பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு..
பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே அந்நாட்டுத் தலைநகரில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேரடியாக ராணுவத்தைக் களமிறக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத் முழுக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவமே கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் எப்போதும் போராட்டம், வன்முறை என்றே இருக்கும்.
சமீப காலமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தொண்டர்களின் மெகா போராட்டம் காரணமாக, தலைநகர் இஸ்லாமாபாத் ஒரு கலவரக் காடாக மாறியுள்ளது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
நிலைமை மோசம் வன்முறைப் போராட்டங்கள், போலீஸ் மோதல்கள், இணையம் மற்றும் மொபைல் சேவைகள் முற்றிலும் முடக்கம் என அந்நாட்டுச் சூழல் அசுர வேகத்தில் மோசமடைந்து வருகிறது. இதன் காரணமாகத் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கூட அந்நாட்டு போலீசாரால் பாதுகாப்பை நிலைநிறுத்த முடியவில்லை.
இதன் காரணமாகத் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மோதல் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி ஆகிய பகுதிகள் இம்ரான் கானின் பிடிஐ தொண்டர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது.
வரும் நாட்களிலும் இந்த வன்முறை மோதல்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. காரணம் பாகிஸ்தான் அரசு இந்த அதிரடி முடிவை எடுக்க வரும் மாதங்களில் அங்கு நடக்கும் சர்வதேச நிகழ்வுதான் காரணம்..
உலக நாடுகள் உற்றுநோக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு, வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் போது, இம்ரான் கான் ஆதரவாளர்கள் அசம்பாவிதச் செயல்களைச் செய்தால் அது பாகிஸ்தானுக்கு உலக அரங்கில் ஆகப்பெரும் அவமானத்தைத் தேடித்தரும். இதன் காரணமாகவே பல மாதங்களுக்கு முன்பே ஒட்டுமொத்தத் தலைநகரிலும் ராணுவத்தை இறக்கியுள்ளது பாகிஸ்தான் அரசு!
ராணுவத்தை வைத்துப் போராட்டக்காரர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு ஸ்கெட்ச் போட்டுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்லாமாபாத் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
துப்பாக்கிச் சூடுகளும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வெடித்துச் சிதறும் ஒரு பதற்றமான நகருக்கு ஜெய்சங்கர் உட்பட உலக தலைவர்கள் செல்கிறார்கள். இதனால் உச்சபட்சப் பாதுகாப்பைக் கொடுக்க வேண்டியது பாகிஸ்தானின் கடைமையாக மாறியுள்ளது.





