சிரியா மசூதியில் குண்டுவெடிப்பு.. 8 பேர் பலி

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 21 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிரியா நாட்டின் ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் மசூதிக்குள் இன்று வெடிகுண்டு வெடித்துள்ளது.

இந்த மசூதி, சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில், அலவைட் முஸ்லிம்கள் (சியா இஸ்லாமின் ஒரு பிரிவினர்) பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், மசூதிக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், மசூதியைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிரியாவின் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிரியாவின் நீண்டகாலத் தலைவரான அலவைட் பிரிவைச் சேர்ந்த பஷர் அல்-அசாத் கடந்த ஆண்டு கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, பெரும்பான்மை சன்னி முஸ்லிம் பிரிவினரைச் சேர்ந்த உறுப்பினர்கள் தலைமையிலான அரசாங்கம் அமைந்த பின்னர், சிரியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து பல தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில், மத்திய சிரியாவில் நடந்த தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும், ஒரு மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டனர். ஒரு வருடத்திற்கு முன்பு அசாத் அரசு அகற்றப்பட்ட பிறகு, வழிபாட்டுத் தலத்தில் நிகழும் 2வது குண்டுவெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Story

பேரழிவுக்கு காரணம் கேளுங்கள்!

Next Story

BBC Tamil TV News 26/12/2025