கோட்டா ஓட்டம் ரணில்  ஆட்டம்!

-நஜீப் பின் கபூர்-

ஜனாதிபதியாக ரணில் மைத்திரி சஜீத் டலஸ் போட்டி!

தலைப்புக்குள் வருவதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பை பார்த்து விட்டுப் போவோம். கடந்த வாரம் ’22 ஒரு சதி’ என்று செய்தி சொல்லி இருந்தோம். கோட்டா ஓட்டத்துடன் அதுவும் குப்பைக்குப் போகின்றது. அதே போன்று ஞானசாரரின் ‘ஒரு நாடு ஒரு சட்டமும்’ அவுட். அதற்கு முன்னைய வாரம் ‘வருகிறது தேர்தல்’ என்று சொல்லி இருந்தோம். அதுவும் இன்று உறுதியாகி இருக்கின்றது. தற்போதய நாடாளுமன்றத்தால் சர்வதேசம் எதிர்பார்க்கின்ற நம்பிக்கை மிக்க அரசொன்றை முன்னெடுக்க முடியாது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே குறைந்தது ஆறு மாதங்களிலாவது பொதுத் தேர்தல் உறுதி என்ற நமது செய்தியும் ஓகே. இப்போது கோட்ட ரணில் ஆட்டத்தைப் பார்ப்போம்.

வழக்கமாக ஏப்ரல் முதலாம் திகதிதான் முட்டால் தினம் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை நமது நாட்டு மக்களுக்கு உணர்வுபூர்வமான முட்டல் தினமாக ஜூலை 13ம் திகதி அமைந்திருந்தது என்று குறிப்பிட்டால் அதற்கு எதிர்வாதம் இருக்கும் என்று நாம் நம்பவில்லை. குறிப்பாக ஏப்ரல் மாதம் முதலாம் திகதிகளில் குழந்தைகள் பிறப்பதைக்கூட பெற்றோர்கள் விரும்புவதில்லை. என்றாலும் சில குழந்தைகள் அப்படி பிறந்தும் விடுகின்றன. அது போலதான் கடந்த 13ம் திகதி நமக்கு அமைந்திருந்து. ஜனாதிபதி இருப்பிடத்தை பொதுமக்கள் சூழ்ந்து கொண்ட போது அவர் அங்கிருந்து தப்பியோட வேண்டி வந்தது.

அதன் பின்னர் தான் 13ம் திகதி பதவி விலகுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி அன்றைய தினம் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளிப்பதாகவும் தெரிவித்திருந்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபோவர்தன பகிரங்கமாக அறிவித்திருந்தார். ஆனால் அவர் அதற்காக எந்த எழுத்துமூல ஆவனங்களையும் சமர்ப்பிக்கவில்லை. தன்னை சந்தித்த எதிர்க் கட்சியினரிடமும் ஊடகக்காரர்களிடமும் சபாநாயகர் இதே கருத்தை சொல்லிக் கொண்டிருந்தாhர். அதன் பின்னர் புதிய ஜனாதிபதி தெரிவு பற்றி எப்படி நடந்து கொள்வது என்றும் ஏற்பாடுகள் இருந்தன.

இதற்கிடையில் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் என்று அந்தக் காட்சி ஏகமனதான தீர்மானம் போட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒரு படி மேல் ஏறி ராஜித ஜனாதிபதியும் நாங்களே பிரதமரும் நமது தரப்பில் இருந்துதான் என்று கதை சொன்னார். அதன் பின்னர் தன்னை ஜனாதிபதி கோட்டா தொடர்பு கொண்ட பேசி சில செய்திகள் சொன்னதாக பிரதமர் ரணில் அறிவிக்க பிரதமருக்கும் சபாநாயகருக்கும் ஒரு ஈகோ பிரச்சினை வந்தது. மக்களிடத்திலும் ஒரு குழப்ப நிலை.

பின்னர் சபாநாயகர் இது விடயத்தில் தனது விசனத்தைத் தெரிவிக்க, இல்லை இல்லை இதன் பின்னர் ஜனாதிபதியின் எல்லா அறிவிப்புக்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா ஊடகத்;தான். அதனைத்தான் நம்ப வேண்டும் என்று ஜனாதிபதி தரப்பல் செய்தி சொல்லப்பட்டது. இதற்கிடையில் பிபிசி சர்வதேச சேவைக்கு ஜனாதிபதி நாட்டில் இல்லை என்ற ஒரு செய்தியைச் சொன்னார் சபாநாயகர் யாப்பா. ஆனால் அந்த நேரத்தில் ஜனாதிபதி நாட்டில் இருக்கின்றார் என்று தெரிய வருந்த போது சபாநாயகர் வாய்தவறி உலரிப் போட்டேன் என்று சொரி சொன்னார்.

இந்தப் பின்னணியில் வெளிநாடொன்றுக்குத் தப்பி ஓட ஜனாதிபதி கோட்டாவும் பசிலும் முயல அதில் பல முட்டுக்கட்டைகள். அதனால் ஹிங்குரக்கொடைக்குப் போன ஜனாதிபதி அங்கிருந்து தப்பிக்க முயன்றார். காரணம் அங்கு ஒரு விமான நிலையம் இருக்கின்றது. அதனை தற்போது விமானப் படையினரே பாவித்து வருகின்றார்கள். கடைசியில் எப்படியோ 13.07.2022 நள்ளிரவு 1.20க்கு விமானப்படை விமானத்தில் அதிகாலை மூன்று மணியளவில் மாiலை சர்வதேச விமான நிலையத்தில்  போய் இறங்கினார் கோட்டா. முழு நாடுமே வெற்றிக்களிப்பில். மக்கள் தெருக்களில் இறங்கி குதுகளித்துக் கொண்டிருக்க ஜனாதிபதி குறிப்பிட்ட நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. சொன்ன படி இந்த ஆள் பதவிதுறக்க மாட்டார் என்ற பரபரப்பு நாட்டில் ஏற்பட்டிருந்தது.

அப்போதுதான் தன்னை பதில் கடமையாற்ற ஜனாதிபதி கோட்டா  நியமனம் செய்திருக்கின்றார் என்ற அதிரடியான செய்தியை தூக்கிப் போட்டார் பிரதமர் ரணில். அந்த அறிவித்தலுடன் உடனடியாக மேல் மாகணத்தில் ஊரடங்கு, நாடு முழுவதும் அவசரகால நிலை. சில மணி நேரத்தக்குள்  நாடு முழுவதும் ஊரடங்கு என்ற அறிவித்தலை பதில் கடமை பார்க்கும் ஜனாதிபதி வர்த்தமானியில் அறிவிப்புச் செய்தார். ‘அப்போதுதான் உலகிற்கு ஏப்ரல் முதலாம் நாள் முட்டால் தினம். நமக்கு ஜூலை 13ம் நாள் முட்டால் தினம்’ என்பது தெரிய வந்தது. நமது கருத்துப்படி சபாநாயகர் இந்த விடயத்தில் சில விடயங்களை இன்று வரை மூடி மறைத்துக் கொண்டிருந்திருக்கின்றார். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரத்தில் கூட அவர் நாட்டில் நெருக்கடி நிலைக்குக் கொரோனாதான் காரணம் கோட்டா அல்ல என்று சொல்லிக் கொண்டிருந்தார். இது எதனைக் குறிக்கின்றது?

இப்போது 13ம் திகதி ஜனாதிபதி கோட்டா பதவி துறக்க விட்டால் தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்திருக்கின்றார். இதில் ஒரு நாடகம்-இரகசியம் நிச்சயம் இருக்க வேண்டும் என்பது நமது கணக்கு. காரணம் இந்த சபாநாயகரும் மிகச் சிறந்த ராஜபக்ஸ விசுவாசி என்பது தெரிந்நதே. எனவேதான் நெருக்கடியை அவர் கொரோனா தலையில் கட்டி கோட்டாவைக் காப்பாற்ற முனைகின்றார் என்பது தெளிவு.

இப்போது நாம் தொடர்ச்சியாக விமர்சனம் பண்ணிக் கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டா எப்பேர்பட்ட பேர்வளி என்பது அனைவரும் உணர்ந்திருப்பார்கள். அந்த விவகாரங்கள்-ஏமாற்றங்கள் அடவடித்தனங்கள் அப்படி இருக்க, களத்தில் இதன் பின்னர் அடுத்து வரும் தினங்களில் என்ன காட்சிகள் வரலாம் என்று பார்ப்போம். எந்தவொரு நாட்டு அரசியல் யாப்பிலும் குறைபாடுகள் ஓட்டைகள் இருப்பது இயல்பானதுதான் ஆனால் தலைவர்களின்-கட்சிகளின் நலன்களை மட்டுமே மையமாக வைத்து வடிவமைக்கப் பட்டிருக்கின்ற நமது அரசியல் யாப்பில் குவியல் குவியலாக தவறுகள் ஓட்டைகள் குறைபாடுகள் இருந்ததால்தான் அது தற்போது 22வது திருத்தம் என்ற அளவில் வந்து நிற்க்கின்றது.

அப்படி உள்ள ஓட்டையில் தான் ஜனாதிபதி கோட்ட மேலும் கீழுமாக அல்லது குறுக்கும் நெடுக்குமாக புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார். அதோ போன்று தான் ஊதுகின்ற விசிலுக்கு சிறப்பாக பல்டியக்கத் தெரிந்த ரணில் தனக்கு நல்ல சகாவாக வாய்த்திருப்பதால் அந்த இருவரும் மக்களுக்கு கூத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் மீது என்னதான் மனதில் கோபங்கள் வைராக்கியங்களை மக்கள் வைத்துக் கொண்டிருந்தாலும் விரும்பியோ விரும்பாமலோ காட்சிகளை பார்த்தே ஆக வேண்டும் என்று நிலை.

அரசியலைக் கரைத்துக் கூடித்தவர்களும் மனப்பாடம் செய்து வைத்திருந்தவர்களும் பெரும் பெரும் சித்தாந்தங்கள் கேட்பாடுகள் எல்லாவற்றையும் கற்றிருந்தவர்கள் இந்த முறை ஏமாறி இருக்கின்றார்கள். ரணில், மஹிந்யாப்பா அபேவர்தன மட்டுமல்ல ஜனாதிபதி கோட்டவை பாதுகாப்பாக மாலையில் கொண்டு போய் இறக்கிய விடயங்களில் நிச்சயமாக பண மழை கொட்டித்தான் இருக்க வேண்டும். ஒரு நாள் மலேயில் ஹோட்டல் செலவு மட்டும் 45 இலட்சம் என்று அங்கிருந்து செய்திகள் வந்தன. இதுயார் காசு.?  இலங்கை அரசியல் எல்லாமே டீல்தான் இன்று கோட்டாவுக்கும் ரணிலுக்கும் திட்டிக் கொண்டிருக்கின்ற எத்தனை பேர் பணத்துக்காகவும் பதவிகளுக்காகவும் இவர்களுடன் டீல் பண்ணினார்கள் என்பது நமக்கும் தெரியும் பொது மக்களும் அதனை அறியாமலில்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் 20க்கு கைதூக்கப் பண்ணிய கதை. இப்போது வழி அனுப்பி வைத்வர்களே புனிதர்கள் என்று கதை அளக்கும் அவலம் இங்கு. இதே கோட்டாவும் ரணிலும் இன்னும் எத்தனையோ காட்சிகளை நமக்கு அரங்கேற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். தர்மம் அவர்களுக்குத் தண்டனை கொடுத்தால்தான்.! நமது நாட்டில் அரசியல் செய்பவர்களின் உண்மையான உருவங்களைத்தான் நாம இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

முன்பு அரசியல் யாப்பில் இருக்கின்ற ஓட்டைகள் பற்றி சொல்லி இருந்தோமே, அதன்படி நமது நாட்டு ஜனாதிபதி ஒருவர் இறந்தால் அல்லது பதவி துறந்தால் அதற்ககான ஏற்பாடுகள் மாற்று நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையிலோ அல்லது வெளிநாட்டில் உல்லாசம் போய் இருந்தாலோ அது எவ்வளவு காலமாக இருந்தாலும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் பற்றிய விளக்கங்கள் இந்த யாப்பில் இல்லை என்றுதான் நாம் நம்புகின்றோம். எனவே ஜனாதிபதி கோட்டா இந்த ஓட்டைககுல் புகுந்து தான் தற்போது  விளையாடிக் கொண்டிருக்கின்றார் என்று நாங்கள் நம்புகின்றோம். எனவேதான் பதில் கடமை பார்க்கும் ரணில் தற்போது கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்.

இலங்கை அரசியல் அதிகார வரிசைப்படி ஜனாதிபதி பிரதமர் சபாநாயகர் பிரதம நீதி அரசர் என்றுதான் அது அமைந்திருக்கின்றது. ஆனால் இங்கோ ஜனாதிபதி கோட்ட ரணிலைப் பதில் ஜனாதிபதியாகவே நியமனம் பண்ணி இருக்கின்றார். மக்கள் ஏற்க்கின்றார்களோ இல்லையோ அரசியல் யாப்புப் படி அவருக்குத்தான் அதிகாரம். எனவே எதிர்வரும் காலங்களில் தனி நபர்களுக்காகவும் கட்சி நலன்களுக்காகவும் அரசியல் யாப்புக்களை வடிவமைக்காமல் நாட்டு நலன்களுக்காகவும் மக்கள் நலன்களுக்காகவும் யாப்புக்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்கு இது நல்லதொரு படிப்பிணையாக அமைந்திருக்கின்றது.

சபாநாயகர் தனது இராஜினாமக் கடிதம் பற்றி சட்ட ஆலோசனைகள் நடாத்திக் கொண்டிருப்பதாகவும் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு கட்டத்தில் ஊடகங்களில் ஒப்பாறி வைத்துக் கொண்டிருந்தது தெரிந்தே. விரும்பியோ விரும்பாமலோ இன்று ரணில் பதில் ஜனாதிபதி. இவரைப் போய் சட்ட ரீதியாக நீக்கி விட்டு எப்படிப் புதிய ஜனாதிதபதி பற்றி யோசிக்க முடியும்? சட்டப்படி ஜனாதிபதி கோட்டா எப்போது வேண்டுமானாலும் நாட்டுக்கு வரலாம் வராமலும் போகலாம். யாப்புப்படி அவர்தான் இன்னும் நாட்டுக்குத் தலைவர். (தற்போது விலகல் கடிதம் வந்திருக்கின்றது) எனவே ரணிலை தூக்க வேண்டுமானால் செய்யக் கூடியது ஒன்றுதான் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்;தில் முன்வைக்கலாம்.

அதற்கு மொட்டுக் கட்சியில் இருப்பவர்களில் எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்பதுதான் கேள்வி. இன்று அந்தக் கட்சியல் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. அதில் டலஸ் அலகப்nரும தலைமையிலான அணியில் 40 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். எல்லாக் கட்சிகளிலும் டீல் அரசியல் மற்றும் பணம் புகுந்தும் விளையாட அதிக வாய்ப்பு இருக்கின்றன. இன்று எதிரணியில் இருந்து ரணிலுக்கும் கோட்டாவுக்கும் எதிராக சித்தாந்தம் பேசுகின்றவர்கள். பணத்தை வாங்கிக் கொண்டு தமது சகாக்களை மொட்டுக் கட்சிப் பக்கத்திற்கு வாக்களிக்கப் பண்ண நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந்தக் காட்சிகளை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.

இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டா 13ம் திகதி பதவி விலகுகின்றார் என்ற கணக்கில் பல இடங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதில் சுவையான ஒரு பேச்சுவார்த்தையைப் பாருங்கள். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமாக இருந்தால் மொட்டு அணி சார்பில் ஒருவர், அனேகமாக ரணில் களம் இறக்கப்பட வாய்ப்பு இருந்தது. (இன்று அவர் பதில் கடமை அது வேறு கதை) அப்படி வருமாக இருந்தால் டலஸையும் சஜித்தையும் தமது தரப்பு வேட்பாளர்களாக களமிறக்கி மூன்றோ அதற்கு மேற்பட்ட வேட்பாளார்களோ போட்டி என்று வந்தால் அன்று சபைக்கு வருகின்றவர்களில் (225ல்) 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளபை; பெறுபவர் ஜனாதிபதி.

எவருமே அந்த இலக்கை எட்டவில்லை என்ற நிலை வந்தால் டலசும், சஜித்தும் தமது இரண்டவது விருப்பு வாக்கை மாறிமாறி வழங்குவது, இதில் அதிக வாக்கை பெறுபவர் ஜனாதிபதி அடுத்தவர் பிரதமர் என்ற ஏற்பாடும் இருந்தது. இதனை திட்ட வட்டமாக நாம் அறிந்திருந்தோம். இது ரணிலைத் தோற்கடிப்பதற்கு மிகச் சிறந்த ஏற்பாடாகவும் இருந்தது. இதற்குப் புறம்பாக  பொது வேட்பாளர் என்ற ஒரு பட்டியலும் தயார் நிலையில் இருந்தது. அதில் கரு, சங்கா போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் இருந்ததாகவும் தகவல். பீல்ட் மர்ஷலும் தனது விருப்பத்ததை தெரிவித்திருக்கின்றார். இந்தப் பின்னணியில்தான் கோட்டா ரணில் அதிரடி ஆட்டத்தில் இறங்கி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அநதக் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தன்னை பதில் ஜனாதிபதி என்று அழைத்துக் கொள்ளும் ரணில் இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரம்வரை அதற்கான நியமனக் கடிதத்தை யாரிடம் காட்டவோ சத்தியப் பிரமானம் செய்யவோ இல்லை. செய்ய ஏற்பாடு இருக்கின்றது என்றும் ஒரு தகவல். ஆனால் ஊரடங்கு அவசரகால நிலை என்ற கட்டளைகளை அவர் பிறப்பித்து வருகின்றார் ஆனால் அந்தக் கட்டளைகளை எவரும் கண்டு கொண்டதாகத் தெரியவி;லலை. புதிய பிரதமர் ஒருவரைக் கூட நியமனம் செய்து தருமாறும் மனிதன் சபாநாயகரைக் கேட்டிருக்கின்றார்.

ஒரு கட்டத்தில் யதார்த்தத்தை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து ஒதுங்குமாறு படைத் தலைவர்கள் ரணிலைக் கேட்டும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை. இப்போது ஜனாதிபதி பதவி விலகல் கடிதம் கிடைத்திருக்கின்ற பின்னணியில் பிரதமருக்கோ அந்த அதிகாரம் சட்ட ரீதியாகக் கை மாறுகின்றது. ஆனால் அதனைப் போராட்டக்காரர்களோ சாதாரண பொது மக்களோ ஏற்றுக் கொள்வதாகவும் தெரியவில்லை.

ஆனால் பிரதமர் ரணில் அதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது தனக்கு பதவி  வழியாக வருகின்ற ஜனாதிபதி ஆசனத்தில் ஒரு நாளாவது அமர்ந்த விட்டுத்தான் போவேன் என்று இருக்கின்றார். அதற்கான வாய்ப்புக்கள்தான் இந்தக் கட்டுரையை எழுதும் வரை இருக்கின்றது. எனவே ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டக்காரர்கள் தனது பிரதான விக்கட் கோட்டாவை வீழ்த்தி இருக்கின்றார்கள்.

ரணில் என்பவர் கிரிக்கட்டில் அரங்கில் இறுதியில் வரும் துடுப்பாடக்காரர் போல்தான் இலங்கை அரசியலில் இருக்கின்றார். ஆனால் அவர் தன்னை ஒரு துவக்க ஆட்டக்காரன் என்றுதான் நினைக்கின்றார். இவரைத் தூக்கி வீசுவது ஒன்றும் போராடுகின்ற இளசுகளுக்கு பெரிய காரியமாக இருக்காது. 69 இலட்சம் வாக்குகளை அள்ளிக் குவித்த கோட்டாவே தப்பினேன் பிழைத்தேன் என்று தலை தெரிக்க ஓடி ஒழிக்கும் போது சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பொதுத் தேர்தலில் பெற்று, யாருக்கோ கிடைக்க வேண்டிய ஆசனத்தில் அமர்ந்துதான் இந்த ஆட்டம் போடுகின்றார்.  எனவே சில நாட்கள் அவர் தனது ஜனாதிபதிக் கனவை அடைந்த விட்டுப் போவார் போலும்.

நன்றி:17.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

GL பீரிஸ் கட்சியிலிருந்து தூக்கப்படுகின்றார்.!

Next Story

அதிகாரப் போட்டி துவக்கம்!