“டிரம்ப் இப்படி பண்ணிட்டாரு..” கடும் கோபத்தில் நெதன்யாகு..

வளைகுடாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நிலவிய போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வளைகுடாவில் மெல்ல அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இந்த அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக எந்தவொரு தகவலையும் தங்களுக்குத் தெரிவிக்காததால் இஸ்ரேல் இதில் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வளைகுடா போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் இரு வாரங்களுக்கு எந்தவொரு தாக்குதலும் வேண்டாம் என முடிவெடுத்துள்ளது. நாளைய தினம் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது. இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் கோபம்: அமெரிக்கா ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேச்சுவார்த்தைகளில் இருந்து தாங்கள் விலக்கி வைக்கப்பட்டதாகவும் தங்களிடம் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் அமெரிக்கா போர் நிறுத்தம் செய்யச் சம்மதித்தால் இஸ்ரேல் கோபத்தில் இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இரண்டு வாரப் போர் நிறுத்தம் புதன்கிழமை அதிகாலை அறிவிக்கப்பட்டது. ஒரு நாகரிகமே அழியப் போகிறது என டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், சில மணி நேரத்தில் நிலைமை எல்லாம் மாறியது. போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்காவும் ஈரானும் சம்மதித்தது.

ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது. அதேபோல ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டது. நெதன்யாகு பிபி என அழைக்கப்படும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முடிவை ஆதரித்தார்.

அதேநேரம், இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளே வராது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதற்கான டிரம்ப்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது” என பதிவிட்டிருந்தார்.

இப்படிச் சொன்னாலும் கூட நெதன்யாகு இதில் அதிருப்தியில் தான் இருந்துள்ளார். தங்களிடம் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் அமெரிக்கா இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போட்டதில் அவருக்குச் சுத்தமாகவே உடன்பாடு இல்லையாம். போர் நிறுத்தம் என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டதால் அவர் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல மற்றொரு ட்வீட்டில், “அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இலக்குகளை அடைவதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இரண்டு வாரப் போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை” என்றார். அதாவது ஈரானை தாக்க மாட்டோம்..

ஆனால், லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்பதே இஸ்ரேலின் பொருளாகும். தாக்குதல் வெறுமன போஸ்ட் உடன் நிற்கவில்லை.. சொன்னது போலவே லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

வெறும் 10 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் 89 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 722 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் ஈரானைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஈரான் மிரட்டியுள்ளது. மேலும், லெபனான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்துவதாக ஈரான் அறிவித்தது.

இருப்பினும், ஈரானுக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட லெபனான் மீதான தாக்குதல் சரி என்றே சொன்னார். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈரான் இல்லை என்பதையும் டிரம்ப் உறுதி செய்தார்.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதில் அமெரிக்காவுக்கு ஓகேவா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இது ஒப்பந்தத்தின் ஒரு பகுதி இல்லை.. இது அனைவருக்கும் தெரியும். அது அவர்களின் தனிப்பட்ட சண்டை” என்று டிரம்ப் தெரிவித்தார்.

Previous Story

அமெரிக்க ஈரான் போர் மேற்கு நாடுகளின் அதிர்ச்சி மிகு அதிகாலை செய்திகள்

Next Story

அடுத்த அட்டாக் பலமா இருக்கும்.. ஈரானுக்கு எதிராக டிரம்ப் புது அறிவிப்பு!