குர் ஆன் எரிக்கப்பு ஐ.நா. தீர்மானத்தில் இந்தியா என்ன செய்தது?

கடந்த ஆண்டு, பா.ஜ.க.-வின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான நுபுர் ஷர்மா, முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததற்கு இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (OIC) அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அவர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

நுபுர் ஷர்மா தொடர்பாக OIC ஆட்சேபனை தெரிவித்தது மட்டுமின்றி இஸ்லாமிய நாடுகளும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டன. இதனால் இந்தியாவுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலை உருவானது.

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

இராக்கின் மொசூலில் குர்ஆன் பிரதியுடன் ஆர்ப்பாட்டம் செய்த பெண்

இப்போது ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட ஓஐசியின் கண்டனத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.

இந்தியாவின் ஆதரவைப் பற்றி, தி இந்து ஆங்கில நாளிதழின் இராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், “ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு எதிரான இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (OIC) தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு ஆகிய நாடுகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன,” என எழுதியுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீனம் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் பதிவாகின. ஏழு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சீனா, இந்தியா, கியூபா, தென்னாப்பிரிக்கா, யுக்ரேன் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்தன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கோஸ்டாரிகா, மாண்டினீக்ரோ உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்காவும் இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

சிலி, மெக்சிகோ, நேபாளம், பெனின், பராகுவே போன்ற நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்த அவர்களின் பார்வைக்கு எதிரானது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன.

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

குர்ஆன் எரிப்பு சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறைகள் வெடித்தன

பாகிஸ்தானின் நோக்கம் என்ன?

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் நாட்டு தூதர் கலீல் ஹஷ்மி, யாருடைய கருத்துச் சுதந்திரத்தை எதிர்க்கும் நோக்கமும் தங்களுக்கு இல்லை என்று கூறினார்.

உலக நாடுகளின் கருத்துச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இத்தீர்மானத்தின் நோக்கம் என்றும் அரசுகளின் சிறப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையே சமநிலை இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “உண்மையில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் புனித குர்ஆனையோ அல்லது வேறு எந்த மத நூலையோ பகிரங்கமாக இழிவுபடுத்துவதைக் கண்டிக்க விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

“இந்த சம்பவத்தை எதிர்க்கும் அரசியல், சட்ட, தார்மீக தைரியம் இந்த நாடுகளுக்குள் இல்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து எதிர்பார்க்கக்கூடிய குறைந்தபட்ச விஷயம் என்னவென்றால் அது இந்த சம்பவத்தை கண்டித்திருக்க வேண்டும்.” என்றும் கூறினார்.

அதே சமயம், ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனத் தூதர் சென் ஷு, “இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்து வருகிறது,” என்று இத்தீர்மானத்தை தனது நாடு ஆதரித்ததை நியாயப்படுத்தினார். சில நாடுகளில் குர்ஆன் எரிப்பு சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து வருகின்றன என்றும், ஆனால் இந்த நாடுகள் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்ற அவர்களின் கொள்கைப்படி எதையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி மிச்செல் டெய்லர் பேசிய போது, இந்த விவகாரத்தில் தனது நாட்டின் அக்கறையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

அவர், “இந்தப் பிரச்சினையில் மேலும் விவாதம் தேவை என்று நான் நம்புகிறேன். நாம் ஒன்றாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்,” என்றார்.

கடந்த மாதம் ஸ்டாக்ஹோம் மசூதிக்கு வெளியே குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக இந்தக் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

குர்ஆனை எரிக்க ஸ்வீடன் அதிகாரிகள் இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவரை அனுமதித்ததை அடுத்து இஸ்லாமிய உலகில் பெரும் கோபம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய நாடுகள் கோரிக்கை விடுத்தன.

குர்ஆன் எரிப்பு சம்பவம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி செவ்வாய்கிழமை கூறுகையில், “இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதை கூர்ந்து கவனிக்கவேண்டும். இது வகுப்புவாத வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையை தூண்டுவதற்காக செய்யப்பட்டது. இது அரசுகளின் ஒப்புதலுடன் நடக்கிறது. இப்படி செய்பவர்கள் தங்களுக்கு எதுவும் ஆகாது என்று நினைக்கிறார்கள்,” என்றார்.

இரான், சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சர்கள் சர்தாரியின் இந்த நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் குர்ஆன் எரிப்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சவுதி அரேபியா, சவுதி உள்ளிட்ட பல நாடுகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

“இந்த தீர்மானம் உலகெங்கிலும் உள்ள மதங்கள், கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் சர்வதேச அணுகுமுறையை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், சர்வதேச சட்டங்கள் மனித விழுமியங்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதங்களையும் இது உறுதிப்படுத்துகிறது,” என்று சவுதி அரேபியா தெரிவித்தது.

இது போன்ற பிரச்னைகளைச் சரிசெய்ய பேச்சுவார்த்தை மேற்கொள்ளுதல் மற்றும் சகிப்புத்தன்மையை பேணி காப்பது தொடர்பான நடவடிக்கைகளை சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், வெறுப்பு மற்றும் தீவிரவாதத்தை பரப்பும் எந்த ஒரு முயற்சியையும் எதிர்க்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

குர்ஆன் எரிப்பு சம்பவத்தைக் கண்டித்து முஸ்லிம் பெண்கள் நடத்திய போராட்டம்

கண்டனத் தீர்மானத்தை எந்த நாடுகள் ஆதரித்தன?

இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அல்ஜீரியா, அர்ஜென்டினா, பொலிவியா, கேமரூன், கியூபா, எரிட்ரியா, காபோன், காம்பியா, ஐவரி கோஸ்ட், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மலாவி, மலேசியா, மாலத்தீவு, மொராக்கோ, கத்தார், செனகல், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, சூடான், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன.

ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், கோஸ்டாரிகா, செக் குடியரசு, பின்லாந்து, லிதுவேனியா, லக்சம்பர்க், மாண்டினீக்ரோ, ருமேனியா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன.

After Quran burnings, UN rights body calls for more action to combat religious hatred | Nation World | thesunchronicle.com

என்ன நடந்தது? பதிலுக்கு இஸ்லாமிய நாடுகள் என்ன செய்தன?

கடந்த மாதம், பக்ரீத் பண்டிகையின் போது, ​​இராக்கிய குடியேற்றவாசி ஒருவர், ஸ்டாக்ஹோம் மசூதிக்கு வெளியே குர்ஆன் பிரதியைக் கிழித்து, தீ வைத்து எரித்தார்.

இந்த சம்பவத்திற்கு வளைகுடா நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

2020 ஆம் ஆண்டில், டென்மார்க்கில் ஒரு தீவிர வலதுசாரிக் குழு குர்ஆன் பிரதியை எரித்தது.

முன்னதாக, ஸ்வீடனின் தெற்கு நகரமான மால்மோவில் குர்ஆன் எரிப்பு சம்பவம் நடந்தது.

கடந்த மாதம் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அல்-அமிர் அப்துல்லாயன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை கேட்டுக் கொண்டார்.

குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தாரின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இணை அமைச்சர் லோலா ரஷித் அல் காதர், இது முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளிடையே வெறுப்பை பரப்பி, கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல் என்று கூறினார்.

கருத்துச் சுதந்திரம் சில சமயங்களில் இதுபோன்ற கருத்தை ஏற்கச் சொல்கிறது, ஆனால் அதை ஏற்க முடியாது என்று கத்தார் கூறியது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகம் புனித குர்ஆன் அவமதிப்பு மற்றும் முஸ்லிம்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஸ்வீடன் நாட்டின் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது.

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

குர்ஆன் எரிப்பைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம்

ஆனால், இந்தத் தடையால் ஸ்வீடன் நாட்டிற்குச் சொந்தமான எந்த அமைப்புகளின் பணிகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு ஸ்வீடன் தூதரகம் இது வரை இல்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

ஆனால் ஆப்கானிஸ்தானுக்கான ஸ்வீடன் குழுவினர் அங்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்காக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இக்குழுவினர் 25 லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி செய்துகொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக ஓ.ஐ.சி.யின் கண்டனத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான ஓஐசி இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. OIC பொதுச்செயலாளர் ஹிசென் பிரஹிம் தாஹா 2022 டிசம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை விடுத்திருந்தார்.

நுபுர் ஷர்மா விவகாரத்தில் OIC-யின் அறிக்கைக்கு இந்தியா கோபத்தை வெளிப்படுத்திய போதிலும், பின்னர் அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து ஆளும் பாஜக நடவடிக்கை மேற்கொண்டது.

OIC இன் முழுப் பெயர் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு. இது 57 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் ஒன்றாக இணைந்து ஏற்படுத்திய அமைப்பாகும். இந்த அமைப்பில் சவுதி அரேபியா மற்றும் நட்பு நாடுகள் அதிக ஆதிக்கம் செலுத்துவதாக கருதப்படுகிறது.

Previous Story

யாருடா எர்டோகன்-பைடன்!

Next Story

இது இரும்புப் பெண் சிபாயா ரசீடின் கதை