டிரம்பின் மூக்கை உடைக்கும் ஜின்பிங்..

அமெரிக்க பொருளாதாரத்தில் விழும் அடி

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனாவின் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். இது சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

இதற்கிடையே தான் அமெரிக்காவுக்கு ‛செக்’ வைக்கும் வகையில் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக சீனா அதிரடி முடிவை எடுக்க உள்ளது.

இது அமெரிக்க பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இதனால் சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக போர் வெடிக்கும் சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது..

How the US Neoliberal Shift Fed China's Rise – The Diplomat

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் கனடா, மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார்.

அதேபோல் சீனாவுக்கு எதிராக 10 சதவீத வரியை விதித்தார். இதற்கு 3 நாடுகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இதையடுத்து 3 நாடுகளுக்கு இடையேயான வரி விதிப்பு முறையை தற்காலிகமாக 30 நாட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்தார்.

இந்த காலக்கெடு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் கனடா, மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரி விதிப்பு என்பது இன்று முதல்
நடைமுறைக்கு வர உள்ளது.

அதேபோல் சீனாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 10 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரியை விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனாவின் பொருட்களுக்கு 20 சதவீத வரியை டிரம்ப் நிர்ணயம் செய்துள்ளார்.

இதுவும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சீனா கடும் கோபத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பாடம் புகட்ட சீனா இன்னொரு திட்டத்தை வகுத்துள்ளது

இது தொடர்பாக சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமானது. அதில், ‛‛அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனாவின் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

இதன்மூலம் மொத்த வரி 20 சதவீதமாக (ஏற்கனவே 10 சதவீத வரி இருந்தது) உயர்ந்துள்ளது. சீனா என்பது அமெரிக்காவின் விவசாய விளை பொருட்கள் மற்றும் உணவு பொருட்களுக்கான பெரிய சந்தையாக உள்ளது. இதனை வைத்து தான் சீனா அடிக்கடி அமெரிக்காவுக்கும் பதிலடி கொடுத்து வருகிறது.

எனவே அமெரிக்காவில் இருந்து சீனா வரும் சோயாபீன்ஸ் மற்றும் தானியங்களுக்கு சீனா வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு வரி விதிக்கும்போது அது அமெரிக்காவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக விவசாயிகள் மற்றும் அமெரிக்காவை சார்ந்த உணவு ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளார்.

சீனாவை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து 29.50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விவசாய பொருட்களை இறக்குமதி செய்தது. இது முந்தைய 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது 14 சதவீதம் குறைவாகும்.

அதேபோல் கடந்த 2018 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விவசாயம் மற்றும் உணவு பொருட்களின் அளவு என்பது குறைந்து வருகிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து வரும் சோயாபீன்ஸ், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோதுமை, சோளம், 25 சதவீதம் வரை வரி விதித்தது. இதில் இருந்து தான் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களின் அளவு சரிய தொடங்கியது.

இப்போது மீண்டும் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விவசாயம் மற்றும் உணவு பொருட்களுக்கு வரி விதிக்க ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார்.

இது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாற உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் சீனாவுக்கு செல்லும் அமெரிக்காவின் பொருட்களின் அளவு என்பது சரிவை சந்திக்கலாம். அதோடு அமெரிக்காவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படலாம்.

அமெரிக்க சென்சஸ் பீயூரோ தகவலின்படி 2024ம் ஆண்டில் அமரிக்கா தனது சோயாபீன் ஏற்றுமதியில் பாதியை சீனாவுக்கு அனுப்பி உள்ளது. மொத்தம் 12.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு சோயாபீன் சென்றுள்ளது.

இந்த விஷயத்தில் அமெரிக்காவை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டாம் என்று சீனா நினைத்தது. இதனால் அமெரிக்காவுக்கு பதில் பிரேசிலில் இருந்து சோயாபீன்களை வாங்கி வருகிறது. இது அமெரிக்காவுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2016ல் சீனாவில் அமெரிக்காவின் சோயாபீன் பயன்பாடு என்பது 40 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2024ல் 21 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சோள ஏற்றுமதியிலும் அமெரிக்காவுக்கு மாற்றாக பிரேசில் பக்கம் திரும்பியது சீனா. இதுதொடர்பாக 2022ல் பிரேசில் நாட்டுடன் சீனா ஒப்பந்தம் செய்தது.

இதனால் கடந்த 2023ல் 2.6 பில்லியன் அளவுக்கு அமெரிக்காவில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்த சீனா 2024ல் 561 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மட்டுமே இறக்குமதி செய்தது. இதுபோன்ற சீனாவின் செயல் தான் அமெரிக்காவை கோபப்படுத்தியது.

அதுமட்டுமின்றி அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக பற்றாக்குறை என்பது 30 சதவீதம் வரை உள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு தான் அதிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அமெரிக்காவை வைத்து சீனாவில் உள்ளவர்கள் லாபம் ஈட்டுகிறது.

இந்த வர்த்தக பற்றாக்குறையை சரிசெய்ய டொனால்ட் டிரம்ப் நினைக்கிறார். இதன் ஒருபகுதியாக தான் அவர் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீதம் வரை வரி விதித்துள்ளது.

பதிலுக்கு சீனாவும் தற்போது அமெரிக்காவில் இருந்து அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் விவசாய பொருட்களுக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பதிலடி கொடுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சீனா சார்பில் மார்ச் 10ம் தேதி முதல் அமெரிக்காவில் இருந்து வரும் கோழி, கோதுமை, சோளம், பருத்தி உள்ளிட்டவற்றுக்கு 15 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சோயாபீன்ஸ், பன்றி இறைச்சி, மீன் உள்ளிட்ட கடல் உணவு பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரை வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதோடு 25 அமெரிக்க நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகள் இப்படி வரி விதிப்பின் மூலம் மோதி கொள்வது இது முதல் முறையல்ல. டொனால்ட் டிரம்ப் வந்த பிறகு சீனாவுக்கு 10 சதவீத வரி விதிப்பை அவர் அறிவித்தார்.

அதற்கு பதிலடியாக அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீது 15 சதவீத வரியையும், எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10 சதவீத வரியையும் சீனா விதித்தது.

இது அமெரிக்காவுக்கு சிக்கலை தரும் நிலையில் தான் தற்போது விவசாயம் மற்றும் உணவு பொருட்கள் மீது வரி விதிக்க சீனா அதிரடி முடிவு செய்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Previous Story

மொசாட்டை  நம்பியது வேஸ்ட்!

Next Story

அல் ஜசீராவுடன் மோதல்:ரணில் படுகாயம்