“சீக்ரெட் ஆவணங்கள்..” வசமாக மாட்டிய டிரம்ப்..

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னுமே வரிசையாகச் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், இப்போது அவர் ரகசிய ஆவணங்களை வைத்திருந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சர்ச்சை நாயகனாக உருவெடுத்தவர் டிரம்ப். அவர் அதிபராக இருந்த போதே தொடர்ச்சியாகச் சர்ச்சையில் சிக்கியவர். குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் அவரது பேச்சுகள் அதிர்வலைகளைக் கிளப்பின.

அதேபோல 2020இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கூட அவர் அதிபர் பதவியில் இருந்து விலக மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையில் நுழைந்து கலவரத்தையும் ஏற்படுத்த முயன்றது எல்லாம் அமெரிக்க ஜனநாயகத்தின் கருப்பு நாள்.

 Ex-US President Trump Charged Over Secret Documents to appear on court next week

டிரம்ப்: அவர் அதிபர் பதவியில் இப்போது இல்லாவிட்டாலும் அவரை சுற்றிய சர்ச்சைகள் நீங்கவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு தான், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுடன் உறவு வைத்திருந்து குறித்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைதும் கூடச் செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் மீது இப்போது மற்றொரு வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அதாவது அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் கூட அரசுக்குச் சொந்தமான ரகசிய ஆவணங்களை வைந்திருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது..

இந்த வழக்கில் அவர் மீது குற்றவியல் விசாரணை நடைபெற உள்ளது. இது குறித்து டிரம்ப் கூறுகையில், “போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஊழல் நிறைந்த பைடன் நிர்வாகம் என்னை முடக்கப் பார்க்கிறது” என்று அவர் சாடினார். ஆவணங்களைக் கையாண்டது குறித்து தன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக (indicted)டிரம்ப் கூறுகிறார். இருப்பினும், அமெரிக்க நீதித்துறை இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. டிரம்ப் மீது என்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என்பது குறித்தும் துல்லியமான தகவல்கள் இல்லை.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் டிரம்ப் மாளிகையில் சோதனை நடத்திய எப்.பி.ஐ அதிகாரிகள் அங்கிருந்து பல ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது. இருப்பினும் தான் எந்த தவறையும் செய்யவில்லை என்றே டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். indicted என்றால் என்ன: ஒருவர் குற்றம் செய்ததாக ஜூரி குழு குற்றஞ்சாட்டுவதே indicted ஆகும். இது ஜூரி எனப்படும் நடுவர் குழுவால் வெளியிடும் ஒரு ஆவணமாகும். இவர்கள் ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானித்து முடிவெடுப்பார்கள்.

76 வயதான டிரம்ப், உளவு சட்டத்தை மீறி ரகசிய ஆவணங்களை வைத்திருத்தல், சட்டத்தை மீற முயல்வது, பொய்யான அறிக்கைகளை வழங்குதல், ஊழலை மறைத்தல் மற்றும் ஆவணத்தை மறைத்தல் உள்ளிட்ட ஏழு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான புதிய குற்றச்சாட்டு குறித்து அவரது வழக்கறிஞர்கள் இதுவரை எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜர்: வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மியாமியில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜராக வேண்டும். அவர் முன்னாள் அதிபர் என்பதால் சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பில் இருக்கிறார். இதனால் நீதிமன்ற வளாகத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் இந்த வழக்கில் கைதாக வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் ஆஜராகும் டிரம்பிடம் குற்றம் செய்தது குறித்து கேள்வி கேட்கப்படும்.. அதைத் தொடர்ந்து டிரம்ப் ஜாமீன் அல்லது பிற நிபந்தனைகளை நீதிபதி முடிவு செய்வார்.. வரும் காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகவும், சட்டத்திற்குக் கீழ்ப்படியவும், நீதிபதி கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் டிரம்ப் உறுதியளிப்பார். அதேநேரம் இந்த வழக்கு காரணமாக டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவொரு பிரச்சனையும் வராது என்றும் கூறப்படுகிறது.

Previous Story

பூமிக்கு அடியில் 32,000 அடி ஆழத்திற்கு துளையிடும் சீனா.

Next Story

மொட்டுக் கட்சிக்குள் ரணில் அணி!