இதை கவனிச்சீங்களா!
அமெரிக்காவுக்கு சவால்!
வழக்கமாக திறமையானவர்களை அமெரிக்காதான் டக்கென தூக்கிக்கொள்ளும். ஆனால் இந்த முறை, மொத்த நாட்டையும் திறமையானவர்கள் நிறைந்த பகுதியாக மாற்ற சீனா புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் எல்லா துறையிலும் சீனாதான் முன்னணியில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி என்ன மாற்றங்களை சீனா அமலாக்கப்போகிறது? அதற்கான திட்டம் என்ன? இது இந்தியாவை பாதிக்குமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்த செய்தி விளக்கமளிக்கிறது.
சீனாவை வடிவமைக்க அந்நாட்டு அரசு வித்தியாசமான வழிமுறைகளை கையாள்கிறது. அரசு இயந்திரத்தையும், அரசியல் கட்சிகள் மற்றும் வணிகர்களையும் இணைத்து ஆலோசனைகளை மேற்கொள்வதுதான் அந்த வித்தியாசமான வழிமுறை. இந்த நிகழ்வுக்கு ‘இரண்டு அமர்வுகள்’ (Two Sessions) என்று பெயர்.
- தேசிய மக்கள் காங்கிரஸ்
- சீன மக்கள் அரசியல் ஆலோசனை குழு
முதலில் உள்ள ‘தேசிய மக்கள் காங்கிரஸில்’ நாடு முழுவதும் இருந்து 3000 பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பார்கள். நம்மூர் நாடாளுமன்றம் மாதிரி என நினைத்துக்கொள்ளுங்கள். புதிய சட்டம், சட்ட திருத்தம், திட்டங்கள், வேலை அறிக்கை, பொருளாதார திட்டம் உள்ளிட்டவை இங்குதான் தீர்மானிக்கப்படும்/நிறைவேற்றப்படும். இதற்கு பிரதிநிதிகள் வாக்களிப்பார்கள். பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படும்.
இரண்டாவதாக உள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (CPPCC) பற்றி பார்ப்போம். இது ஒரு அரசியல் ஆலோசனை குழு. இந்த குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இருப்பார்கள். தவிர வணிகர்கள், கல்வியாளர்கள், சமூக குழுக்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். யதார்த்த சூழலில் நாடு வளர்ச்சியை எட்ட என்ன தேவைப்படுகிறது?
அரசு எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பது குறித்து இந்த குழு பரிந்துரைக்கும். சமீபத்தில் இந்த இரண்டு குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் சீன இளைஞர்களின் திறனை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது. Chat GPT க்கு மாற்றாக சீனா Deepseekஐ கொண்டு வந்திருக்கிறது. ஆனால் பல துறைகளில் இதுபோன்ற சிறந்த கண்டுபிடிப்புகளை கொடுக்க வேண்டிய தேவை தற்போது அந்நாட்டுக்கு எழுந்திருக்கிறது.
எனவே, CPPCC குழுவினர் இது தொடர்பாக அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து கல்வி முறையை மாற்றி அமைப்பது என சீன அரசு முடிவெடுத்திருக்கிறது.
முடிவின்படி, பெய்ஜிங் பல்கலைக்கழகம், சிங்குவா பல்கலைக்கழகம், ரென்மின் பல்கலைக்கழகம், ஷாங்காய் ஜியாவோ தொங் பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்விநிலையங்களில் AI, Integrated Circuits, Biomedicine, Healthcare, New Energy ஆகிய படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது மாணவர் சேர்க்கையையும் அதிகரித்திருக்கிறது.
இது குறித்து சீன கல்வித்துறை அமைச்சர் தனது பேட்டியில் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 25 கோடி மாணவர்கள் கல்வி முடித்து வெளியே செல்கிறார்கள். இவர்கள் அனைவரையும் திறமையானவர்களாக மாற்ற நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். வேலை சந்தையில் நுழையும் சீனர்களில் கடந்த 14 ஆண்டுகளாக அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) துறையில் நாங்கள் மிகப்பெரிய அளவுக்கு முதலீடு செய்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். இதன் அர்த்தம் என்னவெனில் இனி உலகம் முழுவதும் சீனாவின் தொழில்நுட்பம்தான் நிறைந்து இருக்கும்.
ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் வளர்ச்சியில் போட்டி ஏற்பட்டதே அதுபோல, சீனா vs அமெரிக்கா என்கிற சூழல் உருவாகும். இது இந்தியாவுக்கும் சாதகமான விஷயம்தான். சீனா வளர்ந்தால் இந்தியாவும் அதற்கு ஈடுகொடுத்து வளர வேண்டும். இந்த அழுத்தம் நம்முடைய நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்லும் என்று பலரும் கூறுகின்றனர்.