‘‘சண்டையின்றி சரணடைய மாட்டேன்’’ இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்படும் சூழலில் ராணுவத்தின் மிரட்டலுக்கு பணிந்து பதவி விலகப்போவதில்லை என இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28-ம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. இம்ரான் கானுக்கு தற்போது சொந்த கட்சி எம்.பி.களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜா ரியாஸ், நுார் ஆலம் கான் உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் பிரதமர் இம்ரான் கான் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது.

இந்தநிலையில் புதிய திருப்பமாக ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட நான்கு மூத்த பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் பாகிஸ்தான் பிரதமரை ராஜினாமா செய்யுமாறு கூறியதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் கான் சார்பாக ராணுவத்துடன் மத்தியஸ்தம் செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது இதற்காக முன்னாள் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப்பை இம்ரான் கான் தரப்பினர் அனுப்பினர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்ற சபாநாயகரிடம் நாளை சமர்பிக்க எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஒரு உறுப்பினர் இறந்ததால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும். அதன்படி முதல் நாள் அவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் அரசியலமைப்பின்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை மூன்று நாட்களுக்குப் பிறகும், ஏழு நாட்களுக்கு முன்பும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தற்போதைய நிலையில் இம்ரான் கானின் தெஹ்ரீக்இன்சாப் கட்சி கூட்டணி கட்சிகளிடம் பேரம் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் அணிக்கு தாவாமல் இருக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் கட்சி எம்.பி.க்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட பெஞ்ச், அரசியலமைப்பு சட்டத்தின் 63- மீது கருத்து மற்றும் வழிகாட்டுதல்களை கேட்க வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் கருத்து என்னவென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தநிலையில் இம்ரான் கான் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘என்ன வந்தாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன். சண்டையின்றி சரணடைய மாட்டேன். வஞ்சகர்களின் அழுத்தத்திற்காக நான் ஏன் பதவி விலக வேண்டும்’’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரதமர் இம்ரான் கான் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார்.

Previous Story

கைக்குழந்தையுடன் கடலில் தவித்த இலங்கைத் தம்பதி!

Next Story

'இலங்கையில் சாமானிய மக்கள் வாழ முடியாது'