிம் காங்கிரஸின் தாயகமான கிழக்கு மக்கள் நிராகரிக்குமளவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய செயற்பாடுகள் அமைந்துள்ளன என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு  (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று லீடர் அஷ்ரப் கனிஸ்ட கல்லூரி என்ற பாடசாலையின் பெயரை மாற்ற வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள், பள்ளிவாயல் உள்ளிட்ட சமூக மட்ட அமைப்புகள், பாடசாலை ஆசிரியர்குழாம், ஏனைய கல்விச் சமூகம் என சகல தரப்பினரும் தீர்மானம் எடுத்து அஸ்ஸபா வித்தியாலயம் என்று மாற்றியுள்ளதாக எமது கட்சியின் அப்பகுதி ஆதரவாளர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்ட போது அக்கட்சியின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்புச் செய்த பிரதேசங்களுள் அக்கரைப்பற்றும் ஒன்றாகும். இதனால் தான் மறைந்த தலைவர் அஷ்ரப் கட்சியின் முதல் செயலாளர் நாயகம் பதவியை அக்கரைப்பற்றைச் சேர்ந்த சட்டத்தரணி சேகு இஸ்ஸதீனுக்கு வழங்கினார்.

அது மாத்திரமல்ல பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவுக்கு அரசியல் முகவரியைப் பெற்றுக் கொடுத்ததும் மர்ஹூம் அஷ்ரப்தான்.  இப்படியிருந்தும் அக்கரைப்பற்றில் அஷ்ரபின் பெயரை இல்லாமல் செய்வது என்பது உண்மையில் எனக்கு கவலையைத் தருகின்றது.

இந்தப் பெயர் மாற்ற தீர்மானத்தின் மூலம் ஒரு பிரதேசத்தின் ஒட்டு மொத்த மக்களும் முஸ்லிம் காங்கிரஸ் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டுள்ளார்கள் என்ற செய்தியை இந்தப் பெயர் மாற்றம் எமக்குச் சொல்கின்றது. அடுத்து வரும் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸை நிராகரிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துகின்றது.

எனவே, இந்தச் செய்தியை இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது.- முஸ்லிம் மக்களுக்கு தனிக் கட்சி வேண்டும் என்று மர்ஹூம் அஷ்ரப் எடுத்த தீர்மானம் பிழையானது என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள்.

சிறுபான்மைக் கட்சிகளைக் கைவிட்டு சகல மக்களும் அங்கத்துவம் பெற்றுள்ள தேசியக் கட்சிகளோடு கைகோர்த்துப் பயணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளது திருப்தியைத் தருகின்றது.

எனவே, முஸ்லிம் மக்களையும் அரவணைத்துப் பயணிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியோடு முஸ்லிம் சமுகம் இணைந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றேன். இவ்வாறு தெரிவித்தார்.

Previous Story

ஊடகவியலாளர் தாக்குதல்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அழகுராணி

Next Story

அச்சுறுத்தலும் சட்ட நடவடிக்கைகளும்