கோலி: பவரை காட்டிய பிசிசிஐ!

ஒரு போரை வழிநடத்தும் தலைவன் எப்போதுமே தனது படை வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுடன் போர் வியூகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். படை வீரர்கள் சொல்வதையும் அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறு எவன் செய்கிறானா அவனே சிறந்த தலைவன். அப்படி செய்ததால் தான் தோனி எனும் சிறந்த தலைவன் இந்திய அணிக்கு கிடைத்தார். ஆனால் விராட் கோலி சறுக்கியது இந்தப் பண்பு இல்லாததால்தான். இதனை முன்னாள் வீரர் கம்பீர் சுட்டிக்காட்டி பேசியிருப்பார்.
“தோனியின் அறைக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். வீரர்களுக்காக அவரின் அறை எப்போதும் திறந்தே இருக்கும். ஜாலியாக உரையாடலாம். கிரிக்கெட் குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடியும். ஆனால் விராட் கோலியிடம் நீங்கள் இதை எதிர்பார்க்க முடியாது. ஒரு வீரர் அவரை நெருங்குவதே கஷ்டம் தான். அதுவே கோலியிடம் இருக்கும் மிகப்பெரிய குறை” என்று கம்பீர் சொல்லியிருப்பார். கிட்டத்தட்ட இதே குணம் தான் அவருடைய கேப்டன்ஷிப்புக்கு வினையாகியுள்ளது.
உலகக்கோப்பைகளை அவர் வெல்லாவிட்டாலும், பிசிசிஐ கோலி மீது நம்பிக்கை வைத்தது. ஆனால் சக வீரர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட அஸ்வினை களமிறக்கவில்லை. பிரைம் ஃபார்மில் இருக்கும் ஒருவரை உட்கார வைத்து வேடிக்கை பார்க்க வைப்பது மிகவும் தவறு என முன்னாள் வீரர்கள் கோலியை விமர்சித்தனர். ரசிகர்களும் விட்டுவைக்கவில்லை. இதற்குப் பின்பு தான் பல அதிரடியான முடிவுகளை எடுக்க துணிந்தது பிசிசிஐ. பெயர் தெரிவிக்க விரும்பாத வீரர்களில் சில பிசிசிஐயிடம் நேரடியாகவே சென்று கோலி மீது புகார்களை அடுக்கினர்.
அதற்குப் பின்பே டி20 கேப்டன்ஷிப்பை விட்டு விலகுவதாக கோலி அறிவித்தார். அப்போதே பிசிசிஐ தரப்பில் 50 ஓவரை விட்டும் விலக அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். ஆனால் கோலிக்கு 2023 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாட ஆசை. அதனால் மறுத்துவிட்டார். ரோஹித் சர்மா டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டு, நியூஸிலாந்தை ஒய்ட்வாஷும் செய்துவிட்டார். இச்சூழலில் தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி பயணிக்கவிருக்கிறது. இதை முன்னிட்டு கோலியை பதவி விலகியதாக அறிவிக்குமாறு பிசிசிஐ 48 மணி நேரம் கெடு விதித்துள்ளது. ஆனால்  கோலியோ முற்றிலுமாக மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பிசிசிஐ 49ஆவது மணி நேரத்தில் கோலியை கேப்டன் பதவியிலிருந்து தூக்கி பவரைக் காட்டிவிட்டது. அவரை நீக்கி ரோஹித்தை ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமித்தது. இதனால் கோலி வேதனையடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பயிற்சியாளர் டிராவிட்டின் தலையீடும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கும் கோலிக்கும் அந்த பாண்டிங் இல்லை என்பதால், ரோஹித்தை டிக் அடித்திருக்கிறார். அதேபோல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மாடலை இந்தியா கையிலெடுத்திருக்கிறது. அதாவது வொய்ட் பால் கிரிக்கெட் (டி20,ஒருநாள்) அணிக்கு ஒரு கேப்டன், டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டன் என்ற மாடலுக்கேற்ப கோலியை நீக்கியுள்ளது.
Previous Story

ஓமிக்ரான்: ஒரே நாளில் டபுள் -usa

Next Story

மியன்மாரில் பொதுமக்களை இராணுவம் சித்திரவதை செய்து படுகொலை