சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரக வளாகத்தை சேதப்படுத்திய காலிஸ்தான் குழு- இந்தியா கண்டனம்

பிரிட்டனின் லண்டன் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்த கொடிக்கம்பத்தில் தேசிய மூவர்ண கொடியை கீழறக்கி காலிஸ்தானி ஆதரவு போராட்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை குழப்பத்தை ஏற்படுத்திய சலசலப்பு ஓயாத நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தையும் அதே காலிஸ்தானி குழுவின் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு வகிக்கும் உயரதிகாரியை அழைத்தும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

பிரிட்டன் தூதரகம்

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்த தேசிய மூவர்ண கொடியை கீழறக்கி காலிஸ்தானி ஆதரவு போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த வளாகத்தையும் அவர்கள் சேதப்படுத்தினர்.இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sikh Militancy 2.0: Khalistan Movement On The Rise Again

“லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்கிருப்பவர்களுக்கு எதிராக நடந்த இழிவான செயல்களை நான் கண்டிக்கிறேன், அவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை,” என்று பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தமது அதிருப்தி மற்றும் கண்டனத்தை தெரிவித்தது.

இந்திய தூதரகத்தில் இந்த சம்பவம் நடந்தபோது அதை தடுக்கத் தவறிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் தரும்படியும் இந்திய வெளியுறவுத்துறை பிரிட்டன் தூதரை கேட்டுக் கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்தார்.

சான் பிரான்சிஸ்கோவில் என்ன நடந்தது?

இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நடந்த போராட்டத்தின்போது தூதரக வளாகத்தை சேதப்படுத்திய கும்பல் குறித்து டெல்லி உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தமது அதிருப்தியை வெளியிட்டது.

நடந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவின் கவலையை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகமும் அமெரிக்க உள்துறையிடம் வெளிப்படுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில், காலிஸ்தானி குழுக்கள் லண்டனில் உள்ள இந்திய தூரகத்தை முற்றுகையிட்டு அந்த பகுதியை சேதப்படுத்தியதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாயின.

அதில் இந்திய தூதரகத்தின் முன்பு ஒரு கூட்டத்தில் “காலிஸ்தான்” கொடிகளை ஏந்திய சிலர் காணப்படுகின்றனர். அந்த வீடியோவில், இந்திய தூதரகத்தின் முன்பாக இருந்த மூவர்ணக் கொடியை ஒருவர் அகற்ற முனைவதைக் காண முடிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. டெல்லியில் இருக்கும் மூத்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது இந்திய அரசு.

ஞாயிற்றுக்கிழமை இரவு பிரிட்டன் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி, “பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு” குறித்து விளக்கம் கேட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மூவர்ணக் கொடியை கழற்றிய கும்பல்

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக வளாகங்கள், அங்கு பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் பிரிட்டன் அரசின் அலட்சியப் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் உயர் அதிகாரி அலெக்ஸ் எல்லீஸ் தற்போது டெல்லியில் இல்லை.

எனவே பிரிட்டனின் துணைத் தூதர் கிறிஸ்டியன் ஸ்காட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியதாகத் தெரிகிறது என பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

“லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிராக பிரிவினைவாத மற்றும் தீவிரவாத சக்திகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க, டெல்லியில் உள்ள மூத்த பிரிட்டன் அதிகாரி ஞாயிற்று கிழமை இரவு நேரில் வரவழைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக வியன்னா ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய ராஜ்ய அரசுக்கான அடிப்படை கடமை பொறுப்புகள் குறித்து நினைவூட்டப்பட்டார்” என இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், “இந்திய தூதரக வளாகம் மற்றும் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஐக்கிய ராஜ்ஜிய அரசின் அலட்சியம் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய நிகழ்வில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் கண்டறிந்து, கைது செய்து தண்டனை அளிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை ஐக்கிய ராஜ்ஜய அரசு மேற்கொள்ள வேண்டும்,” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருக்க உறுதியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டம் திரண்டதைக் கண்டு அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் விசாரணை துவங்கியுள்ளதாகவும் பெருநகர போலீசார் தெரிவித்தனர். பிரிட்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு திரண்ட இந்தக் கூட்டம் பிரிவினைவாத சீக்கிய குழுவான ‘காலிஸ்தான்’ ஆதரவாளர்கள் என்று பிஏ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7:30 மணியளவில் இந்திய தூதரகத்திற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டார்கள். “பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்பே அங்குக் கூடியிருந்த கூட்டம் கலைந்துவிட்டது,” என பெருநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரகத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன, இரு பாதுகாப்பு பணியாளர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை,” என காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதே வேளையில், இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்கான உயர் அதிகாரி அலெக்ஸ் எல்லீஸ், தமது ட்வீட்டில் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செயலை அவர் ‘வெட்கக்கேடானது என்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயல்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் அமைச்சர் தாரிக் அகமது, தனக்கு இந்தச் செயல் திகைப்பை ஏற்படுத்தியதாகவும் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு விஷயத்தை அரசாங்கம் “தீவிரமாக” எடுத்துக்கொள்ளும் என நம்புவதாகவும் கூறினார். மேலும் இந்தச் சம்பவம் தூதரகம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Story

 சவுதி - ஈரான் நெருக்கம்‘கவனிக்கும்’ நாடுகள்

Next Story

பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை அலிஷா வாழ்க்கையில் திடீர் மாற்றம்!