ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரே புதுக் கதை!

நஜீப் பின் கபூர்

சமகாலத்தில் பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் அரசியல் அமைப்புச் சட்டங்கள் அரசியல் சம்பிரதாயங்கள் என்று வழக்கில் கடைப்பிடிக்கபட்டு வருகின்றன. இதில் சம்பிரதாயங்களை மீறினால் அது பெரும் தவறாக மாட்டாது. ஆனால் பிரித்தானிய போன்ற நாடுகளில் அரசியல் யாப்புக்குள்ள அந்தஸ்தும் அங்கிகாரமும் சம்பிரதாயங்களுக்கும் இருக்கின்றன.

இதனை எழுதப்பாடாத சட்டங்கள் என்றும் சொல்லாம். அந்த வகையில் நமது நாட்டிலும் அரசியல் அமைப்பு என்று ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த அரசியல் யாப்பில் சொல்லப்பட்ட விடயங்களை அண்மைக்காலமாக இருந்து அதிகாரத்தில் இருந்தவர்கள் எந்தளவுக்கு மதித்திருக்கின்றார்கள்கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால். அரசியல் யாப்பை மீறி பதவியில் இருக்கின்ற அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் செய்து வந்திருக்கின்ற அட்டகாசங்களின் பட்டியலை நாம் தொகுக்கப் போனால் அது பெரும் நாவல் போல் ஒரு புத்தகத்தில் பதிய வேண்டி இருக்கும்.

அந்தளவுக்கு இலங்கையில் அரசியல் யாப்புக்களுக்கு மதிப்போ அரசியல் ரீதியிலான ஆளுமையோ இல்லை என்பதுதான் எமது கருத்து. அதுவும் இது சின்னச் சின்ன விவகாரங்களாக அல்லாமல் பாராதூரமான குற்றச் செயல்களாக அவை இருந்து வருகின்றன. உதாரணத்துக்கு இரட்டை பிரசா உரிமை உள்ளவர்கள் ஜனாதிபத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று விதி இருந்தாலும். முன்னாள் ஜனாதிபதி கோட்டா இந்த விதியை பின்பற்றவில்லை என்ற பலத்த குற்றச்சாட்டு இருந்த வருகின்றது.

அந்த வகையில் நாட்டில் தலைமகனே மோசடிமூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றார் என்பதுதான் இதிலிருந்து தெளிவாகப் பார்க்க முடிகின்றது. இன்று வரை இந்த விவகாரத்தில் தெளிவான பதில்களை எவரும் நாட்டுக்குச் சொல்லவில்லை. முன்னாள் தேர்தல் ஆளையாளர் மஹிந்த தேசப்பரிய மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை பெற்றிருந்தாலும் இந்த விவகாரத்தில் அவரது பெயருக்கும் ஒரு கலங்கம் இருக்கின்றது என்பதும் தெரிந்தே.

அடுத்து குற்றவாளிகளை நீதி மன்றம் உறுதி செய்து அவர்களுக்கு தண்டனை வழக்கும் போது அரசியல் அதிகாரத்தை பாவித்து அப்படிப்பட்ட அப்பட்டமான குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்களுக்கு அதிகாரம்மிக்க பதவிகளைக் கொடுத்து அழகு பார்க்கின்ற தேசம் உலகில் வேறு எங்கும் இருக்க மாட்டாது. இதில்  கொலைகள் தொடர்பில் மரண தண்டனைக் கைதிகள் கூட அடங்குகின்றார்கள்.

அடுத்து தமக்குக் தேவையானவர்கள் தமது உறவுகள் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகும் போது அவர்கள் மீது சட்டத்தை பாவிக்க வேண்டாம் என்று தடுக்கின்ற வசதியும் இந்த நாட்டில் மட்டும் தான் நடைமுறையில் இருந்து வருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையான குற்றவாளிகளை இனம் காண்பதிலுள்ள தடைகள். லசந்த> எகனலிகொட மற்றும் தாஜூதீன் கொலை தொடர்பில் காட்டப்படுகின்ற அசமந்த போக்கும் மூடி மறைக்கின்ற ஒரு தன்மையும் வெளிப்படையாகவே தொரிகின்றது.

சுருக்கமாகக் குறிப்பிடுவதானால் அரசியல் யாப்பு மட்டுமல்ல நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் காவல் துறையினர் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான சட்டவிரோத செயல்பாடுகள் அடாவடித்தனங்கள் உலகில் நிகழ்கின்ற ஒரே நாடும் இந்த நாடு மட்டுமே. இதனால் உலகம் இலங்கையில் நடப்பது ஒரு அராஜக ஆட்சி என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்து வருகின்றது.

அதே போன்று மக்கள் சொத்துக்கள் இயற்கை வளங்கள் என்பவற்றை அசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டணி சமைத்து கொள்ளையடிக்கின்ற சம்பிரதாயமும் இங்கு மட்டுமே நிகழ்ந்து கொண்டிருகின்றது. இது வரையிலும் இந்த நிகழ்வுகள் தொடர்பாக எவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் அரசியல் பொருளாதார ரீதியில் நாடு வங்குரோத்து அடைந்ததால் இந்த விவகாரங்கள் தற்போது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருக்கின்றது.

நாம் மேற்சொன்ன அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்டிருப்பதால் சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் இலங்கையை ஒரு அராஜக நாடாக கணித்து உறுதிப்படுத்தி தற்போது இலங்கை விடயத்தில் மிகுந்த எச்சரிகையாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதில் உள்ள மிகப் பெரிய வேடிக்கை என்ன வென்றால் இந்த மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு சர்வதேசம் போடுகின்ற பிச்சையிலும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று அவர்களே தமக்குள் சண்டையிட்டுக் கொண்டும் கோப் போன்ற விசாரணை அமர்வுகளிலும் தெரியவருகின்றது.

இப்படியான இடங்களில் இது உறுதி செய்யப்படுகின்ற  போது இவற்றை நாம் கண்டு கொள்ளத் தேவை இல்லை என்று தவறிலைத்தவர்களே  பகிரங்கமாக கூறுகின்றார்கள். அவர்களுக்கு பக்க பலமாக அரசியல் தலைமைகள் துணைக்கு இருக்கின்றார்கள். மேலும் இது போன்ற விசாரணைக் குழுக்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பவர்களும் பயங்கரமான கிரீமினல்கள் என்றால் நாட்டில் என்ன நடக்கின்றது என்பதனைப் புரிந்து கொள்ள முடியும். இப்படியான ஒரு தேசம் எப்படி தலை நிமிரப் போகின்றது என்பதனை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் நமது நாட்டின் அண்மைக்கால அரசியல் கலாச்சாரமாக இருந்து வருகின்றது.

ஆட்சியாளர்கள் குறிப்பாக ராஜபக்ஸாக்கள் தமக்கு எதிராக பொது மக்கள் கிளர்தொழுந்த போது அதிகாரம் மிக்க பதவிக்கு குறுக்கு வழியில் வெரும் ஒரு ஆசனத்தை வைத்திருக்கின்ற ரணிலை அதிகாரம் மிக்க பதவிக்கு அமர்த்தி அந்த மக்கள் கிளர்ச்சியை தற்காலிகமாக செயலிழக்கப்ப பண்ணி இருக்கின்றார்கள்.

இப்போது நாட்டில் ஜனாதிபதி ஆசனத்திதல் ரணில் அமர்ந்திருந்தாலும் அவர் நூலில் ஆட்டப்படுகின்ற பொன்மை என்பதுதான் எமது கருத்து. இப்போது ரணில் ஜனாதிபதியாகவும் தினேஷ் பிரதமர் என்று சொல்லிக் கொண்டாலும் இந்த இருவருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. மொட்டுக் காட்சியில் இருக்கின்ற ராஜபக்ஸ விசுவாசிகளும் ராஜபக்ஸாக்களும் குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸதான் இந்த இரண்டு பதவிகளுக்கான அதிகாரங்களையும் கையாளுகின்றார் என்பது எமது விமர்சனமும் அவதானமுமாக இருக்கின்றது.

இந்த வாரத் துவக்கத்தில் சில ஊடகங்கள் மஹிந்த ராஜபக்ஸ தனது பிறந்த தினத்தில் பிரதமராக பதவியேற்கப் போகின்றார் என்று தலைப்புச் செய்தி சொல்லி இருந்தது. இதே தகவலை நாம் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தோம். அதுவும் மஹிந்த ராஜபக்ஸாவின் இந்த பயணம் ஜனாதிபதி கதிரையில்தான் போய் முடியும் என்றும் அதில் விளக்கமாகச் சொல்லி இருந்தோம். அதனை நோக்கிய நகர்வுகள்தான் இன்று நமது அரசியல் அரங்கில் நடந்து கொண்டிருக்கின்றது.

தெற்கு களுத்துறையில் நடந்த மொட்டுக் கட்சியின் கூட்டத்தை அவதானித்தால் மஹிந்த ராஜபக்ஸாவை முன்னிருந்தி அரசியலில் இருந்து விரட்டப்பட்ட பசிலையும் வைத்துத்தான் இந்த நகர்வுகள் நடக்க இருக்கின்றன. இது போன்ற மொட்டுக் கட்சியின் மீள் கட்டியெழுப்புகின்ற கூட்டங்கள் நாடு பூராவிலும் விரைவில் நடக்க இருக்கின்றது. அதன் பின்னர் தங்களை சரி செய்து கொண்டு இவர்கள் வருகின்ற மார்ச்சுக்குப் பின்னர் ஒரு பொதுத் தேர்தலுக்கு தங்களைத் தயார் செய்து கொண்டு பொதுத் தேர்தல் ஒன்றுக்குப் போக இருக்கின்றார்கள்.

அந்தத் தேர்தலில் தமக்குப் பின்னடைவு வந்தாலும் அதனை அடுத்த வருகின்ற  ஆட்சி மாற்றத்தின் போது தனது மூத்த புதல்வர் நாமலை அதிகாரம் மிக்க பதவிக்கு கொண்டு செல்வது இந்த நிகழ்ச்சி நிரலில் மறைக்கப்பட்ட பக்கங்களாக இருக்கின்றன. இவர்களின் இந்த வேலைத் திட்டத்தினை முன்னெடுப்பதற்காக இவர்கள் பல பில்லியன் பணத்தைக் கூட முதலிடு செய்ய இருக்கின்றார்கள். அதற்குத் தேவையான பணமும் அவர்கள் கையிலும் அவர்களைச் சார்ந்தவர்கள் கரங்களிலும் இருக்கின்றன. இதில் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியும் பெறுவார்கள் என்பதும் நமது கணிப்பு.

தற்போது நாட்டில் தேர்தல்கள் பற்றிய செய்திகளும் அதனை தள்ளி வைக்கின்ற முயற்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய என்னதான் இலங்கைக்கு நெருக்கடியான நேரங்களில் உதவிகளைச் செய்து வந்தாலும் அது எதிர்பார்க்கின்ற அதிகார பரவலாக்கம் குறைந்த பட்சம் மாகாணசபைத் தேர்தலையாவது நடாத்தி முடிப்பதற்கான முயற்ச்சியில் அது இன்று வரை ஏமாந்து நிற்க்கின்றது. அல்லது இந்தியாவும் இலங்கையும் இணைந்து அதிகாரப் பகிர்வு விடயத்தில் நாடகமாடுகின்றது.

இதில் இந்தியாவுக்கு உண்மையிலே நாட்டம் இருந்தால் தேர்தல் விடயத்தில் இலங்கைளை ஒரு தீர்மானம் எடுக்கப் பண்ணுவற்காக சில மணிநேரங்கள் போதுமானதாக இருக்கும் ஆனால் அந்த முயற்சியை இந்திய இன்றுவரை மேற்கொள்ளவில்லை என்பது எமது வழக்கமான குற்றச்சாட்டாக இருக்கின்றது.

வருகின்ற மார்ச்சுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் நடக்கும் என்று சில ஊடகங்கள் செய்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன. உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி ரணில் சில தினங்களுக்கு முன்னர் சொல்லி இருந்த ஒரு கருத்து மார்ச்சில் நடக்க வேண்டிய இந்தத் தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை என்பதனை வெளிப்படுத்தி இருக்கின்றது. ரணில் உள்ளாட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அரைவாசியாக குறைத்து திருத்தம் செய்த பின்னர்தான் நாட்டில் தேர்தல் என்று சொல்லி இருந்தார். அவரது இந்த அறிவிப்பு தேர்தலை ஒத்தி வைப்பதற்கான ஒரு ஏற்பாடு என்பதனை நாம் உறுதியாக சொல்லி வைக்கின்றோம். இது கூட மொட்டுக் கட்சியினர் தேவைக்காக ஜனாதிபதி ரணிலால் சந்தைப் படுத்தப்படுகின்ற விளம்பரம்செய்தி.

எதிர்க் கட்சியினர் அவரின் இந்த கருத்தை வன்மையாகக் கண்டித்து வருகின்றார்கள். ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மொட்டுக் கட்சிக்கு இருக்கின்ற பெரும்பான்மை என்பவற்றையும் நாம் மேற்சொன்ன அரசியல் வன்முறைகளைப் பாவித்து பதவியில் இருக்கிறவர்கள் இந்த நாட்டில் என்ன அட்டகாசங்களையும் வேண்டுமானல் பண்ண முடியும் என்று இருக்கின்ற நிலையில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்போ மறியாதையோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே அரசியல் யாப்பு தேர்தல் என்பன எல்லாம் மொட்டுக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பத்தான் முடிவாகும் என்பது மிகத் தெளிவு. ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸாக்கள் எழுதிக் கொடுக்கின்ற விடயங்களுக்கு கையெழுத்துப் போடுகின்ற ஒருவர் மட்டுமே. எனவே ஊடகங்கள் தேர்தல்கள் பற்றி என்னதான் அடிக்கடி முன்னுக்குப் பின் முரணான செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதனை பொதுமக்கள் நம்பி ஏமாறக் கூடாது.

தேர்தல்களை அரசு ஒத்தி வைத்தால் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று சஜித் அணியைச் சேர்ந்த லக்ஷ்மன் கிரியெல்ல கண்டியில் நடந்த ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்படி ஒரு போராட்டத்தை நடாத்துக்கின்ற துணிவோ தொண்டர்களே அவர் சார்ந்த அரசியல் அணிக்குக் கிடையாது. எனவே தேர்தல் தொடர்பாக சர்வதேசத்தின் அழுத்தம் ஒன்று மாட்டும்தான் இது விவகாரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் கருதுகின்றோம். அதிகாரம் மிக்க பதவிகளில் பொம்மைகளை இருத்திவிட்டு களத்தில் வேறு சிலர்தான் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். சமகாலதில் இப்படியான ஒரு ஆட்சியை இங்கு மட்டுமே பார்க்க முடியும்.

நன்றி:16.10.2022 ஞாயிறு தினக்குரல்

         

Previous Story

செளதிமயமாக்கலின் தாக்கம்

Next Story

காந்தாரா - சினிமா விமர்சனம்