-நஜீப் பின் கபூர்-
நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல்

சூழ்நிலையே அரசியல் நண்பனையும் எதிரியையும் தீர்மானிக்கின்றது!
மாகாணசபைத் தேர்தல்தான் மெகா கூட்டணியை உறுதி செய்யும்!
ஜனாதிபதி பிரதமர் வேட்பாளர்களை இதே தேர்தல் உறுதிப்படுத்தும்!

சுதந்திரத்துக்குப் பின் நமது அரசியலை பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டில் பல தசாப்தங்களாக இந்த நாட்டில் அரசுகளை நடாத்தி வந்திருக்கின்றன. டட்லி பண்டா ஜேஆர் ஸ்ரீமா என்ற தலைவர்கள் மேடைகளில் கடும் சொற்பிரயோகங்கள் பாவிப்பதும் நகரங்கள் கிராமங்களில் தொண்டர்களும் ஆதரவாலர்களும் தேர்தல் காலங்களில் தெருச்சண்டைகளில் இறங்குவது வழக்கமாக நடந்து வந்தது. கிராமப்புறங்களில் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆதரவாலர்கள் அடிதடிகளில் இறங்குவதும் வீடுகளை எரித்தும் கொண்டனர். அதன் பின்னர் சந்திரிக்கா தனது காலத்தில் குருனாகலையில் மிக மோசமான தேர்தல் வன்முறைகளை செய்து வரலாற்று பதிவை ஏற்படுத்தி இருந்தார்.
அண்மைக் காலத்தில் நாட்டிலிருந்த பிரபுத்துவத் தலைமைத்துவங்களை தகர்த்துக் கொண்டு ரணசிங்ஹ பிரேதமதாச ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டது அவரின் தனிப்பட்ட ஆளுமை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ராஜபக்ஸக்கள் மற்றும் ரணில் விக்கிரமசிங்ஹ என்போர் அரசியல் யாப்புக்கு சவால் விடுத்துக் கொண்டுதான் நாட்டில் தமது ஆட்சியை முன்னெடுத்து வந்தனர். ரணில் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நாம் ஒரு போதும் அவரது கட்சி மற்றும் ஆளுமையை மையமாக் கொண்ட ஒரு அரசாங்கமாக நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இது ராஜபக்ஸாக்கள் ஆட்சியின் தொடர் என்பதுதான் எமது கருத்து.
இப்படி சுதந்திரத்துக்குப் பின்னரான அனைத்து அரசுகளும் கூட்டணிகளை தளமாகக் கொண்ட அரசாங்கங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. என்னதான் அரசியல் மேடைகளில் இவர்கள் மோதிக் கொண்டாலும் அனுரகுமார திசாநாயக்க அதிகாரத்துக்கு வரும் வரை இந்த அரசியல் முரண்பாடுகளும் எதிர்ப்புணர்வுகளும் வெறும் மாயை என்பதனை நாம் பார்த்திருக்கின்றோம். எனவேதான் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தனர். தான் தோற்றுப் போய் இருந்தால் தன்னை ஆறடி ஆழத்தில் மஹிந்த மண்ணுக்குள் புதைத்திருப்பார் என்று சொன்ன மைத்திரி குறுகிய காலத்துக்குள்லேயே அந்த மனிதனது காலடியிலே மண்டியிட்டு அவமானப்பட்டார்.
ஜேவிபி கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் சுதந்திரக் கட்சியுடனும் கூட்டணி அமைத்திருந்தனர். அதற்கு அவர்கள் என்ன விளக்கங்கள் சொன்னாலும் யதார்த்தம் அதுதான். இதனை அவர்கள் அரசியல் வியூகங்கள் என்று நாமம் சூட்டிக் கொள்ள முடியும். உள்நாட்டு அரசியலில் இவை எல்லாம் சகஜமானவைதான். சர்வதேச அரசியலும் அப்படித்தான். அதிலும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் எங்கும் அரசியல் நண்பனையும் எதிரியையும் முடிவு செய்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் போது நேச நாடுகள் அச்சு நாடுகள் என்று இரு முகாம்கள் இருந்தன.இன்று அவை கூட அச்சாராகி இருக்கின்றது. நேசநாடுகளில் இருந்த அமெரிக்காவும் ரஸ்யாவும் இன்று மிகப் பெரிய அரசியல் எதிரிகள்.எனவே யாரும் கூட்டணி போடலாம் புதிய எதிரிகளாகவும் நண்பர்களாகவும் மாறலாம் என்பதுதான் இந்த அரசியல் நியதி. எனவே அதில் எவரும் கேள்விகளை எழுப்ப முடியாது.
அண்மைக்கால சம்பவங்கள் அது தொடர்பான நமது பார்வை மற்றும் அரசியல் கூட்டணிகள் பற்றி இப்போது நாம்பார்ப்போம். பதவியில் இருக்கின்ற ஜேவிபி செயல்பாட்டாளர்கள்என்பிபி என்ற பெயரில் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்கள்இப்போது தனது அணியை தேசிய மக்கள் சக்தி என்று மாற்றிக் கொண்டுள்ளனர். எந்த அரசியல் கட்சிகளுக்கும் அவர்கள் தமது அணியில் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் தனது அடிப்படை அரசியல் கோட்பாடான ஜேவிபிக்கு முரண்படாத வகையில் அவர்கள் தமது கூட்டணிணை அமைத்துக் கொள்வதில் மிகுந்த அவதானத்தடன் இருந்தார்கள். அவர்களின் அணுகுமுறையில் ஒரு நியாயம் கொள்கை இருந்தது. இதனைநாம் தனிப்பட்ட ரீதியில் தெரிந்து வைத்திருந்தோம்.

இதற்கு நல்ல ஒரு உதாரணம்தான் இது. முஸ்லிம்கள் தரப்பில் வலுவான வேட்பாளர்களை என்பிபிக்கு வழங்க வேண்டிய தேவை இருந்தது.அது சமூக எதிர்பார்ப்பும் கூட. இதனால் ஜனரஞ்சகமான வேட்பாளர்களை நாம் கண்டறியும் சமூகத் தேவைக்காக டாக்டர் சாபியிடம் போய் சமூக நலன் கலந்த எமது தேவையை தெளிவு படுத்திய ஒருசிலரில் நாமும் இருந்ததோம். முதலில் அதற்கு தனது விருப்பத்தை தெரிவிக்காத டாக்டர் சாபி பின்னர் தனக்கு வாய்ப்புக்கிடைத்தால் அவர் கண்டி மாவட்டத்தில் வேட்பாளராக வருவதற்கும் முன்வந்தார். அப்படி நடந்திருந்தால் மு.கா.தலைவர் ஹக்கீம் நிச்சயம் கண்டியில் மண்கௌவி இருப்பார். இந்தத் தேர்தலில் கூட அவர் நூலிழையில்தான் அங்கு கரை சேர்ந்தார். ஆனால் சாபிக்கு வாய்ப்புக்கிடைக்கவில்லை. அதற்கு என்பிபி தரப்பில் தரப்பட்ட விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி யதார்த்தமாக இருந்தது.
நாம் ஏன் இதனை இங்கு குறிப்பிடுகின்றோம் என்றால் அவர்கள் வேட்பாளர் விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தார்கள். மேலும் ரஞ்சன் ராமநாயக்க பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேக்கா டலஸ் அலகப்பெரும போன்ற ஜாம்பவன்கள் கூட என்பிபி தரப்பில் போட்டியிடத்தயாராக இருந்தார்கள். இதுதவிர பல அரசியல் கட்சிகளும் என்பிபி.யுடன்அரசியல் கூட்டணிக்குத் தயாராகத்தான் இருந்தார்கள்.என்பதனை நாம் நன்கு அறிவோம். ஆனால் வருகின்ற தேர்தல்களில் என்பிபி. தொடர்ந்தும் இந்தக் கொள்கையை பின்பற்றினால் நெருக்கடிகளை எதிர்நோக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதனை நாம் ஜேவிபி-என்பிபி தலைமைகளுக்கு எச்சரிக்கை செய்து வைக்கின்றோம்.
சிறுபான்மை சமூகங்களில் என்பிபி மலையக பிரதிநித்துவம் தொடர்பான ஒரு அங்கிகாரம்இருப்பதாக நமக்குத் தெரிகின்றது. ஆனால் வடக்கு கிழக்கு மற்றும் முஸ்லிம் சமூகத்தில் அந்தப்பிரதிநித்துவங்கள் தொடர்ப்பில் இன்று சமூகத்தில் எந்தளவு அங்கீகாரம் இருக்கின்றது என்று தெரியாது. முஸ்லிம்கள் தரப்பில் ஏறக்குறைய ஐம்பது சதவீதம் பொருத்தமில்லை என்பதுதான் எமது நிலைப்பாடு. இதனை என்பிபி தலைமை பரிசீலனை செய்ய வேண்டி இருக்கும். வருகின்ற மாகாணசபை இந்தக் குறைபாட்டை சரி செய்ய ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்.
2029திலும் என்பிபி ஜனாதிபதி வேட்பாளர் அணுர குமார திசாநாயக்கதான் அதில் மாற்றத்துக்கு இடமில்லை. என்றாலும் அவரது பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டி இருக்கின்றது. அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலில் ஜேவிபி-என்பிபி கனிசமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.அவர்கள் ஓராளவுக்கு வேட்பாளர் விவகாரத்தில் தாரன்மைவாதத்தை பின்பற்ற வேண்டி இருக்கும். அதில் இருக்கும் சாதகபாத நிலமைகளை நாம் அறிவோம்.
பிரதான அரசியல் இயக்கத்தின் நிலை பற்றிய எமது பார்வை அப்படி இருக்க அடுத்து எதிரணி தொடர்பாக எமது நிலைப்பாட்டை இப்போது பார்ப்போம். கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் பெறுபேருகளின் படி பிரதான போட்டியாளர் சஜித் இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடம் கிடையாது. ஆனால் அவரது தனிப்பட்ட ஆளுமை மற்றும் அவரது அரசியல் இயக்கமாக ஐக்கிய மக்கள் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்தக் கூட்டணியில் இருக்கின்றவர்களுக்கு ஒரு நிலையான கொள்கை கிடையாது. தமது தனிப்பட்ட அரசியல் இருப்புக்காகத்தான் அந்தக் கட்சியில் பலர் இருக்கின்றார்கள். ரணிலுடன் இருந்து கரை சேர முடியாது என்பதால்தான் நிறையப் பேர் சஜித் தரப்புக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் பலர் இன்றும் ரணில் விசுவாசிகளாக இருந்து வருகின்றார்கள். அவர்களை சஜித்தும் நன்கு அறிந்து வைத்திருப்பதால் நாம் அவர்களது நாமங்களை உச்சரிப்பை இங்கு தவிர்த்துக் கொள்கின்றோம்.

மேலும் அந்த என்பிபி. அணியுடன் கூட்டணி அமைத்திருக்கின்ற பிரதான கட்சிகளான தனித்துவ முஸ்லிம் தரப்புக்களான ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன முக்கியமானது. ஆனால் இந்த இருதரப்பினரும் ரணிலுடன் இருந்து நாடாளுமன்றம் பிரவேசம் பெற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாக உணர்ந்திருந்ததால்தான் சஜித்துடன் அரசியல் தோழமையை நாடினார்கள். சஜித்தும் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு இவர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கின்றார்.
ஆனால் இந்த சஜித் கூட்டணியில் இருக்கின்ற இந்த தனித்துவக் கட்சிகளுக்கு சஜித் தொடர்பான பெரிய நம்பிக்கை கிடையாது. என்றாலும் அவர்கள்இப்போது கரை சேர்ந்து விட்டார்கள். என்றாலும் முன்பு போல அவர்கள் இப்போது கிங் மேக்கர் கிடையாது. பற்றி எறிகின்ற வீட்டில் சுருட்டு பற்றவைக்கின்ற வேலையைத்தான் இந்த அரசியல் தலைமைகள் அங்கு செய்து கொண்டிருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல் வரும் போது இவர்கள் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.

அதே போன்று மலையக அரசியல் தலைமைகளும் இன்று மிகவும் பலயீனப்பட்டிருக்கின்றது. அந்தக் கூட்டணியின் தலைவரே தேர்தலில் பட்டுப்போய்விட்டார். ஏதோ இரண்டு மூன்று பேர் அங்கு அதிர்ஸ்டவசமாக கரை சேர்ந்திருக்கின்றார்கள். தொழிலாளர் காஙிகிரஸ் வாக்குகளால் ஜீவன் ஒருவாரு கரை சேர்ந்திருக்கின்றார். அதற்கும் ஐதேகாவுக்கும் எந்த உறவும் கிடையாது.மாகாணசபைத் தேர்தலில் இவர்கள் சஜித் தரப்புடன் கூட்டணி போட்டால் அவர்கள் பெறுக்கின்ற வாக்குகளில் இவர்களில் பலர் அவற்றில் கரை சேருவார்கள். அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் இவர்கள் சஜித் அணியுடன் குடித்தனம் போட்டால்தான் பிழைக்கலாம் என்பதால் அந்தக் கூட்டணியில்தான் விரும்பியோ விரும்பாமலோ குடித்தனம் போக அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பது எமது வாதம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் மூன்றாம் இடத்துக்கு வந்தாலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்தக் கட்சி வாக்காளர் அட்டையே காணாமல் போகும் அளவுக்கு மக்களால் நிராகரிக்கபட்டது. இது ரணிலின் வங்குரோத்து அரசியலுக்கு கிடைத்த நெத்தியடி. என்றாலும் அந்தக் கட்சியில் இருக்கின்ற சிலர் அவரது விசிரிகள் எடுபிடிகள் அவர்தான் மாபெரும் அரசியல் மேதைபோல காட்சிப்படுத்த முனைகின்றார்கள் அது வெறும் மாயை. எனவே சஜித் தனது சகாக்களிடம் தனிப்பட்ட ரீதியில் குறிப்பிடுவது போல ரணிலுடன் போடுகின்ற அரசியல் கூட்டு நமக்கு வரும் நன்மைகளளை விட பாதிப்புக்கள்தான் அதிகம். அவர் சொல்லவது போல ரணிலிடம் என்ன வாக்குகளாக இருக்கின்றது.?இதனால்தான் சஜித்துக்கோ அல்லது ஐமச. இந்தக் கூட்டணியால் எந்த நன்மைகளும் வராது.
அடுத்து ஜனாதிபதித் தேர்தலில் நான்காம் இடத்துக்கு வந்த மொட்டுக் கட்சி மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்றுக் கொண்டாலும் அவர்கள் எப்படியோ மூன்று ஆசனங்களை நாடாளுமன்றத்தில் இன்று வைத்திருக்கின்றார்கள். அதனாலும் சில காரணங்களாலும் நாமலின் மொட்டு அணி இன்று ரணிலை விட களத்தில் பலமான நிலையில் இருக்கின்றார்கள். நாடுபூராவிலும் அவர்களுக்கு என்று ஒரு கூட்டம் இருக்கின்றது. அந்தக் கூட்டத்தை அவர்கள் எப்படி தம்முடன் வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. அத்துடன் அரசியல் கட்சியை வழிநடாத்துவதற்குத் தேவையான பொருளாதார- பணப்பலமும் நிருவாகத்தில் இருக்கின்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பும்இவர்களுக்கு இருகின்றது. எனவே வருகின்ற மாகாணசபைத் தேர்தலில்இவர்கள் நிச்சயமாக தனித்துத்தான் களமிறங்குவார்கள்.
அத்துடன் கடந்த காலத்தில் அவர்களுடன் இருந்த பல அரசியல் கட்சிகளும் செயல்பாட்டாளர்களும் இனவாதிகள் மற்றும்ஒரு சில பௌத்த தேரர்களின் ஒத்துழைப்பும் இவர்களுக்கு கிடைக்கும். இன்று அரசியல் வியாபாரத்துக்கு களம் தேடிக் கொண்டிருக்கின்ற பல தனிநபர்கள் இந்தக் கூட்டணியில்தான் வருவார்கள். விமல் வீரவன்ச கம்மல்பில சம்பிக்க திலித் போன்ற பலருக்கு இந்த மொட்டுத்தான் பொருத்தமான அணியாக இருக்கும். மாகாணசபைக்குத்தேர்தல் நடந்தால் அதில் சஜித்தும் நாமலும் எடுக்கின்ற வாக்குகள்தான் 2029ல் வரும் ஜனாதிபதித் தேர்தலில் (அரசியல் அமைப்பு மாறினால் கதை வேறு) எதிரணி பொது வேட்பாளர் யார் என்பது பற்றி தீர்க்கமான முடிவுக்கு வழிவகுக்கும். இந்த இடத்தில்தான் நாம் மெகா கூட்டணி பற்றிய எண்ணக்கருவை இங்கு விதைக்கின்றோம்.
மாகாணசபைத் தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு வருகின்ற அணி சஜித் தரப்பாக இருந்தால் சஜித் ஜனாதிபதி பிரதமர் நாமல் என்ற ஒரு இணக்கப்பாட்டுக்கு வர இடமிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஸ உடலாரோக்கியத்துடன் இருந்தால் இப்படியான ஒரு அரசியல் தீர்மானத்துக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை நாம் முன்கூட்டி சொல்லி வைக்கின்றோம். என்பிபியுடன் மோதுவதாக இருந்தால் இப்படி ஒரு மெகா கூட்டணி எதிரணிகளுக்கு காலத்தின் கட்டாய தேவையாக இருக்கும்.
நமது அரசியல் அரங்கில் ஐதேக. சு.கட்சி என்பன அடுத்து வருகின்ற மாகாணசபைத் தேர்தலில்சம்பிரதாய இடதுசாரிகளைப்போல காட்சிப் பொருளாகின்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படும். மேலும் நாம் குறிப்பிடுகின்ற இந்த மெகா கூட்டணி செல்வாக்குத்தான் என்பிபி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பான தலைவிதியை முடிவு செய்யும். நமது இந்த பதிவுகள் ஒரு முன்கூட்டிய ஒரு அரசியல் கணிப்பாகும் என்பதனை கருத்தில் கொள்ளவும். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பும் நாம் ஒரு மொகா கூட்டணிபற்றி சொல்லி இருந்தோம். அப்படி அது அமைந்தாலும் அன்றைய அரசியல் சூழ்நிலையில் என்பிபியை வெற்றி கொள்ள முடியாது என்பதனை சொல்லி இருந்தது நமது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.



