டெல்லி  சாலையோரம் தொழுகை: இஸ்லாமியர்களை தாக்கிய காவலர்! 

-தில் நவாஸ் பாஷா

டெல்யின் இந்திரலோக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) சாலலையில் தொழுகை (நமாஸ்) செய்து கொண்டிருந்த இஸ்லாமிய மக்களை காலால் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சமீபத்தில் சமூகவலைத்தளங்கள் வழியாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. அதில் டெல்லி இந்திரலோக் பகுதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காலால் எட்டி உதைப்பதும், தாக்குவதும் பதிவாகியிருந்தது.

டெல்லி, இஸ்லாமியர்கள், காவல்துறை

தொழுகை செய்தவர்களை காலால் தாக்கிய காவல்துறை

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் கூடி அந்தக் காவலரை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்திற்குப் பின்னர் மாலை 6 மணியளவில் அங்குள்ள மெட்ரோ ரயில்நிலையம் அருகே கூடிய மக்கள் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் வைரலானதை தொடர்ந்து குறிப்பிட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.

டெல்லி, இஸ்லாமியர்கள், காவல்துறை

இந்திரலோக் மெட்ரோ ரயில்நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

காவலர் இடைநீக்கம்

இந்தச் செயலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் தோமரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி காவல்துறை.

அவர் மீது துறைரீதியான விசாரணையை நடத்த உள்ளதாகவும், அதற்கு முன்னர் உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசியுள்ள வடக்கு டெல்லியின் துணை ஆணையர் மனோஜ் குமார் மீனா, “சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்திரலோக் பகுதியில் சூழல் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாகவும், சட்ட ஒழுங்கு கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி, இஸ்லாமியர்கள், காவல்துறை

போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறை

களத்தில் இருந்த மக்கள் சொல்வது என்ன?

இந்தச் சம்பவம் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் அரங்கேறியுள்ளது. அப்போது அங்கு இருந்த முதியவர் ஒருவர், டெல்லி காவல்துறை மிக மோசமான செயலை செய்துள்ளதாகவும், இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்றும் கூறினார்.

அந்த சமயத்தில் அங்கிருந்த இளைஞர் ஒருவர், “இந்தச் செயலில் ஈடுபட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்வதற்கு பதிலாக, முழுமையாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இவரை பார்த்து மற்ற காவலர்களும் இது போன்ற செயல்களை செய்யக்கூடும்,” என்று கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் இம்ரான் பிரதாப்காரி, “இந்த காவலரின் மனதில் எவ்வளவு வெறுப்பு நிறைந்துள்ளது. டெல்லி காவல்துறை இவர் மீது பொருத்தமான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்,” என்று பதிவு செய்துள்ளார்.

டெல்லி, இஸ்லாமியர்கள், காவல்துறை

சம்பவத்திற்கு வலைத்தளத்தில் எழும் எதிர்ப்பு

காவல்துறையின் இந்தச் செயலை விமர்சித்து, டெல்லி தெருக்களில் அப்பட்டமான எதேச்சதிகாரம் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ள காங்கிரஸ் பிரமுகரான ஜீனல் என் கலா, இதே இஸ்லாமியர்களை நடத்துவது போல வேறு மதத்தினரை நடத்துவார்களா என்று கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநெட் தனது எக்ஸ் பக்கத்தில், “அமித்ஸாவின் டெல்லி காவல்துறையின் இலக்கே அமைதி, சேவை, நீதி. அதற்காக முழு ஈடுபாட்டோடு உழைக்கின்றனர்,” என்று எள்ளலாகப் பதிவு செய்துள்ளார்.

எழுத்தாளரான அசோக் குமார் பாண்டே, இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இதை பார்த்து தான் அதிர்ந்துபோய் விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ‘இது போன்ற வீடியோக்கள் உலக அளவில் பிரபலமாகும்போது அது இந்தியா மீது என்ன மாதிரியான பார்வையை ஏற்படுத்தும்? அவமானம்,’ என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

டெல்லி, இஸ்லாமியர்கள், காவல்துறை

இந்திரலோக் மெட்ரோ நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்.

பொதுவெளியில் தொழுகை செய்வது குறித்த சர்ச்சை

சமீப காலமாகவே மசூதிகள் அல்லாத பொதுவெளிகளில் தொழுகை செய்வது தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ஹரியாணாவின் குருகிராமில் பொதுவெளியில் தொழுகை நடத்துவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஹரியானாவின் குருகிராமில், சாலையில் நமாஸ் செய்வது தொடர்பான பிரச்னையில் கும்பல் ஒன்று மசூதியை தாக்கி தீ வைத்ததில் 26 வயதான இமாம் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தெற்கு ஹரியானாவில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

மசூதி அல்லாத வெளிப்புறங்களில் நமாஸ் தொழுகை செய்வதற்கு எதிராக குருகிராமில் 2018-இல் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வெளிப்புறங்களில் நமாஸ் செய்யும் இடங்களை 108-இல் இருந்து 37 ஆக குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டன.

அதேபோல் இந்தாண்டு ஏன் இந்த கோரிக்கையை கொண்ட போராட்டங்கள் தொடங்கின என்று தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே இருந்த எண்ணிக்கையில் மீண்டும் குறைத்து, தற்போது 20 என்ற எண்ணிக்கையில் மட்டுமே மசூதி அல்லாத இடங்களில் நமாஸ் செய்யப்பட்டு வருகிறது.

இஸ்லாம் அரசியல் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஹிலால் அகமது இதுகுறித்து பிபிசியிடம் பேசுகையில், “இந்த அடிப்படைவாத குழுக்கள் மத வெறியை பரப்புவதற்கு, சிவில் பிரச்சனையை பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்களை மசூதிகளுக்கு சென்று பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள் அவர்கள். ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், போதுமான எண்ணிக்கையில் மசூதிகள் இல்லை,” என்கிறார்.

அவரது கூற்றுப்படி, குருகிராமில் 13 மசூதிகள் மட்டுமே உள்ளன, அவற்றில் ஒன்று மட்டுமே நகரின் புதிய பகுதியில் உள்ளது. அதேசமயம், பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் இந்த நகரத்தில் வசித்து வேலை செய்துவருகின்றனர்.

இஸ்லாமியர்களின் சொத்துக்களை கண்காணித்து வரும் வக்ஃப் வாரியத்தின் உள்ளூர் உறுப்பினரான ஜமாலுதீன் கூறுகையில், “வாரியத்தின் பெரும்பாலான நிலங்கள் இஸ்லாமிய மக்கள் குறைவாகவே உள்ள புறநகர் பகுதிகளில் இருப்பதாக,” தெரிவிக்கிறார்.

எனவே போதிய மக்கள் வழிபட வராததால் இந்த பகுதிகளில் இருந்த 19 மசூதிகளை மூடும் நிலை உருவானதாகவும், நகரின் மையப்பகுதியில் நிலம் வாங்க வாரியத்திடம் போதிய பணம் இல்லை என்றும் கூறுகிறார் அவர்.

Previous Story

ரணில்-ராஜபக்ஸ இழுபறிகளும் தீர்மானங்களும்!

Next Story

ஹிருனிகாவின் 50 ரூபா காசு!