சிறுபான்மை முகாம்களை தன்வசப்படுத்தும் சுற்றில் ஜனாதிபதி அனுரகுமார!

நஜீப் பின் கபூர்

போர்களில் வெற்றி கிடைத்தாலும் சில இடங்களில் அது இன்னும் முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வந்து சேரவில்லை அல்லது அந்த இடங்களில் பின்னடைவு நிலமைகள் இருப்பதை நாம் உலக வரலாற்றிலும் ஏன் நமது நாட்டிலும் பார்த்திருக்கின்றோம். இது தேர்தல்களுக்கும் பொருந்தும்.

நமது அரசியலை எடுத்துக் கொண்டால் தேர்தல் முடிவுகள் என்னதான் வெற்றிகளையும் தோல்விகளையும் கொடுத்தாலும் சில இடங்கள் அல்லது பிரதேசங்கள் ஆளுகின்ற கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் போய் விடுகின்றன. அந்த இடங்களில் எதிரணிகள் அல்லது சில குழுக்கள் ஆதிக்கம் இருப்பதையும் நாம் பார்க்கின்றோம்.

📸 Scenes from Weligama as President Anura Kumara Dissanayake addresses an NPP  rally in the southern coastal town. 🇱🇰

அது போலத்தான் சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் பெரும்பான்மை இனக் கட்சிகள் அல்லது தேசிய கட்சிகள் அந்த இடங்களில் செல்வாக்குச் செலுத்துவதில் நெருக்கடிகள் பின்னடைவுகளைச் சந்தித்து வருவதுண்டு.

இது விவகாரத்திலும் ஆளும் என்பிபி. மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆதிக்கமும் ஆட்டங்களும் வரும் நாட்களில்எப்படி அமையப் போகின்றது என்பது பற்றி இந்தவாரம் பேச இருக்கின்றோம்.

இதற்கு முன்னர் இலங்கையின் அரசியல் பின்னணியை மிகச் சுருக்கமாக சற்றுப்பார்ப்போம். ஏனெனில் இதற்கு முன்னர் இது பற்றி நாம் பல சந்தர்ப்பங்களில்நிறையவே பேசி இருக்கின்றோம். ஆளும் என்பிபி. ஜனாதிபதி வேட்பாளர் ஐம்பது சதவீதத்தை எட்டாததால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை நடைபெற்றது நமது அரசியலில் புதிய பதிவு. அதே போன்று பொதுத் தேர்தல் நடந்த போது இதே அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான என்பிபி. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தைக்  கைப்பற்றியதும் அனைவரும் தெரிந்த செய்திகள்.

மக்கள் வழங்கிய இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த எதிரணிகளையும் முடமாக்கி விட்டது. அதே நேரம் நாற்பது வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்ற சஜித் தலைமையிலான எதிரணியினரின் செயல்பாடுகளில் மக்கள் எந்தளவு திருப்தி கொள்கின்றார்கள் என்பதனை நம்மைவிட அவர்களது கட்சியினர்தான் மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும்.

வெறும் மூன்றே மூன்று உறுப்பினர்களை கடந்த நாடாளுமன்றத்தில் வைத்திருந்த என்பிபி.யின் செயல்பாடுகளை-ஆளுமையை நாம் எதிரணியில் இருக்கின்ற அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். இது அவர்களைக் கொச்சை படுத்துவதற்காக அல்ல. இந்தளவு எண்ணிக்கையில் எதிரணி உறுப்பினர்களை வைத்திருக்கின்ற குறிப்பாக சஜித் தரப்பினர் இதனை விட ஆரோக்கியமாக  பங்களிப்பை நாட்டுக்குச்செய்யலாம் என்பதுதான் எமது கருத்து. அதே நேரம் இதன் பின்னர் ரணிலை ஒரு அரசியல் சக்தியாகவே எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

அவர் மீது  நம்பிக்கையுடைய ஒரு சின்னக் கூட்டம் நாட்டில் இருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில் நாம் அதனைத் தெளிவாகப் பார்த்தோம். அத்துடன் வாரிசு அரசியல் மூலம் நாட்டில் 2029ல் ஜனாதிபதியாக அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகின்ற நாமலுக்கு இந்த வாய்ப்பு எந்தளவுக்குச் சாத்தியம் என்பது அவர் மீது இருக்கின்ற டசன் கணக்கான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் மீண்டு வருவாரா அவற்றின் தீர்ப்புக்கள் என்னவாகஅமையம் என்றும் நமக்குத் தெரியாது.

இன்றைய அரசியல் அரங்கு ஜனாதிபதி அனுராவுக்கு தனிக்குதிரை ஓட்டம். போட்டிக்கு எவருமே கிடையாது என்ற நிலை. அல்லது சில நொண்டிக் குதிரைகள்தான் களத்துக்கு வர இருக்கின்றது என்ற நிலை. சஜித்தும் பொருத்தமில்லை. நாமலுக்கும் அந்த வாய்ப்பில்லை.! எனவே சீலரத்ன தேரர்தான் எதிரணி வேட்பாளர் என்ற ஒரு கதை அரசியல் அரங்குகளில் பேசப்படுகின்றது.

நம்மைப் பொறுத்தவரை இது ஒரு நகைச்சுவை என்றாலும் நாட்டில் எதிரணியினரின் நிலையைத்தான் இந்த சீலரத்தன விவகாரத்தில் நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த அரசியல் பின்னணியில் என்பிபி.ஜனாதிபதி அனுர அதிகாரத்துக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.இந்த இரண்டு வருடங்களில் நாம் என்ன செய்திருக்கின்றேம் என்பதனை அவர் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றார். அந்தப் பேரணிகள் உணர்வுபூர்வமாகவும் வெற்றிகரமாகவும் அமைந்திருக்கின்றன.

இதற்குப் பதில் கொடுக்க எதிரணியினர் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ஒரு நிலையும் நாட்டில்  இருக்கின்றது. ஆனால் இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான சஜித்தின் தரப்பினர் செயல்பாடுகள் மொட்டு அணியின் செயல்பாடுகளுடன் ஒப்பு நோக்கின்ற போது பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றது. இதற்குக் காரணம் சஜித் அணிக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் பலயீனங்கள் மற்றும் கட்சியின் பொருளாதாரம் மற்றும் இப்போது பேரணிகளை நடாத்த வேண்டிய அவசியம் இல்லை.

மாகாணசபைத் தேர்தல் வந்தால் ஒரு பிடி பிடிப்போம் என்று தலைவர் தமக்கு நெருக்கமான சிலரிடத்தில் தனிப்பட்ட ரீதியில் விளக்கி வருகின்றாராம். அதே நேரம் இப்படி பலயீனப்பட்டிருக்கின்ற எதிரணியினர் என்னதான் அவ்வப்போதுதமக்குள் சந்திப்புக்களை நடாத்தி தீர்மானங்களை எடுத்தாலும் அது ஒரு போதும் முன்னகர முடியாத ஒரு நிலையில் இருந்து வருகின்றது. காரணம் அவர்களுக்கு ஒரு பொது வேலைத்திட்டத்துக்கு வரமுடியாது இருக்கின்றது.

ஆனால் மொட்டுக் கட்சியிடம் பணப்பலம் இருக்கின்றது. அதே நேரம் அங்கிருக்கின்ற பெரும்பாலானவர்கள் ஊழல் மோசடிகளில் சிக்கி இருக்கின்றார்கள்.அதனால் அவர்களுக்கு பதவியில் இருக்கின்ற என்பிபி. அரசை நல்ல வழியிலோ கெட்டவழியிலோ அகற்ற வேண்டிய தேவை அவசியமாகவும் அவசரமாகவும் இருக்கின்றது. அதனால் அவர்கள் மக்களை அரசுக்கு எதிராக ஒன்று சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றார்கள்.

அனுரகுமார என்னதான் ஜனாதிபதியானாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பறினாலும் அரச நிருவாகம் இன்னும் அவர்களின் கட்டுப்பாட்டில் பூரணமாக வந்து சேரவில்லை என்ற ஒரு நிலையும் விமர்சனமும் இருக்கின்றது. எனவேதான் ஜனாதிபதி அனுர நாடுதழுவிய ரீதியில் பிரமாண்டமான பேரணிகளை நடாத்தி  தமது கட்டுப்பாட்டில் வராத அரச அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையைக் கொடுக்க முனைகின்றார் என்று நமக்குத் தோன்றுகின்றது.

அந்த வகையில் இதுவரை தெற்கில்தான் பல பேரணிகள் நடந்திருக்கின்றன. பொதுவாக பதவியில் இருக்கின்ற அரசாங்கம் இப்படியான கூட்டங்களை நடாத்துகின்ற போது, கடந்த காலங்களில் இப்படியான பேரணிகளை ஆளும் தரப்பினர் நடாத்தியதும் கிடையாது. அப்படி அபூர்வமாக நடாத்தினாலும் அதில் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பதிவுகள் கிடையாது.

📸 Scenes from Weligama as President Anura Kumara Dissanayake addresses an NPP  rally in the southern coastal town. 🇱🇰

ஆனால் என்பிபி நடாத்துகின்ற கட்சிக் கூட்டங்களுக்கு அரச வளங்களைப் பாவிக்காது அதற்கு கட்சி பணத்தையும் வளங்களையும்தான் பாவித்து வருவதாக சொல்லப்படுகின்றது. பொதுவாகப் பார்க்கின்ற போது தெற்கில் பேரின சமூகம் ஜனாதிபதி அனுரா தலைமையில் நடாத்துகின்ற கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். இதே போன்ற இன்னும் பல கூட்டங்கள் நடக்க இருக்கின்றன. அதில் சிறுபான்மை பிரதேசங்களில் நடக்க இருக்கின்ற கூட்டங்கள் எப்படி அமையும் என்பது இன்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. இப்போது அது பற்றிப் பேசுவோம்.

வடக்கு யாழ்ப்பாணம் கிழக்கில் கல்முனை மலையகத்தில் நுவரெலியாவில் இப்படியான கூட்டங்கள் விரையில் நடக்க இருக்கின்றன. இது சிறுபான்மை பிரதேசங்களில் அரசியல் செய்கின்ற தலைமைகளுக்கு பெரும் அச்சத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. வடக்கைப் பொருத்தவரை சுமந்திரன்-சிரிதரன் தலைமையிலான அணிகள்தான்  தற்போது ஆளும்தரப்பினருக்கு சவாலாக வடக்கில் இருக்கின்றது.ஆனால் அந்த இருவருக்குமிடையே பனிப்போர் ஒன்றும் நடந்து வருவதும் தெரிந்தது. இது தவிர கஜேந்திரன் மற்றும் இன்னும் சில குழுக்கள் அங்கு அரசியல் இயக்கங்களை வைத்திருக்கின்றன.

பெரும் எதிர்பார்ப்புடன் வடக்குக்குப்போய் அரசியல் செய்ய எதிர்பார்த்த விக்ணேஸ்வரன் இன்று காணாமல் போய் இருக்கின்றார். அவருக்கு ரணிலுக்கு ஏற்பட்ட நிலைதான் வடக்கில் இன்று. இது தவிர போராட்ட காலத்தில் களத்தில் நின்ற பல குழுக்களும் அங்கு இருககின்றன. அவை செல்வாக்கு என்னவென்பதை நாம் அறிவோம். இந்த நிலையில்தான் ஆளும் தரப்பு யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கு மக்களைச் சந்திக்க வருகின்றார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க.

கிழக்கில் கல்முனையை மையப்படுத்திய ஒரு கூட்டமும் நடக்கப் போகின்றது. கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் ஹக்கீம் தலைமையிலான  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரிசாட் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதாவுல்லா தலைமையிலான தேசிய மக்கள் காங்கிரஸ் என்பனவும் தழிரசுக்கட்சிக்கும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கின்றன. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அரசியல் செல்வாக்கு சிறுபான்மை அரசியல் கட்சிகளின் கைகளில் இருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே அனுர தலைமையிலான என்பிபி.க்கு பின்னடைவு வந்தது. இதற்கு சாணக்கியன் செல்வாக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.

எப்படி இருந்தாலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இன்று சிறுபான்மை அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்குச் சமனாக ஆளும் என்பிபி.உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இருக்கின்றார்கள். இந்த நிலையில்தான் ஆளும் என்பிபி இன்று வடக்குக் கிழக்கில் தனது பலத்தை காட்சிப்படுத்த முனைகின்றது.

இது தவிர என்பிபி மலையகத்திலும் ஒரு பேரணி நடத்த இருக்கின்றது.அது நுவரெலியாவில் நடக்கும். நாம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் சிறுபான்மை மக்;கள் மத்தியில் அதிகளவான ஆதரவு என்பிபி. அரசுக்கு மலையகத்தில்தான் காணப்படுகின்றது. மிகக் குறுகிய ஒரு காலப்பகுதியில் அனுர தலைமையிலான என்பிபி. மலையக மக்கள் நலன்களுக்கான பல திட்டங்களை சொன்னபடி செய்து கொடுத்திருக்கின்றது.

இதுவரை காலத்திலும் ரணில் மற்றும் சஜித்துக்கு மலையகத்தில் பாரிய செல்வாக்கு இருந்து வந்தது. அனுரவரவுடன் இன்று அவை மிக மோசமான பின்னடைவை சந்தித்து வருகின்றன. எனவேதான் சிறுபான்மைக் கோட்டைகளை கைப்பற்றுகின்ற பயணத்தில் ஜனாதிபதி அனுர இன்று இறங்கி இருக்கின்றார் என்று நாம் குறிப்பிடுகின்றோம்.

அத்துடன் ஜீவன் தொண்டமான் மனோ திகாம்பரம் ராதாகிருஸ்னன் என்போரின் அரசியல் இப்போது மலையகத்தில் கேள்விக்குறியாக மாறி இருக்கின்றது. அதே நேரம் பல புதிய முகங்கள் ஆளும் தரப்பில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்த நடாளுமன்றத்துக்குள்  நுழைந்திருக்கின்றார்கள்.

இதனால் பல தசாப்தங்களாக அங்கு சமூகத்தின் பேரில் அரசியல் செய்து வந்த தலைமைகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. இதனால் அவர்கள் அச்சத்தில் இருக்கின்றார்கள். அந்த வகையில் நுவரெலியாவில் நடக்கின்ற பேரணியும் அரசியல் களத்தில் உன்னிப்பாக அவதானிக்கப்பட இருக்கின்றது.

பொதுவாக எதிர்வருகின்ற நாட்களில் யாழ்ப்பாணம் கல்முனை நுவரெலிய ஆகிய இடங்களில் நடக்க இருக்கின்ற அனுர தலைமையிலான பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தனித்துவ அரசியல் பேசுகின்ற தலைமைகளுக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதாகவும் இருக்கும். வழக்கமாக தனித்துவத்தலைமைகள் என்றும் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் அரசுடன் இணைந்து அரசியல் செய்து வந்திருக்கின்றன. ஆனால் என்பிபி அரசியலில் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

இது தவிர பௌத்த தேரர்களின் பேரணியொன்றையும் ஆளும் என்பிபி நடத்த இருக்கின்றது. இதன்மூலம் தனக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படுகின்ற விசமத்தனமான பரப்புரைகளுக்கு அனுர அந்தப் பேரணியில் பதில் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியும்.எனவே இந்த நான்கு கூட்டங்களும் தீர்க்கமாதாக அமையும் என்று நாம் கருதுகின்றோம்.

 

Previous Story

මෙන්න මච්ං සුපිරි කොල්ලෙක් මෙ වගේ මිනිස්සු තව බිහිවෙන්න ඔනේ