ஜனாதிபதியாக திரவுபதி முர்மு 25ல்! பதவியேற்பு.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு, 64, நாட்டின், 15வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுடில்லியில் வரும், 25ல் நடக்கவுள்ள விழாவில் அவர் பதவி ஏற்க உள்ளார். பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 25ல் முடிவுக்கு வருவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 18ல் நடந்தது.

540 ஓட்டுகள்

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பழங்குடியினத்தைச் சேர்ந்தவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு போட்டியிட்டார். காங்கிரஸ், தேசியவாத காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த ஓட்டுப்பதிவில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவை சேர்ந்த 788 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த ஓட்டுப்பதிவில் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர். கடந்த 18ல் தேர்தல் முடிந்த நிலையில், புதுடில்லியில் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. முதல் சுற்றில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 748 ஓட்டுகளில் திரவுபதி முர்மு 540 ஓட்டுகள் பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 208 ஓட்டுகள் கிடைத்தன. 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. எட்டு எம்.பி.,க்கள்
ஓட்டளிக்கவில்லை.

நான்கு சுற்றுகள்

ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.,க்கள் அளிக்கும் ஒரு ஓட்டுக்கு 700 மதிப்புகள் அளிக்கப்படுகின்றன. இதன்அடிப்படையில் திரவுபதி முர்மு பெற்ற ஓட்டுகளின் மதிப்பு 5 லட்சத்து 23 ஆயிரத்து 600 ஆக மதிப்பிடப்பட்டது. இது எம்.பி.,க்களின் மொத்த ஓட்டுகளில் 72.19 சதவீதமாக உள்ளது.யஷ்வந்த் சின்ஹா பெற்ற ஓட்டுகளின் மதிப்பு, 1 லட்சத்து 45 ஆயிரத்து 600 ஆக மதிப்பிடப்பட்டது. இது மொத்த ஓட்டுகளில் 27.81 சதவீதமாகும்.பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.,க்கள் கட்சி மாறி முர்முவுக்கு ஓட்டளித்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது சுற்றில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் நான்கு சுற்றுகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திரவுபதி முர்முவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகள் கிடைத்தன. இறுதியில், திரவுபதி முர்மு பெற்ற ஓட்டு மதிப்பு, 6 லட்சத்து 76 ஆயிரத்து 803 ஆகஅறிவிக்கப்பட்டது.

இது மொத்த ஓட்டுகளில் 64 சதவீதமாகும்.அவரை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா பெற்ற ஓட்டு மதிப்பு, 3 லட்சத்து 80 ஆயிரத்து 177 ஆக அறிவிக்கப்பட்டது. இது மொத்த ஓட்டுகளில் 36 சதவீதம். பதிவான மொத்த ஓட்டுகளில் 53 ஓட்டுகள் செல்லாதவையாக
அறிவிக்கப்பட்டன.நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் வரும் 25ல் பதவி ஏற்க உள்ளார். மத்திய அரசு பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. திரவுபதிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் கொண்டாட்டம்!

நாட்டின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள திரவுபதி முர்முவின் வெற்றியை, அவரது சொந்த மாநிலமான ஒடிசா மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். ஆளும் பிஜு ஜனதா தள தொண்டர்கள், பொதுமக்களுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மயூர்பஞ்ச் மாவட்டத்தின் ராய்ரங்பூரில் உள்ள முர்முவின் வீட்டு வாசலில் நுாற்றுக்கணக்கானோர் திரண்டு, பழங்குடியினரின் பாரம்பரிய இசையை இசைத்து நடனம் ஆடினர். ஊர் முழுதும் மேளதாளங்கள் அதிர்ந்தன.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பா.ஜ., தலைமையகத்திலும் கொண்டாட்டங்கள் களைகட்டின. திரவுபதி முர்மு பிறந்த கிராமமான உபார்பேடாவில், அவரது ஆதரவாளர்கள் நேற்று காலை முதலே கோவில்களில் வழிபாடுகளை நடத்தினர். அங்குள்ள முர்முவின் உறவினர்கள் வீடுகளில் குவிந்த மக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நம் நாட்டு மக்கள் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண், நாட்டின் ஜனாதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். திரவுபதி முர்முவின் வாழ்க்கை, ஆரம்பத்தில் அவர் அனுபவித்த கஷ்டங்கள், அதன் பின் அவர் ஆற்றிய சேவை, குவித்த வெற்றிகள் உள்ளிட்டவை ஒவ்வொருவருக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கும். குறிப்பாக, ஏழை எளிய, விளிம்பு நிலை மக்களுக்கு வாழ்க்கை மீது மிகப் பெரிய நம்பிக்கையை அளிக்கும். நிச்சயம் மிக சிறந்த ஜனாதிபதி என்றும் பெயர் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சி பாகுபாட்டை தாண்டி முர்முவுக்கு ஓட்டளித்த அனைத்து
எம்.பி.,க்கள் – எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி. – நரேந்திர மோடி, பிரதமர்

Previous Story

முதுகில் குத்தி விட்டார்கள்!

Next Story

ரணில் முரண்பாடு கேளுங்கள்!